விக்னேஸ்வரன்- செல்வம் அடைக்கலநாதன் இரகசிய பேச்சு: மாவையை ஆதரிக்க முடியாதென ரெலோ தலைமைக்குழு தீர்மானம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த முதமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவை ஏற்க முடியாது. அவர் வெற்றி வேட்பாளர் அல்ல. க.வி.விக்னேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக்குவது என ரெலோ தலைமைக்குழு நேற்று தடாலடியாக முடிவொன்றை நோக்கி நகர்ந்துள்ளது. உத்தியோகபூர்வமாக இந்த முடிவை கட்சி அறிவிக்காதபோதும், அப்படியான முடிவை நோக்கி நகர்ந்துள்ளதை தமிழ்பக்கம் உறுதிசெய்துள்ளது.

ரெலோ அமைப்பின் தலைமைக் குழுவின் கூட்டம் நேற்றிரவு வவுனியாவில் நடைபெற்றது. இதன்போதே இந்த தடாலடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விடயம் கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பை விஸ்தரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. நடப்பு தேர்தல் முறையில் மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து ஆட்சியமைக்கும் விதமாக வெற்றியடைவதெனில்,  கூட்டமைப்பு பரந்துபட்டளவில் விஸ்தரிக்கப்பட வேண்டும், முதலமைச்சரும் அதில் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை மீண்டும் களமிறக்க வேண்டுமென ஆரம்பத்திலிருந்தே பலரும் வலியுறுத்தினர்.

இதேவேளை இந்த சந்திப்பு ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில், நோக்கமொன்றை அடிப்படையாக கொண்டு ஏற்படுத்தப்பட்டது என்பதை தமிழ்பக்கம் அறிந்து வைத்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக செல்வம் அடைக்கலநாதன் யாழ்ப்பாணத்திற்கு வந்து முதலமைச்சருடன் இது தொடர்பான நீண்ட கலந்துரையாடலை நடத்தியிருந்தார். ஏற்கனவே மூன்று நாட்களின் முன் வெளியான தமிழ் பக்க கட்டுரையொன்றில் “நல்ல நோக்கத்திற்காக சில விடயங்களை தவிர்த்து விடுகிறோம்“ என குறிப்பிட்டது இதைத்தான்!

வடக்கு முதலமைச்சராக மீண்டும் விக்னேஸ்வரனை களமிறக்குவது, கஜேந்திரகுமார் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரையும் இணைத்து பரந்துபட்ட கூட்டணியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை மாற்றுவது என்ற நோக்கத்தின் அடிப்படையில் ரெலோ கடந்த ஒரு மாதமாக தீவிர பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 9 அல்லது 10ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வந்த செல்வம் அடைக்கலநாதன், முதலமைச்சரை சந்தித்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் மீண்டும் போட்டியிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதிலுள்ள நடைமுறை சிக்கல்களை முதலமைச்சர் குறிப்பிட்டார். தன்னுடன் சுயாதீனமான அணியொன்று இணைந்துள்ளது, அவர்களை நடுத்தெருவில் கைவிட்டுவிட்டு வர முடியாது, அந்த அணிக்கு அப்பால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகளும் இணைந்துள்ளன, அவர்களையும் கைவிட முடியாதென கூறினார்.

முதலமைச்சருடன் யார் எல்லாம் வருகிறார்களோ, அவர்கள் யாவரையும் உள்ளீர்த்து பரந்துபட்ட கூட்டணியை அமைப்போம் என அப்போது செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அந்த சந்திப்பில் இறுதி முடிவெதுவும் எட்டப்படவில்லை.

இந்தநிலையில் நேற்றைய ரெலோவின் கூட்டம் நடைபெற்றது.

வடக்கு முதலமைச்சராக மாவை போட்டியிட வேண்டும், விக்னேஸ்வரனை இணைக்ககூடாது என சிறிகாந்தா உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே கருத்து தெரிவித்தார்கள். எனினும், மற்றையவர்கள் இதை நிராகரித்தனர். மாவை வெற்றி வேட்பாளர் அல்ல, வயதானவர், செயற்றிறன் குறைந்தவர் என பல காரணங்களை அடுக்கினார்கள்.

கூட்டமைப்பு இனி தனித்து நின்று தேர்தலை சந்தித்து, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது சிரமமென இதன்போது பலரும் கூறினார்கள். அந்த அடிப்படையிலாவது, விக்னேஸ்வரனை இணைக்க வேண்டுமென எதிர்ப்பாளர்களிடம் பலரும் வலியுறுத்தினர்.

மாவையை மாகாணசபை கனவை கைவிட்டு, தேசிய அரசியலில் கவனம் செலுத்துவதென கேட்டுக்கொள்ளலாமென சிலர் அபிப்பிராயம் தெரிவித்தனர்.

விக்னேஸ்வரனை இணைத்துக்கொள்வதால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியனவும் கூட்டமைப்பிற்குள் உள்ளீர்க்கப்படலாம், அப்படியான கூட்டணிதான் தேர்தலில் வெற்றியடையும் கூட்டணியென பலரும் அபிப்பிராயம் தெரிவித்தனர்.

மொத்தத்தில் நேற்றைய கூட்டத்தில், முதலமைச்சராக விக்னேஸ்வரனையே ஆதரிக்கும் முடிவை உத்தியோகபூர்வமாக எடுத்திருக்காவிட்டாலும், அதை நோக்கிய திசையில் கணிசமான அளவிற்கு முன்சென்றுள்ளதை அவதானிக்க முடிந்தது.

இந்த கூட்டத்தில் தேசியப்பட்டியல் விவகாரமும் ஆராயப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் த.தே.கூவிற்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்று பங்காளிகளிற்கு வழங்குவதாக இருந்தது. பின்னர், சொல்லாமல் கொள்ளாமல் தமிழரசுக்கட்சி அதை சுருட்டிக் கொண்டது. இதற்கு எதிராக ரெலோ போர்க்கொடி தூக்க, இரண்டரை வருடத்தின் பின்னர் அதை வழங்கலாமென ரெலோவிற்கு வாக்களிக்கப்பட்டது. ஆனால் இரண்டரை வருடம் கழித்தும் அது பற்றி தமிழரசுக்கட்சி வாய் திறக்கவில்லை.

தமக்குரிய தேசியப்பட்டியல் ஆசனத்தை வலியுறுத்துவதென்றும், அடுத்த பாராளுமன்ற அமர்வில் சம்பந்தன், மாவையுடன் இதைப்பற்றி பேசுவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் 10வது தேசிய மாநாட்டை ஓகஸ்டில் நடத்துவதென்றும், ஜூலை 07இல் கட்சியின் பொதுச்சபை கூட்டத்தை நடத்துவதென்றும், வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தலை யாழில் செய்வதென்றும் முடிவாகியுள்ளது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here