காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் தரிசனம் செய்த பாடகர் மனோ நெகிழ்ச்சி

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பாடகர் மனோ, ‘எல்லா கடவுளையும் ஒரே ரூபமாகத்தான் பார்க்கிறேன்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பிரபல பாடகர் மனோ சமீபத்தில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்றார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், உற்சவர் சுவாமி முன்பு நின்று, ‘அதிவோ அல்லதிவோ ஸ்ரீஹரிவாசமு’ என்று தொடங்கும் அன்னமாச்சாரியார் கீர்த்தனையைப் பாடி, ‘ஏடுகொண்டலவாடா வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா’ என்று கைகூப்பித் தொழுதார்.

இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களிலும் பரவியது. இஸ்லாமியரான மனோ (இயற்பெயர் நாகூர் பாபு), ரமலான் மாதத்தில் இந்துக் கோயிலுக்குச் செல்வதா என்று சிலர் கருத்து தெரிவித்தனர். இதுபற்றி கேட்டபோது, மனோ கூறியதாவது:

நான் ஒரு கலைஞன், பாடகன். எனக்கு அனைத்து கடவுளுமே சோறு போடுகிறார்கள். கிறிஸ்தவ, முஸ்லிம், இந்து பாடல்களை ஏராளமாகப் பாடியிருக்கேன். பிரபல தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேனும் அனைத்து கடவுளையும் கும்பிடுவார். எத்தனையோ இந்துக்கள், கிறிஸ்தவர்கள் அஜ்மீர் தர்காவுக்குப் போகிறார்கள். சென்னையில் வெள்ளம் வந்தபோது, எத்தனையோ சர்ச்களில் பிராமணர்கள் பொங்கலும், புளியோதரையும் செய்து கொடுத்தார்கள். இதெல்லாமே மனிதநேயம்தான்.

ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போவேன். வெள்ளிக்கிழமை நமாஸ் பண்ணுவேன். எல்லா கடவுளையும் ஒரே ரூபமாகத்தான் நினைக்கிறேன். அவர்தான் அல்லா. அவர்தான் பெருமாள், அவர்தான் ஜீசஸ். ரம்ஜான் பெருநாளன்று காஞ்சி கோயிலுக்கு போனதாக கூறுகிறார்கள். அது தவறு. கடந்த 9-ம் தேதி குடும்பத்துடன் அங்கு சென்றேன்.

இவ்வாறு மனோ கூறினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here