சென்னை ஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்


சென்னை ஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. தற்கொலைக்கு உதவி பேராசிரியர்களே காரணம் என மாணவி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று விடுதி அறையில் பாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதே மாணவியின் தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாணவியின் உடைமைகளும் ஒப்படைக்கப்பட்டன.

இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர், மாணவியின் செல்போனை ஆராய்ந்த போது அதில், தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர் தான் காரணம் என அவரது செல்போனில் ஆங்கிலத்தில் பதிந்து வைத்திருந்தார்.

மேலும் இரண்டு பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்த மாணவி, அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் அந்தப் பதிவில் கூறியிருந்தார். அந்த செல்போன் பதிவுகள் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு முந்தைய நாளான நவம்பர் 8ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here