கொழும்பில் கடத்தப்பட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் நியூட்டன்: கருணா வைத்த திடீர் நிபந்தனை!

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 23

பீஷ்மர்

2001 இல் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது, அதன் பின்னணி என்ன, யார் அந்த தாக்குதலை நடத்தினார்கள் என்பதை இந்த பாகத்தில் குறிப்பிடுவதாக கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

வன்னியிலிருந்து கிழக்கிற்கு வந்த கருணா தமையிலான படையணிகள் வழக்கமான தமது நிர்வாகத்தையே ஏற்படுத்தினார்கள். ஆனால் புலிகளின் சிவில் நிர்வாக நடைமுறைகள் கிழக்கிற்கு வந்தபோது, கருணா அதை விரும்பவில்லை, குழப்புவதில் குறியாக இருந்தார் என்பதையும் கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

காவல்துறை, நிதிதுறை, புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் எப்படியான குழப்பங்கள் நடந்தன. இதில் புலனாய்வுத்துறை விவகாரங்களில்தான் அதிக சிக்கல் நீடித்தது. மற்றைய துறைகளை விட புலனாய்வுத்துறைதான் முக்கியமானது என்பது புலிகளிற்கும் தெரியும், கருணாவிற்கும் தெரியும். ஏதாவது இரகசிய நடவடிக்கைகள் செய்வதென்றாலும் புலனாய்வுத்துறையினர்தான் செய்வார்கள். ஏனைய பிரிவினர் செய்வதில்லை. இரண்டு தரப்பும் வெளிப்படையாக மோதிக்கொள்ளாத வரையிலும் புலனாய்வுத்துறைதான் இரகசியமாக மோதிக்கொள்வார்கள். பலமான புலனாய்வு கட்டமைப்பை வைத்திருப்பவர்கள்தான் இந்த மறைமுக போரில் வெற்றியடையலாம்.

2001 இல் இருந்து மட்டக்களப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பொட்டம்மானும், கருணாவும் இரகசிய போரில் ஈடுபட்டனர். இது வெளியுலகத்திற்கு தெரியாது. தனக்கு நம்பிக்கையான ஒரு புலனாய்வு கட்டமைப்பை மட்டக்களப்பில் உருவாக்க பொட்டம்மான் முயற்சித்தார். அதை உடைத்து, தனக்கான கட்டமைப்பை உருவாக்க கருணா விரும்பினார்.

மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் பல புலனாய்வு கட்டமைப்புக்கள் இயங்கின. பொட்டம்மானின் கீழ் இயங்கிய புலனாய்வு கட்டமைப்பில் பல அங்கங்கள் இருந்தன. உள்ளக பாதுகாப்பு, வெளியக புலனாய்வு என பிரதான அங்கங்கள் இருந்தாலும், வெளியக புலனாய்வின் கீழ் பல அணிகள் இயங்கின. ஒவ்வொரு பொறுப்பாளரின் கீழும் ஒரு புலனாய்வு வலையமைப்பு இருந்தது. உதாரணமாக, கொழும்பில் கூட நான்கைந்து பொறுப்பாளர்களின் கீழ் வலையமைப்புக்கள் இருக்கும். ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டிருக்காது. அந்த காலத்தில் மட்டக்களப்பில் நியூட்டன் தங்கியிருந்து கொழும்பு நடவடிக்கைகளை கவனித்தார். ஆனால் நியூட்டனிற்கு கீழ் அல்லாமல், சாள்ஸ், விநாயகம் போன்றவர்களின் அணிகளும் அங்கு இயங்கின. இதைவிட இன்னும் பல அணிகளும் இருந்தன.

இந்த வலையமைப்புக்கள் மட்டக்களப்பிலிருந்தும் இயங்கின. கேட்டால்- எல்லோரும் புலனாய்வுத்துறைதான். ஆனால், தனித்தனி நெட்வேர்க்காக இயங்கினார்கள்.

கொழும்பு நெட்வேர்க் எல்லாமே ஏதாவதொரு தளத்தை நிச்சயமாக மட்டக்களப்பில் வைத்திருந்தார்கள். தென்னிலங்கைக்கும் மட்டக்களப்பிற்கும் தரைவழி தொடர்பு தடங்கலின்றி இருந்ததே இதற்கு காரணம். தென்னிலங்கைக்கு வெடிமருந்துகள், ஆயுதங்கள், தற்கொலை அங்கிகள், தற்கொலை தாக்குதலிற்கான வாகனங்கள் எல்லாம் மட்டக்களப்பில் இருந்துதான் கொண்டு செல்லப்பட்டன. தற்கொலை தாக்குதலின் பின்னால் ஓரளவு துப்பு துலக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பத்திரிகைகளில் படித்தவர்களிற்கு இதை பொருத்திப்பார்க்க முடியும். அனேகமான எல்லா பெரிய தாக்குதலிற்குமான வாகனங்கள் ஆரம்பத்தில் மட்டக்களப்பிலிருந்துதான் சென்றன.

புலிகளின் கொழும்பு நடவடிக்கை மையமாக மட்டக்களப்பு இயங்கியதென்று சொல்லலாம். விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை முக்கியஸ்தராக இருந்தவர் நியூட்டன். கொழும்பு நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக இருந்தவர். நீண்டகாலமாக இவர் மட்டக்களப்பில்தான் தங்கியிருந்தார். பின்னர் கொழும்பில் நடந்த “இரகசிய ஒப்ரேசன்“ ஒன்றில் பாதுகாப்பு பிரிவினரால் தூக்கப்பட்டிருந்தார். கடைசிவரை நியூட்டன் பற்றிய எந்த துப்பும் புலிகளிற்கு கிடைக்கவில்லை. நியூட்டனை இராணுவ புலனாய்வுத்துறை கடத்தியதும், பதிலுக்கு கொழும்பில் இருந்து பயங்கரவாத விசாரணைத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணத்தை புலிகள் கடத்தினார்கள். ஜெயரட்ணத்தை வைத்துக்கொண்டு, நியூட்டனிற்கான இரகசிய பேரம் பேசப்பட்டது.

ஆனால் தராசு சமனிலையில் இல்லையென்பது புலிகளிற்கும் நன்றாக தெரியும். நியூட்டனின் பெறுமதி ஆயிரம் கிலோகிராம் என்றால், ஜெயரட்ணத்தின் பெறுமதி வெறும் ஐம்பது கிலோகிராம்தான். அப்படியான சமன்பாடு அது.  நியூட்டனை விடுவிக்கும் அந்த இரகசிய முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆனால், பிரபாகரனிடம் வேறு ஏதேனும் இரகசிய திட்டமிருந்திருக்ககூடும். அதனால்தான்- 2007 இல் இறுதியில் நியூட்டனில் மனைவி, பிள்ளைகளை புதுக்குடியிருப்பில் சந்தித்து ஆறுதல் கூறியபோது, எப்படியாவது அவரை வெளியில் எடுத்து தருவேன் என்று வாக்களித்திருந்தார். ஒரு கொமாண்டோ அற்றாக் நடத்தியாவது நியூட்டனை வெளியில் எடுக்கலாமென புலிகள் திட்டமிட்டிருந்தனர்.

நியூட்டனை மீட்க புலிகள் ஏதாவது கொமாண்டோ அற்றாக் நடத்துவார்கள் என்பது இராணுவ புலனாய்வுத்துறைக்கும் தெரியும். எப்படியாவது நியூட்டனை மீட்க வேண்டுமென புலிகளும் முயன்றார்கள். அந்த நாட்களில் இரண்டு தரப்பும் தமது உச்சபட்ச புலனாய்வு பலத்தை பாவித்து ஒரு பெரிய ஆடுபுலியாட்டத்தையே நடத்தினார்கள். அதைப்பற்றி பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் விபரமாக குறிப்பிடுகிறோம்.

jeyaratnamபுலிகளின் கொழும்பு புலனாய்வு கட்டமைப்பும் மட்டக்களப்பில் இயங்கியதை விட, மட்டக்களப்பிற்கான கட்டமைப்பு தனியாக மட்டக்களப்பில் இயங்கியது. கிழக்கு படையணிகள் வன்னியில் நின்ற சமயத்திலும் புலிகளின் புலனாய்வு கட்டமைப்பு கிழக்கில் இருந்தது. நீலன் மட்டக்களப்பு புலனாய்வு பொறுப்பாளராக இருந்தார். பிரபா, கீர்த்தி போன்றவர்கள் அவரின் கீழ் செயற்பட்ட ஏனைய பிரபலங்கள். அவர்களின் கீழ் செயற்பட்ட போராளிகளில் வடக்கை சேர்ந்தவர்களும் இருந்தார்கள். கிழக்கை சேர்ந்தவர்களும் இருந்தார்கள்.

வன்னியிலிருந்து மட்டக்களப்பிற்கு சென்றதும் கருணா செய்த முக்கியமான காரியம்- தனது புலனாய்வு அணியை புதிதாக கட்டியெழுப்ப முயன்றது. ரமணன், பிரபா (கண்ணாடி) போன்றவர்கள் கருணாவின் புலனாய்வு அமைப்பிலிருந்து, பின்னாளில் பிரபலமான தளபதிகள்.

விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு புலனாய்வு அமைப்பை செயலிழக்க செய்து, தனது கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியை கருணாவே நேரடியாக செயற்படுத்தினார். மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த போராளிகள் விடுதலைப்புலிகளின் புலனாய்வு அமைப்பில் செயற்பட்டால், அவர்களை அணுகுவது கருணாவிற்கு இலகுவானது. அவர்களிற்கு தெரிந்தவர்கள் கருணாவுடன் இருப்பார்கள், ஏதாவது உணர்வுபூர்வ காரணங்கள், பிரச்சனைகள் வரும். இதையெல்லாம் பாவித்து, அவர்களை தன்னுடன் வரும்படி தூண்டிக்கொண்டேயிருந்தார். தனது நம்பிக்கையான முக்கியஸ்தர்களையும் இதற்காக களமிறக்கியிருந்தார்.

அப்போது மட்டக்களப்பில் செயற்பட்ட புலிகளின் புலனாய்வு அணியில் ரெஜினோல்ட் அறியப்பட்ட திறமைசாலியாக இருந்தார். அவருடன் சேர்த்து சில போராளிகளை கருணா அணியினர் வளைத்துப் போட்டனர்.

இதேசமயத்தில் கருணா இன்னொரு நச்சரிப்பை தலைமைக்கு கொடுக்க ஆரம்பித்தார். மட்டக்களப்பில் நடக்கும் புலிகளின் நிர்வாகம், நிர்வாகம் அல்லாத செயற்பாடுகளும் தனக்கு தெரிந்து, தனக்கு கீழ் நடக்க வேண்டுமென்பதே அது. அது ஓரளவு வெளிப்படையாகவும் கேட்டார். வெளிப்படையாக கேட்க முடியாத இடத்தில் சூசகமாக கேட்டார். உதாரணமாக, புலிகளின் நடவடிக்கைகள் சிலவற்றிற்கு கிழக்கில் சிக்கல் வருகிறதென வையுங்கள். எப்படியெனில்- புலிகளின் காவல்த்துறை உறுப்பினர்கள் மீது, ஜெயந்தன் படையணி போராளிகள் ஒருமுறை துப்பாக்கியால் சுட்டார்கள் என ஏற்கனவே கூறியிருந்தோம். சிவில் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட ஜெயந்தன் படையணி போராளியை தடுத்து வைத்து விசாரித்ததற்கே இந்த துப்பாக்கிச்சூடு.

Image result for கருணா பிரிவுஅது போராளிகளாக செய்ததல்ல. அந்த முரண்பாட்டை தூபமிட்டு, தூண்டி, அப்படியொரு விளைவை நோக்கி கிழக்கு தளபதிகளே பின்னணியிலிருந்து செயற்படுத்தினார்கள். துப்பாக்கியால் சுட்டது அந்த அப்பாவி போராளிகளாக இருந்தாலும், “மாஸ்டர் மைன்ட்“ பின்னாலிருந்தது!

இது பின்னர் விவகாரமாக- “அதற்குத்தான் நான் அப்பவே சொன்னேன், நீங்களாக எதையும் செய்யாதீர்கள். எனக்கு சொல்லிவிட்டு செய்திருக்காலாமே. நமது போராளிகள் அப்படித்தான். கொஞ்சம் உணர்ச்சி வேகத்தில் அப்படி இப்படி நடந்து விடுவார்கள். இனிமேலாவது, மட்டக்களப்பில் நீங்கள் என்ன செய்வதென்றாலும் என்னிடம் சொல்லிவிட்டு செய்யுஙகள். நான் அவர்களை கட்டுப்படுத்துவேன்“ என்பதை போல கருணா தரப்பிலிருந்து பதில் வரும்!

கருணாவின் நச்சரிப்பு தாங்க முடியாமலோ, அல்லது வேறு ஏதும் காரணங்களோ, என்னவோ- ஓரளவிற்கு கருணாவிற்கு விட்டுக்கொடுத்துத்தான் புலிகள் நடந்தார்கள். அந்தளவில் நின்றால் கூட பரவாயில்லை. கருணா அடுத்ததாக வைத்த நிபந்தனையை பாருங்கள்.

மட்டக்களப்பில் செயற்படும் புலனாய்வுத்துறை செயற்பாடுகள் அனைத்தும் தனது கண்காணிப்பின் கீழ் செயற்பட வேண்டுமென கருணா ஒரு கட்டுப்பாடு விதித்தார்!

புலிகளிற்குள் இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மட்டக்களப்பில் செயற்படும் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை முக்கியஸ்தர்களை அழைத்து, இந்த கட்டளையை வழங்கினார். அதற்கு முன்னர்வரை, கருணாவுடன் நட்பு, மரியாதை, சம்பிராதாயம் கலந்ததாக ஒரு உறவை புலனாய்வு கட்டமைப்பு வைத்து செயற்பட்டது. சில விசயங்களை முன்னரே ஆலோசித்தது. சில விசயங்களை அனுசரித்து செயற்பட்டது.

ஆனால் 2000களில் கருணாவில் ஏற்பட்ட திடீர் மாற்றம், அந்த வழக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

எனினும், கருணாவின் கட்டளைக்கு பணிய வேண்டியதில்லையென பொட்டம்மான் தெளிவாகவே மட்டக்களப்பு பொறுப்பாளர்களிற்கு அறிவித்தார். புலிகளின் தலைமையிடமிருந்தும்  கருணாவிற்கு தெளிவான அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இந்த விடயத்தில் தலையிடக்கூடாது என்று அந்த அறிவுறுத்தல் கூறியது.

ஆனாலும் அடிக்கடி மட்டக்களப்பிலுள்ள புலனாய்வு போராளிகளை சந்திப்பிற்கு அழைத்து, தனது கட்டளையின் கீழ் செயற்பட வேண்டுமென கருணா அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார்.

பிரபா. கருணா பிரிந்து செல்ல முயன்றதும், அவரை விட்டு வன்னிக்கு வந்து விட்டார்.

இதேவேளை, புலனாய்வுத்துறையின் கீழ் செயற்பட்ட போராளிகளில் கிழக்கு போராளிகளை அடையாளம் கண்டு, அவர்களுடன் தொடர்பேற்படுத்தி, வடக்கிலுள்ளவர்களின் சொற்படி நடக்க தேவையில்லையென்ற கருத்தையும் ஏற்படுத்த தொடங்கினார்கள். இதற்கு ஓரளவு பலனும் கிடைத்தது. முன்னர் குறிப்பிட்ட ரெஜினோல்ட் உள்ளிட்ட சில பொறுப்பாளர்கள் தம்மால் புலனாய்வுத்துறை கட்டமைப்பிற்குள் செயற்பட முடியாதென விடுதலைப்புலிகளின் தலைமைசெயலகத்திற்கு தனித்தனியாக கடிதங்கள் அனுப்பினார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here