ஏறாவூர்பற்றில் நுண்கடனுக்கு தடை: ஏகமனதாக தீர்மானம்!

வட்டி விகிதம் குறித்து நிதி நிறுவனங்கள் ஒரு தீர்க்கமான முடிவை அறிவிக்கும் வரை ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவில் நுண்கடன் வழங்க முடியாது என்ற தீர்மானத்தை ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நுண்கடன் தொடர்பான விசேட கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏறாவூர்பற்று பிரதேச பகுதியில் நுண்கடன் நிதி வழங்குவது தொடர்பாக இன்று அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாளேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தை பகிஸ்கரித்த நான்கு நிறுவனங்களுக்கு பிரதேசத்தில் கடன் வழங்க அனுமதி மறுப்பு.

மத்திய வங்கியில் பதவி செய்யாத நிறுவனங்கள், மத்திய வங்கியின் சட்ட திட்டங்களை கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கும் குறிப்பாக வலிந்துதவும் நிறுவனமாக பதிவு செய்த நிறுவனங்களுக்கு கடன் வழங்க தடை.

நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற பயனாளிகள் தொடர்பான விபரம் பிரதேச செயலாளருக்கு இரண்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும்.

வீடுகளுக்கு சென்று இனி எந்த நிறுவனமும் கடன் அறவிட முடியாது.

கடன் ஒப்பந்தங்கள் குறித்த பத்திரங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும்.

வட்டி விகிதம் குறித்து நிதி நிறுவனங்கள் ஒரு தீர்க்கமான முடிவை அறிவிக்கும் வரை ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவில் கடன் வழங்க முடியாது என்ற தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியான முதலாவது நுண்கடன் வழங்கும் நிறுவனங்களை அழைத்து நடாத்தப்பட்ட கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத அமைப்புக்களுக்கு கடன் வழங்க முடியாது. வலிந்து உதவும் அமைப்புக்களாக பதிவு செய்யப்பட்ட அமைப்புக்கள் இனிமேல் கடன் வழங்க தடை, மத்திய வங்கி சட்ட திட்டங்களை மீறும் நிதி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க முடியாது போன்ற பல்வேறு நிபந்தனைகளை பிரதேச செயலாளர் விடுத்துள்ளார்.

கடன் கட்ட முடியாதவர்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்து தற்கொலைக்கு தூண்டுவது கொலைக்குற்றமாக கருதி நீதிமன்றத்தை நாட முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு ஒன்பது நிறுவனங்கள் கடன் வழங்கி உள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஒன்பது நிறுவனங்கள் ஒரு குடும்பத்திற்கு கடன் வழங்கி உள்ளதாகவும் அந்த அளவுக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் பொறுப்பற்று செயல்படுவதாகவும் கூறினார்.

குறித்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தடுத்ததாகவும் கூறினர்.

இதேநேரம் பாலியல் இஞ்சம் கோருவதான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
இருதயபுரத்தில் இவ்வாறு கடன் வழங்கி நிறுவன ஊழியர் ஒருவர் பாலியல் இலஞ்சம் கோரியதாக அவரை கடன் பெற்ற பெண்ணின் கணவர் கோடாரியால் வெட்டி விட்டு பொலீசில் சரணடைந்த சம்பவமும் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டன.

இதை விட மக்களை ஏழையாக்குதல், கடனை திணித்தல், பாலியல் இலஞ்சம் கேட்பதை தூண்டுதல், வீடுகளுக்கு சென்று கடனை அறவிடுதல், பொது இடங்களில் அனுமதி இன்றி கூட்டம் கூட்டுதல், கிராம சேவை உத்தியோகத்தர்களின் அனுமதி இன்றி கடன் வழங்குதல், வருமானத்திற்கு அதிகமாக கடன் வழங்குதல், நோக்கமற்ற கடன் குடும்பங்களை சீரழித்தல், அதிக வட்டி அறவிடுதல், ஒரு குடும்பத்திற்கு பல நிறுவனங்கள் கடன் வழங்குதல், கடன் வழங்கும் ஒப்பந்தங்கள் குறித்து மக்களுக்கு தெளிவில்லாமல் இருத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் கூட்டத்தில் கலந்து கொண்டோரால் முன்வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here