கிளிநொச்சி இளம்பெண் கொலையின் திடுக்கிடும் பின்னணி: கள்ளக்காதலிற்கு இடையூறு… 10 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தில் கணவனே செய்வித்தார்!


கிளிநொச்சியில் நேற்று இளம் குடும்பப் பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த பெண்ணின் கணவனே, 10 இலட்சம் ரூபா பேரம் பேசி, கூலிப்படை மூலம் கொலையை புரிந்துள்ளார்.

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் நேற்று காலை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. அன்ரன் ஜெராட் மேரி அகிலா (31) என்ற பெண்ணே கொல்லப்பட்டிருந்தார்.

அவருக்கு 9 மாதத்தில் கைக்குழந்தையொன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது கணவன் வாடகை வாகனம் வைத்திருப்பவர். கொலை நடந்த சமயத்திலும் அவர் வீட்டில் இருந்திருக்கவில்லை.

வீட்டுக்குள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், இளம் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், திருட்டு நோக்கத்துடன் இந்த கொலை நடக்கவில்லையென்பது புலனானது. வீட்டிலிருந்த பொருட்கள் திருடப்பட்டிருக்கவில்லை.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், தொலைபேசி தரவுகளையும் சோதனையிட்டு பல்வேறு வழிகளில் மேற்கொண்ட விசாரணையின் பின்னர், உயிரிழந்த பெண்ணின் கணவன் மற்றும் கணவனின் மூத்த சகோதரியின் கணவன் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அங்குள்ள தமிழ்பக்க செய்தியாளர் பொலிஸ் வட்டாரங்களிலிருந்து திட்டிய தகவலின்படி,

கணவனே கூலிப்படையை அமர்த்தி தனது மனைவியை கொன்றதும், சகோதரியின் கணவன் கூலிப்படையாக செயற்பட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த கொலையை நடத்தி முடிக்க 10 இலட்சம் ரூபா ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் கணவனிற்கு ஏற்பட்ட கள்ளக்காதலே இந்த கொலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கள்ளக்காதலிற்கு மனைவி இடையூறாக அமைந்ததால், தனது அத்தானையே கூலிப்படையாக வைத்து மனைவியை போட்டுத்தள்ளியதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

கைதான இருவரிடமும் விசாரணை தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here