1,500 ஆண்டுகள் பழைமையான நடுகற்கள்!


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தேசூரில் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடுகற்கள் கண்டறியப்பட்டன.

வந்தவாசியை அடுத்த தேசூரில் கோட்டைப் பகுதி இருப்பதாகவும், அதுகுறித்த தகவல்களைச் சேகரிக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ஜானகி கூறியதன் பேரிலும், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், முனைவர் சுதாகர் ஆகியோர் அண்மையில் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்தப் பகுதியில் பாழடைந்த நிலையில் மசூதி போன்ற ஒரு கட்டடமும், அதனருகில் 5 நடுகற்களும் இருப்பது கண்டறியப்பட்டன.

இதுகுறித்து ச.பாலமுருகன் கூறியதாவது:

கண்டறியப்பட்ட 5 நடுகற்களில் 2 நடுகற்களில் மட்டும் 4 அல்லது 5ம் நூற்றாண்டு எழுத்தமைதியில் 2 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு நடுகல்லில் சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக்கிழார் என்றும், மற்றொரு நடுகல்லில் சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக்கிழார் மகன் சீலன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

வீரனின் கையில் கத்தியும் கேடயமும் வைத்திருப்பது போன்ற அமைப்பில் சுமார் 4 அடி உயரத்தில் இந்த நடுகற்கள் உள்ளன. இதனருகில் காலத்தால் பிற்பட்ட மற்ற 3 நடுகற்களும் உள்ளன.

சீயமங்கலத்தில் பாணரைசர் ஆண்ட காலத்தில் கொற்றம்பாக்கிழார் அந்த ஊரை எறிந்திருக்க (தாக்கியிருக்க) வேண்டும்.

இவர்களுக்கிடையே மாடுபிடி மோதலோ அல்லது ஊர்களுக்கிடையேயான மோதலோ ஏற்பட்டிருக்கலாம். அவ்வாறு ஏற்பட்ட மோதலில் மேற்குறிப்பட்ட கொற்றம்பாக்கிழாரும், அவருடை மகன் சீலனும் இறந்துவிட, அவர்களது நினைவாக இந்த நடுகற்களை வைத்துள்ளனர்.

ஏற்கெனவே இந்தப் பகுதியில் சீயமங்கலத்து பாணரைசர் என்ற வாசகத்துடன் ஒரு நடுகல்லை தாமரைக்கண்ணன் என்பவர் கண்டுபிடித்திருந்தார்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த நடுகற்களிலும் சீயமங்கலம் என வருவதால், இந்தப் பகுதி, பாணரைசர்கள் ஆண்ட பாணாடாக இருக்க வேண்டும். இது வடமொழியில் பாணராட்டிரம் என்று அழைக்கப்பட்டது. இந்த நாடு கடலூர் வரை பரவியிருந்தது என்று கருதலாம்.

மேலும், பாணர்களின் தலைவர்களில் ஒருவராக இந்த நடுகல்லில் குறிப்பிட்டுள்ள கொற்றம்பாக்கிழார் இருந்திருக்கலாம். கொற்றம்ப என்பது தற்போதைய தேசூராக இருக்கலாம். தேசு என்பதற்கு வெற்றி என்றும் பொருள் கொள்ளலாம்.

சீயமங்கலம் என்பது தேசூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம். இந்தக் கிராமத்தில் பல்லவர் கால குடைவரை கோயில் உள்ளது. தமிழகத்தில் கிடைத்த நடுகற்களிலேயே தந்தை, மகனுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் தேசூரில் கிடைத்த நடுகற்களே ஆகும்.

இந்த இரு நடுகற்களும் தொண்டை மண்டலத்தில் கிடைத்த, காலத்தால் முற்பட்ட எழுத்துடைய நடுகற்கள் என்ற சிறப்பைப் பெறுகின்றன. இந்த வரலாற்று தகவல்களை வரலாற்று அறிஞர் முனைவர் அர.பூங்குன்றனிடம் நாங்கள் கேட்டறிந்தோம்.
ஆய்வின்போது, தேசூர் வருவாய் ஆய்வாளர் ஏ.வெங்கடேஷ், கிராம நிர்வாக அலுவலர் பாபு, கிராம உதவியாளர்கள் அதியமான், ராஜசேகர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here