மலையக சிறுவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள்!


இலங்கையில் சமிபகாலத்தில் சிறுவர் உரிமைகள் தொடர்பான கண்ணோட்டம் அதிகரித்து கொண்டு வருகின்றது. இதற்கு 1998 ஆம் ஆண்டு 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைச் சட்டம் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடதக்கது.

இலங்கையில் மலையக சிறுவர்களின் உரிமைகள் பற்றிய நிலைப்பாடு பெரிதும் கேள்விக்குறியானதாகவே காணப்படுகின்றது. காரணம் சர்வதேச ரீதியாக 18 வயது வரையானவர்கள் சிறுவர்கள் என்று குறிப்பிடப்படுகின்ற நிலையில் சிறுவர்கள் என்றால் யார்? அவர்களுக்குறிய உரிமைகள் என்ன? அவர்களுக்கான சழுகைகள் என்ன? வளந்தோருக்கும் சிறுவர்களுக்கிடையிலான வேறுபாடு என்ன? போன்றன பற்றிய மிக தெளிவான விளக்கங்கள் காணப்படுகின்றன.

ஆனால் இன்றளவிலும் மலையக சிறுவர்களின் நிலைமை பெரிதும் கவலைக்குரிய ஒன்றாகவே காணப்படுகின்றது. எனவே, சிறுவர் உரிமைகள், சிறுவர் உரிமை பாதுகாப்பு சட்டங்கள் இருந்து என்ன பயன் என்று எண்ண தோன்றுகின்றது.

காரணம் மலையக சிறுவர்களின் நிலைப்பற்றி ஆராய்ந்து பார்க்க பொறுப்பு வாய்ந்த அமைப்புகள் எதுவும் இல்லை. அத்தோடு சில அரச சார்ப்பற்ற நிறுவனங்கள் இது தொடர்பாக கவனம் செலுத்தினாலும், அவையும் மலையக சிறுவர்கள் தொடர்ந்து அப்படியே இருப்பதையே எதிர்பார்க்கின்றன.

காரணம் அப்போதுதான் அவர்களை படம்பிடித்து காட்டி வெளிநாடுகளில் இருந்து நிதியினை பெற்றுக்கொள்ள முடியும். எனினும் ஒரு சில நிறுவனங்கள் உண்மையில் பணியாற்றுவதனையும் மறுக்க முடியாது.

சிறுவர்களை பொறுத்தவரை கருவறையில் இருந்தே தமக்குரிய உரிமைகளை, உரிமையோடு அனுபவிக்கின்றனர். பின்னர் பிள்ளை பிறந்தவுடன் படிப்படியாக வளர அவன் அனுபவிக்க கூடிய உரிமைகளும் விருத்தியடைந்து வருகின்றது.

அதிலும் 18 வயதினை அடையும் வரை சிறுவர்களுக்குரிய உரிமைகள் சிறப்பாக காணப்படுகின்றன. அத்தகைய நிலையில் மலையக சிசுகள், குழந்தைகள், சிறுவர்களுக்கு மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் பொருத்தமானதாக இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது. மலையக சிறுவர்கள் இன்றளவிலும் தமக்கான உரிமைகளை முழுமையாக பெற்றுக்கொள்ளவும் அனுபவிக்கவும் முடியாமலே உள்ளனர்.

மலையக சிறுவர்கள் உண்மையில் பிறப்புரிமையை கூட சரியாக பெற்றுக்கொள்வதில்லை. காரணம் ஒரு தாய் கருத்தரித்தவுடன் அந்த தாய்க்கு கிடைக்க வேண்டிய போசாக்கான உணவு, சிறந்த சுகாதாரம், வசதியான தங்குமிடம் போன்றன கிடைக்க பெறுவதில்லை. இதனால் சிசுக்கள் கருவிலையே இறந்து விடுகின்றன.

மேலும் அப்படியே பிறக்கும் பிள்ளைகளில் பலர் ஊனமுற்றவர்களாக பிறக்கின்றனர். இதனால் இவர்களுக்கான உரிமை எட்டா கனியாக மாறிவிட்டது. இவை தவிர ஓரளவு சிறப்பாக பிறக்கும் பிள்ளைகள் அவர்களுக்கான அன்பு, காப்பு, கணிப்பு, உணவு போன்றன அடிப்படை தேவைகளை பூரணமாக பெற்றுக்கொள்ளவில்லை.

மலையகத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளை தாய் வேலைக்கு செல்லும் போது குழந்தை பராமரிப்பு நிலையங்களில் விட்டு செல்கின்றனர். இவ்வாறான குழந்தை பராமரிப்பு நிலையங்கள் பிள்ளை மடுவம் எனவும் அழைக்கப்பட்டது. அத்தகைய குழந்தை பராமரிப்பு நிலையங்களில் பெரும்பாலானவை அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் உரிய தரத்தில் இல்லை இந்த குழந்தை பராமரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டதற்கான ஒரு வரலாறும் உண்டு.

அதாவது பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் போது பிள்ளைகளும் உடன் செல்வது வழக்கம் இதன்போது சிறுபிள்ளைகள் தேயிலை செடிகளை அறியாலம் விளையாட்டுத்தனமாக உடைத்துவிடுவர். அதனால் தேயிலை செடிகள் பழுதடைந்து விடும்.

எனவே சிறுவர்களிடம் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க அவர்களை தாய்மார்கள் மேற்குறிப்பிட்ட பிள்ளை மடுவத்தில் விட்டு செல்வது வழக்கம். இதன்போது பிள்ளைகளை பராமரிக்க ஆயா என்று அழைக்கப்படும் ஆயம்மா ஒருவர் இருப்பார். அந்த பிள்ளை மடுவமோ சிறுவர்களின் சுதந்திரத்தினை தடுத்து அவர்களின் உரிமைகளை குழித்தோண்டி புதைத்து விடுகின்றது. சுருங்க கூறின் அது ஒரு சிறைச்சாலை என்று குறிப்பிடுவது பொறுத்தமானது, எனினும் ஒரு சில தோட்டங்களில் இந்நிலைமை சற்று மாறிவருகின்றமை மகிழ்ச்சிக்குரியது.

இவ்வாறே மலையக சிறுவர்கள் தமது பிறப்பு முதல் 5 வயது வரையான காலப்பகுதியை கழிக்கின்றனர். ஆனால் வெளியுலகை நோக்கும் போது 2 வயதிலேயே சிறுவர்கள் பாலர் பாடசாலைக்கு சென்றுவிடுகின்றனர். இவ்வாறு செல்பவர்கள் ஆறு வயதையடைந்ததும் பாடசாலையில் சேர்க்கப்படுகின்றனர். அதன் போது அவர்களின் கல்வி, இணைப்பாடவிதமான செயற்பாடுகளின் வெளிபாடு மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது.

ஆனால் மலையக சிறுவர்கள் குழந்தை பராமரிப்பு நிலையங்களில் இருந்தே பாடசாலைக்கு சேர்க்கப்படுகின்றனர். இதன்போது மலையக சிறுவர்கள் ஆரம்பகல்வியை பெற்றுக்கொள்வதில் பெரிதும் இடர்படுகின்றனர். இதன் காரணமாக நகர்புற மாணவர்களில் வெளிபாடுகளோடு ஈடுகொடுக்க முடியாமல் சலைத்து விடுகின்றனர். இது தொடர்ச்சி க.பொ.த சாதாரண தரத்தை கூட எட்டாமல் இடைவிலகி விடுகின்றனர். இதனால் அவர்களில் அடிப்படையான கல்வி பாதிக்கப்டுகின்றது.

கல்வியை இடைவிட்டவர்கள் நகர்புறங்களில் உணவுசாலைகளிலும், செல்வந்தர்களின் வீடுகளிலும், வியாபர நிலையங்களிலும் நாள் கூலிக்கு வேலை செய்கின்றனர். மேலும் பல சிறுவர்கள் தமது சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து விடுவதனால் குடும்ப பொறுப்புக்களை சுமக்கின்றனர். இதன் போது அவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் தமது உரிமை, சுதந்திரம், ஆசாபாசங்கள் என்பவற்றை மூட்டைகட்டி வைத்துவிட்டு குடும்பத்திற்காக பாடுபட ஆரம்பிக்கின்றனர்.

இதன் போது சர்வதேச, தேசிய சிறுவர் உரிமை பற்றிய சமவாயங்கள் மலையக சிறுவர்களுக்கு யாது பயனளிக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. எனவே மலையக சிறுவர்கள் பிறப்பு முதல் தமது 18 வயது வரை தமக்கே உரிய உரிமைகளை அனுபவிப்பதில் பெரிதும் இடர்படுகின்றனர். எனவே சர்வதேச சமவாயங்கள் ஒருபக்கம் இருக்க மலையக சிறுவர்களின் உரிமைகளில் கவனம் செலுத்த கூடியவாரான ஏற்பாடுகள் இடம்பெற வேண்டும் அல்லது மலையக சிறுவர்கள் மீதான பார்வை விஸ்தரிக்கப்பட வேண்டும். அப்போதே மலையக சிறுவர்களும் சுதந்திரம் கிடைக்கும்.

அதே வேளை, சர்வதேச, தேசிய சிறுவர் உரிமை பற்றிய சமவாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் மலையக சிறுவர்களுக்கு கிடைக்கின்றனவா? ஆதனை தடுப்பவர்கள் யார்? மலையக சிறுவர்களை

துஸ்பிரயோகத்திற்குற்படுத்துபவர்கள் யார்? என்பது பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க விசேட சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டியதோடு மலையக சிறுவர் உரிமைக்கான ஆணைக்குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

-மஸ்கெலியா நிருபர், செ.தி.பெருமாள்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here