நைஜீரியாவை வீழ்த்தியது குரோஷியா!

உலகக் கிண்ண தொடரில் நேற்று டி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் குரோஷியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தியது.

ரஷ்யாவின் கலினின்கிராட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குரோஷியா 4-2-3-1 என்ற போர்மட்டிலும், நைஜீரியா 4-2-3-1 என்ற போர்மட்டிலும் களமிறங்கின. 13-வது நிமிடத்தில் குரோஷியாவின் இடது விங்கர் இவான் பெரிஸிக் இலக்கை நோக்கி அடித்த பந்து கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்று ஏமாற்றம் அளித்தது. 16-வது நிமிடத்தில் லூக்கா மோர்டிக் உதவியுடன் பந்தை பெற்ற குரோஷியாவின் ஆண்ட்ரேஜ் கிரமரிக் இலக்கை நோக்கி உதைத்த போது பந்து கோல்கம்பத்துக்கு இடது புறம் விலகிச் சென்றது.

21-வது நிமிடத்தில் நைஜீரியாவின் இகால்கோவின் கோல் அடிக்கும் முயற்சிக்கும், அடுத்த நிமிடத்தில் ஓகெனெகாரோ ஈட்டோவின் முயற்சிக்கும் பலன் இல்லாமல் போனது. 32-வது நிமிடத்தில் கார்னர் கிக்கில் இருந்து குரோஷியாவின் லூக்கா மோர்டிக் உதைத்த பந்தை சக அணியைச் சேர்ந்த மரியோ மான்ட்ஸூகிக் தலையால் முட்டினார். அப்போது அருகில் நின்ற நைஜீரிய நடுகள வீரரான ஓகெனெகாரோ ஈட்டோ காலில் பட்டு கோல் வலைக்குள் சென்றது. இதனால் தனது அணிக்கு எதிராக தானே கோல் அடித்தவரானார் ஓகெனெகாரோ ஈட்டோ.

ஓகெனெகாரோ ஈட்டோவின் சேம் சைட் கோலால் குரோஷியா 1-0 என முன்னிலை பெற்றது. 34-வது நிமிடத்தில் நைஜீரியாவின் இகாலோ அடித்த பந்து பொக்ஸின் மையப்பகுதிக்குள் இடைமறிக்கப்பட்டது. 39-வது நிமிடத்தில் குரோஷியாவின் ஆண்ட்ரேஜ் கிரமரிக் பாக்ஸின் மையப்பகுதியில் வைத்து தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்துக்கு மேலாக சென்று ஏமாற்றம் அளித்தது. முதல் பாதியின் முடிவில் குரோஷியா 1-0 என முன்னிலை வகித்தது. 47-வது நிமிடத்தில் பொக்ஸின் வலது புறத்தில் 6 அடி தூரத்தில் நைஜீரியாவின் லியோன் பாலோகன் அடித்த பந்து இடைமறிக்கப்பட்டது.

71-வது நிமிடத்தில் பொக்ஸ் பகுதிக்குள் வைத்து குரோஷியா வீரர் மரியோ மான்ட்ஸூகிக்கை, நைஜீரியா வீரர் வில்லியம் ரூஸ்ட் கீழே தள்ளினார்.

இதனால் குரோஷியாவுக்கு பெனால்டி கிக் கிடைத்தது. இதை பயன்படுத்தி லூக்கா மோர்டிக் கோல் அடிக்க குரோஷியா 2-0 என முன்னிலை பெற்றது. இதன் பின்னர் கடைசி வரை போராடியும் நைஜீரிய அணியால் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் குரோஷியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

குரோஷியா தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 21-ம் திகதி அர்ஜென்டினாவை சந்திக்கிறது. நைஜீரியா 22-ம் திகதி ஐஸ்லாந்தை எதிர்கொள்கிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here