பொலிவியாவில் ஜனாதிபதியாக தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட பெண் எம்.பி!


பொலிவியாவில் நீடிக்கும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே பெண் எம்.பி ஒருவர் தன்னை தானே இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டார்.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் தொடர்ச்சியான நெருக்கடி காரணமாக ஜனாதிபதி இவோ மோரலஸ் தனது பதவியை இராஜினாமா செய்தார். இராணுவம் அவரை கைது செய்ய முயற்சிப்பதாக தகவல்கள் பரவின. இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேறி மெக்சிகோவில் தஞ்சம் அடைந்தார். எனினும் பொலிவியாவில் தொடர்ந்து அரசியல் குழப்பம் மற்றும் அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.

இந்த நிலையில் பொலிவியா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், பெண் எம்.பியுமான ஜீனைன் அனெஸ் நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக தன்னை தானே அறிவித்துக் கொண்டார். நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அவசர கூட்டத்தில் அவர் தனது முடிவை அறிவித்தார்.

ஆனால் இவோ மோரலசின் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் ஜீனைன் அனெசை இடைக்கால ஜனாதிபதியாக அங்கீகரிக்க போதிய உறுப்பினர்கள் இல்லை.

ஆனால், அரசியலமைப்பு சட்டப்படி, அதிகார வரிசையில் ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக தான் இருப்பதால் தன்னால் மட்டுமே இடைக்கால ஜனாதிபதியாக இருக்க முடியும் என ஜீனைன் அனெஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் நாட்டில் தேர்தல் நடக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஜீனைன் அனெஸ் தன்னை தானே இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டதற்கு முன்னாள் ஜனாதிபதி இவோ மோரலஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய சதி என்றும், ஜீனைன் அனெஸ் ஆட்சிக்கவிழ்ப்பில் ஆர்வம் கொண்டவர் என்றும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே தலைநகர் லா பாஸ் மற்றும் சாண்டா குரூஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இவோ மோரலசின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here