கிளிநொச்சியில் தேர்தல் தினத்தில் வைத்தியசேவைகள் முடங்கும் ஆபத்து


கிளிநொச்சி மாவட்டத்தி்ல் தேர்தல் தினத்தில் வைத்தியசேவைகள் முடங்கும் ஆபத்துள்ளதாக சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியத்துறையில் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தபால் மூல வாக்களிப்பு இன்மையால் வாக்களிப்பதற்காக வெளிமாட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் உள்ளிட்ட உத்த்தியோகத்தர்கள் மூன்று நாள் விடுமுறை பெற்றுச் செல்கின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் சேவைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமாரவேல் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது,

கிளிநொச்சி மாவட்டத்தில் 89 வைத்தியர்களில் 9 பேர் மட்டுமே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஏனையவர்கள் வெளிமாவட்டத்தைச் சார்ந்தவர்கள். அவ்வாறே மருந்தாளர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலர் காணப்படுகின்றனர். எனவே இவர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்களின் பிரதேசங்களுக்கு செல்வதற்காக அதிகபட்சமாக மூன்று நாள் விடுமுறையில் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் போது அந்தந்த வைத்தியசாலைகளில் மக்களுக்கான சேவையினை வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் கிளிநொச்சியில் உருத்திரபுரம், தர்மபுரம், பூநகரி, ஜெயபுரம் வைத்தியசாலைகளில் உள்ள மருத்துர்கள், மருந்தாளர்கள் விடுமுறையில் செல்வதனால் அந்த வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை மேற்கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இவ்வாறே கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பலர் வாக்களிப்பதற்காக விடுமுறைப் பெற்று செல்ல இருப்பதனால் அங்கும் வழமையான சேவையினை வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என வைத்தியசாலை நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அரவிந்தனிடம் வினவிய போது,

“தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்ற உத்தியோகத்தர்களுக்கே தபால் மூல வாக்களிப்பு உண்டு .இது சட்டம். வைத்தியத்துறைகளில் உள்ளவர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபட முடியாத உத்தியோகத்தர்கள். எனவே அவர்களுக்கு தபால் மூல வாக்களிப்பு உரிமை இல்லை” எனத் தெரிவித்த அவர் “இவ்விடயம் தொடர்பில் எமது கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது இருப்பினும் இந்த விடயம் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய விடயம்” எனவும் குறிப்பிட்டார்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் “தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள், நாடு முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முப்படையினர், காவல்துறையினர், மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவினர் ஆகியோர் தபால் மூல வாக்களிப்பிற்குத் தகுதியாவர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வேளை கடந்த காலப்பகுதிகளில் இடம்பெற்ற எந்த ஒரு தேர்தலின்போதும் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here