தேசியப்பட்டியலிற்காக மூலையில் குந்தியிருந்த 56 வருட உறுப்பினர்: தமிழரசுக்கட்சி மத்தியகுழு கூட்ட சுவாரஸ்யம்!

தமிழரசு கட்சி மத்தியகுழு கூட்டம் 16/06/2018 முல்லைத்தீவு Ocean Park Resort நட்சத்திர விடுதியில் இடம்பெற்றது. கூட்டம் தொடர்பாக தகவல்களை நேற்றிரவு வெளியிட்டிருந்தோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பாக அங்கு எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக தகவலொன்றையும் இப்பொழுது வெளியிடுகிறோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனத்தை குறிவைத்திருந்தவர்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர். அதில் முதன்மையாவர் குலநாயகம்.

வழமையாகவே கூட்டறிக்கை வாசிக்கும், கூட்ட குறிப்பு எடுக்கும் நிர்வாக செயலாளர் குலநாயகம் நேற்றைய கூட்டத்தில் ஒதுக்குப்புறமான மூலையில் இருந்து கூட்டம் முடியும் தறுவாயில் எழுந்து நின்று, “தேசியபட்டியல் இரண்டரை வருடத்தால் மாற்றி அமைப்பது தொடர்பாகவும், கட்சி முன்னேற்றுவதற்கான தடைகள் பற்றியும் தான் எழுதிய கடிதங்களுக்கு எந்த பதிலும் தரப்படவில்லை. பொதுச்செயலாளர் துரைராச்சிங்கத்திடம் கதைத்தேன். எதுவும் பதில் இல்லை. நான் தமிழரசு கட்சிக்காக நீண்டகாலம் பணியாற்ற வில்லை. 56 வருடங்கள் மட்டுமே பணிபுரிந்தேன். ஆனால் தற்போது தமிழரசு கட்சி என்ன செய்கீறீர்கள்? நான் ஒரு மூலையில் குந்தி இருக்கிறேன். யாராவது ஏன் இப்படி இருக்குறீர்கள் என கேட்டீர்களா? உங்கள் நடவடிக்கை சரியா? தேசியபட்டியல் நிலைமை என்ன? இதுதானா கட்சியின் யோக்கியம்?“ என காரசாரமாக குலநாயகம் கேள்வியெழுப்பினார்.

தமிழ்தேசியகூட்டமைப்பு தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள திருமலை துரைரெட்ணசிங்கம், முல்லைத்தீவு சாந்தி இருவரையும் இரண்டரை வருடத்தால் நீக்கி அந்த இடங்களுக்கு வேறு இருவரை நியமிப்பதாக கடந்த 2015 இல் இரகசியமாக கூட்டமைப்பு காதோடு காதாக நிர்வாக செயலாளர் குலநாயகத்திடம் ஏற்கனவே கூறியிருந்தனர். சாந்தியின் இடத்திற்கு குலநாயகத்தை நியமிக்க முடியும் என மாவை சேனாதிராசாவும், சம்மந்தனும், சுமந்திரனும், துரைராசசிங்கமும் குலநாயகத்துக்கு வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

இதேபோல் திருமலை துரைரெட்ணசிங்கம் இடத்திற்கு கல்முனை TELO கென்றி மகேந்திரனை நியமிக்கலாம் என கூறப்பட்டதாக ஒரு தகவலிருந்தது. இதை அறிந்த செல்வம் அடைக்கலநாதனை பிடித்து கோவிந்தன் கருணாகரம் (ஜனா)அதை தடுக்க முயற்சித்தார். கென்றி மகேந்திரனுக்கு வழங்க வேண்டாம், அந்த mp பதவியை பட்டிருப்பு தொகுதிக்கு தமக்கு தரவேண்டும் என அடிக்கடி வேண்டுகோள் கொடுத்து வந்தார்.

இதேவேளை, தேசியப்பட்டியல் நியமனத்தை வலியுறுத்தி, கடந்த சில மாதங்களிற்குள் குலநாயகம் ஆறு கடிதங்களை எழுதியுள்ளார்.

இந்த நிலையில் தமிழரசு கட்சி அரசியல் உயர்மட்ட குழு- ஒன்பது பேர்- 15/06/2018 இல் முல்லைத்தீவுல் கூடி இந்த தேசியபட்டியல் பிரச்சனை பற்றி ஆராய்ந்தனர்.

அதில் தற்பொது உள்ள சாந்தி, துரைரெட்ணசிங்கம் ஆகிய இருவரையும் இப்போது நீக்கினால் பெரிய பிரச்சனை வரும் என சீ.வீ.கே.சிவஞானம் சுட்டிகாட்டினார்.

செல்வராசா கூறும்போது -“பட்டிருப்பு தொகுதிக்கு mp இல்லை. அப்படி வழங்குவதானால் அது தமிழரசு கட்சிக்கே வழங்க வேண்டும். ரெலோவுக்கு வழங்க எந்த நியாயமும் இல்லை. கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தமிழரசுகட்சியை ஓரம்கட்டி ரெலோவை வளர்க்க தமிழரசு கட்சி துணை போய்விட்டது என்ற விமர்சனம் உள்ளது. எனவே பட்டிருப்பு தொகுதிக்கு அப்படி தேசிய பட்டியல் உறுப்பினர் வழங்க வேண்டுமானால் தமிழரசு கட்சிக்கு வழங்குங்கள்“ என்றார்.

இதை கேட்டுக்கொண்டிருந்த சம்மந்தன் – “தற்போதைக்கு தேசியபட்டியல் உறுப்பினர் பதவிகளை மாற்ற வேண்டிய தேவை இல்லை. தொடர்ந்தும் சாந்தியும், துரைரெட்ணசிங்கமும் பதவியிலிருக்கட்டும். திருகோணமலையில் எனது வேலைகளை துரைரெட்ணசிங்கமே செய்கிறார். அவரே தொடர்த்தும் இயங்கட்டும். செல்வராசா கூறிய விடயம் உண்மைதான். ஏற்கனவே உள்ளூராட்சிசபை தேர்தலில் நாம் அவசரமாக பட்டிருப்பு தொகுதியில் எடுத்த முடிவால் என்னை பலர் கேள்வி கேட்கின்றனர். அதுபோல் முல்லைத்தீவில் சாந்தி தமது பதவியை பக்குவமாக செய்கிறார். ஒரு பெண் mpஐ விலக்கி ஒரு ஆண் உறுப்பினரை நியமிப்பது தற்போதைக்கு வேண்டாம்“ என்றார் சம்பந்தன்.

அரசியல்சபை குழுவில் எடுக்கப்பட்ட இந்த முடிவை, தமிழரசு கட்சி மத்திய குழுக்கூட்டத்தில் சொல்லவில்லை. காரணம், சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் மத்தியகுழுவில் உள்ளனர். அங்கு இதை அறிவித்தால் ரகளை ஆகலாம். அதனால், நிர்வாக செயலாளர் குலநாயகத்திற்கு பக்குவமாக சொல்லும் பொறுப்பு பொதுச்செயலாளர் துரைராசசிங்கத்திடம் வழங்கப்பட்டது.

இதை அரசியல் சபை ஏற்றுக்கொண்டது.

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக 2020 வரை தொடர்ந்தும் அந்த இருவருமே இருப்பர் என மாவையும் கூறினார்.

மத்தியகுழு கூட்டத்தில் தேசியபட்டியல் விவகாரம் பேசப்படவில்லை. இருந்தும் குலநாயகம் கேட்டபோது- இதற்கான பதிலை பொதுச்செயலாளர் எழுத்துமூலமாக தருவார் என கூறி குலநாயகத்தை சமரசபடுத்தினர்.

மொத்தத்தில் அடுத்த தேசியப்பட்டியல் கனவில் இருந்த உறுப்பினர்களிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here