கைதடி முதியோர் இல்லத்தில் பெற்றோரை விட சென்றவர்கள், மீண்டும் தம்முடன் அழைத்து சென்றனர்!


பிள்ளைகளே தமது பெற்றோரை பராமரிக்க வேண்டும் என்ற கோட்பாட்டிற்கு அமைய கைதடி முதியோர் இல்லத்தில் தமது பெற்றோரை இணைக்க வந்த பிள்ளைகளுக்கு இல்ல நிர்வாகம் வழங்கிய அறிவுரையையடுத்து, பெற்றோரை தாங்களே பராமரிப்பதாக கூறி, அவர்களை தம்முடன் பிள்ளைகள் அழைத்து சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைதடி அரச முதியோர் இல்லத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றது. இல்லத்தின் அத்தியட்சகர் த.கிருபாகரன் இது குறித்து கூறுகையில்- மறவன்புலோவை சேர்ந்த 80 வயதான வயோதிபர் ஒருவரை அவரது மகன் இல்லத்திற்கு கூட்டி வந்தார். தனது தந்தையை பார்க்க முடியாத நிலைமையேற்பட்டுள்ளது, ஆகவே இல்லத்தில் இணையுங்கள் என கேட்டார்.

அதே சமயம் கிளிநொச்சியை சேர்ந்த 84 வயதான இன்னொரு முதியவரை, அவரது மகள் அழைத்து வந்தார்.

பிள்ளைகள்தான் தமது பெற்றோரை பராமரிக்க வேண்டும் என்ற தொனிப்பொருளுக்கு அமைய , உங்கள் பெற்றோரை நீங்கள்தான் பராமரிக்க வேண்டும். பராமரிப்பதில் ஏதும் பிரச்சனையிருந்தால் எம்முடன் தொடர்புகொள்ள முடியும். அதற்கான வழிகாட்டலை இல்லத்தின் ஊடாக செய்ய தயாராக இருக்கிறோம்.

கடந்தகாலத்தில் நாம் பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்தோம். அப்போது கூட பெற்றோரை கைவிடவில்லை. ஆனால் இன்று பலர் தமது பெற்றோரை வயோதிப இல்லங்களிற்கு அழைத்து செல்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். பிள்ளைகள்தான் தமது பெற்றோரை பராமரிக்க வேண்டும். முதியோர் இல்லத்தின் அலோசனையையடுத்து, மனம் திருந்திய பிள்ளைகள் தமது தந்தையர்களை மீண்டும் தம்முடன் அழைத்து சென்றனர்“ என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here