மட்டக்களப்பில் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி!


வாழைச்சேனை கருணைபுரம் பகுதியில் நேற்று (13) இரவு ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கணவர் உயிரிழந்துள்ளதுடன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வாழைச்சேனை, கருணைபுரம் 3ம் குறுக்கு வீதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கூலித் தொழிலாளி மாரித்து சுரேஸ்குமார் (36) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவரின் மகனான சுரேஸ்குமார் கிதுர்ஷன் (16) என்பவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாரித்து சுரேஸ்குமார் மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பிள்ளைகளை பார்ப்பதற்கும், பிள்ளைகளுக்கு பண உதவி வழங்குவதற்கும் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் நேற்று வீட்டுக்கு வந்த போது ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக ஏற்பட்ட சண்டையில் மனைவி மற்றும் மகன் சேர்ந்து இவரை வெட்டி கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் உடல் வெட்டப்பட்டு குறித்த நபரின் வீட்டிற்கு முன்பாகவுள்ள வீதியில் வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதையடுத்து பொதுமக்கள் 1990 இலவச சேவை அம்யூலன்ஸ் மூலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த நபரை நேற்று இரவு 8.20 மணிக்கு வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போது மரணமடைந்த நிலையில் காணப்பட்டதுடன், குறித்த சம்பவத்தில் மரணமடைந்தவரின் மனைவியான கனகரெட்ணம் கண்மணி (35) என்பவரை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here