அடாத்தாக பிடிக்கப்பட்ட புலிகளின் மூத்த தளபதியின் வீடு: வாங்கிக் கொடுத்துவிட்டு வாய்மூடியிருக்கும் சாட்சி பசுபதிப்பிள்ளை!

விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினராக இருந்த தினேஷ் மாஸ்டரின் கிளிநொச்சி வீட்டை, நபர் ஒருவர் அத்துமீறி அடாத்தாக பிடித்து வைத்துள்ளார். அந்த வீட்டில் வாழ்ந்து வந்த தினேஷ் மாஸ்டரின் வயோதிப மாமியாரை குறித்த நபர் வீட்டிலிருந்து விரட்டியுள்ளார்.

இந்த வீட்டை தினேஷ் மாஸ்டரிற்காக அப்போது இந்த கொடுக்கல் வாங்கலை கவனித்தவர் தற்போதைய வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை. இப்போது அது குறித்து அவர் வாய் திறக்காமலிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள்- அரசு சமாதான உடன்படிக்கை காலத்தில் கிளிநொச்சி கணேசபுரத்தில், புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் இருந்த காணியொன்றை தினேஷ் மாஸ்டர் விலைகொடுத்து வாங்கியிருந்தார். மூத்த போராளியான தினேஷ் மாஸ்டர், விடுதலைப்புலிகளின் இராணுவ பயிற்சிகளிற்கு பொறுப்பாக இருந்தவர். மூத்த பெண் போராளியான ஜானகியை திருமணம் முடித்திருந்தார்.

குறித்த காணியை, அப்போது அங்கு கிராமசேவகராக இருந்த சு.பசுபதிப்பிள்ளையின் மூலமே விலைகொடுத்து வாங்கியிருந்தார். நட்பின் அடிப்படையில் இது நடந்தது.

காரைநகரை சேர்ந்த மக்கேந்திரராசா என்பவரிடமிருந்து முறைப்படி பணம் கொடுத்து அந்த காணி வாங்கப்பட்டது. மக்கேந்திரராசா முன்னர் இலங்கை பொலிஸில் பணியிலிருந்தவர்.

பின்னர் அந்த காணியில் தினேஷ் மாஸ்டர் குடும்பம் வீடு கட்டியது.

இறுதியுத்தத்தில் தினேஷ் மாஸ்டர் மரணமடைந்து விட்டார். இதனால் அவரது வயோதிப மாமியார் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் மக்கேந்திரராசா, வீட்டை அடாத்தாக கைப்பற்றியுள்ளார். விடுதலைப்புலிகள் தன்னிடமிருந்து அந்த வீட்டை பறித்தெடுத்ததாக தற்போது கூறி வருகிறார். எனினும், அந்த வீட்டை விலைகொடுத்து வாங்கிய போது, சாட்சியாக இருந்த தற்போதைய வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை இந்த விடயத்தை பற்றி இதுவரை வாய் திறந்ததேயில்லை.

அண்மையில் ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணியை முதலமைச்சர் தொழில் முனைவோருக்கு வழங்கியபோது, முன்னாள் போராளிகள் வீடில்லாமல் இருக்கிறார்கள் என கடும் எதிர்ப்பை வெளியிட்டவர் சு.பசுபதிப்பிள்ளை. எனினும், தான் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து வாய் திறக்காமல் இருக்கிறார்.

அநீதி இழைக்கப்பட்ட தினேஸ் மாஸ்ரரின் குடும்பம் தொடர்பில் இதுவரை பசுபதிப்பிள்ளை வாய் திறக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here