விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அவதூறாக விமர்சித்து வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட இளைஞரைக் கைது செய்த போலீஸார்அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை அடுத்த லிங்கனப்பட்டியைச் சேர்ந்தவர் மாதேஷ் (25). இவர் ஒரு அரசியல் கட்சியில் இருக்கிறார். இவர் கடந்த ஏப்ரம் மாதம் வாட்ஸ் அப்பில் காணொலி ஒன்றை வெளியிட்டார். அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் அவர் சார்ந்த சமுதாயத்தினரை அவதூறாக, ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்திருந்தார்.
அந்தக் காணொலியில் திருமாவளவனை விமர்சிக்கும் மாதேஷ், தனது ஊர், கிராமம், செல்போன் அனைத்தையும் கூறி சவால் விடுக்கிறார். இதை வாட்ஸ் அப்பில் பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செய்தித் தொடர்பாளர் வெங்கடேஷ் இது குறித்து ராயக்கோட்டை காவல் நிலையத்தில் மாதேஷ் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு புகார் அளித்தார். இதையடுத்து மாதேஷ் மீது பிரிவு 153(a), 294(b), 505(2), 2 மற்றும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தான் கைது செய்யப்படாமல் இருக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மாதேஷ் மனுத் தாக்கல் செய்தார். முன் ஜாமீன் மனுவில் விசாரணையை கிருஷ்ணகிரி நீதிமன்றமே நடத்தும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாதேஷ் நேற்று சரண் அடைந்து ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, வாட்ஸ் அப்பில் மாதேஷ் வெளியிட்ட காணொலியை நீதிமன்றத்திலேயே பார்த்தார். பின்னர் மாதேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நிராகரித்து அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் மாதேஷை சேலம் சிறையில் அடைத்தனர்.