தனுசு, மகரம், கும்பம், மீனம்- குருப்பெயர்ச்சி பலன்கள் 2019


2019ம் ஆண்டுக்கான (தனுசு, மகரம், கும்பம், மீனம்) ஆகிய நான்கு ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

05.11.2019 முதல் 29.03.2020 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை கட்டுக் கோப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவீர்கள். உங்கள் பிரதிநிதிகளை பல ஊர்களுக்கும் அனுப்பி செய்தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு சரியான சட்டதிட்டங்களை வகுப்பீர்கள்.

பழைய அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு புதிய முயற்சிகளை நடைமுறைப்படுத்துவீர்கள். பழைய பயனற்ற பொருள்களை கொடுத்துவிட்டு இல்லத்திற்குக் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் திறந்த மனத்தோடு பழகுவீர்கள். பெற்றோருடன் இணக்கமாக இருப்பீர்கள். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொண்டு அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்து பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றிக் கொள்வீர்கள். கடினமாக உழைத்துப் பொருளீட்டுவீர்கள். புத்தி சாதுர்யத்துடன் சேமிப்புகளை உயர்த்திக் கொள்வீர்கள். தர்மசிந்தனைகள் சமுதாயத்தில் உங்களுக்கு புதிய கௌரவத்தையும் அந்தஸ்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் காலகட்டமிது.

30.03.2020 முதல் 29.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் உழைப்புக்கு இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். வராக் கடன் வந்து சேரும். பொருளாதாரம் வளம் பெருகும். இல்லத்தில் தட்டிச் சென்ற திருமணம், திடீரென்று வரன்/ வது அமைந்து இன்பகரமாக நடந்தேறும். குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களின் கனவு நினைவாகும். சிலர் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். சிலருக்கு அதிகாரம் செய்யும் பதவிகள் தேடி வரும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறையும். அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத சலுகைகள் தானாகவே தேடிவரும். வழக்கு விவகாரங்கள் சாதகமான திருப்பங்களைச் சந்திக்கும்.

30.06.2020 முதல் 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் அடக்கமாக இருந்து சமுதாயத்தில் உயர்ந்தோரின் ஆசிகளையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தின் தேவைகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பூர்த்தியாகும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் மறையும். துணிச்சலுடன் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். சிலர் அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். சிலருக்கு வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகளும் தேடி வரும். உடல்நலம் மனவளம் மேம்பட யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். முகத்தில் புதிய பொலிவு உண்டாகும். மிடுக்குடன் நடை போடுவீர்கள். சில நேரங்களில் நண்பர்களுடன் பனிப்போர் என்கிற நிலையும் உண்டாகும் என்கிற காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டிய நேரம். பேச்சில் நிதானமாக இருக்க பழகிக் கொண்டு சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். உழைப்பிற்கு இரட்டிப்பு வருமானம் பெறுவீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மைகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் தேடி வரும். மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தை மேலும் பெருக்குவீர்கள். பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். திட்டமிட்ட வேலைகளை உடனே செய்து முடிக்கவும். கூட்டாளிகளின் ஆலோசனையின்பேரில் புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கொள்முதல் லாபங்கள் சிறப்பாக இருக்கும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். புதிய குத்தகைகளையும் பெறுவீர்கள். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும்.

அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் செயல்படுவார்கள். புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் தொடர்பு சாதக பலன்களைக் கொடுக்கும். புதிய தொண்டர்களை கட்சியில் சேர்ப்பீர்கள். கலைத்துறையினருக்கு புகழும் கௌரவமும் உண்டாகும். பணவரவில் படிப்படியான உயர்வினைக் காண்பீர்கள். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி அடைவார்கள். வருமானமும் சீராகவே தொடரும். மனதில் காரணமில்லாத குழப்பங்கள் நிலவும். மனதை ஆன்மிகத்திலும் இறைவழிபாட்டிலும் செலுத்துங்கள். மாணவமணிகள்கடினமாக உழைத்தால் அதற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் மாநில அளவில் சாதிக்கும் யோகத்தைப் பெறுவார்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

05.11.2019 முதல் 29.03.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் அறிவும் துணிச்சலும் கூடும். எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். தீவிர முயற்சியின் பேரில் கடினமான செயல்களையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பலன்களும் கிடைக்கும். குழந்தைகள் விஷயத்தில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். இளைய உடன்பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். அவர்களுக்கும் உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். குடும்பத்தில் குதூகலத்தைக் காண்பீர்கள். வெளியில் கொடுத்திருந்த கடன் சிறிது தாமதமாக கை வந்து சேரும். அனைவரிடத்திலும் நியாயமாக நடந்து கொள்வீர்கள். முன்கோபத்தை விட்டொழித்து அனைவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். நுணுக்கமாக விஷயங்களையும் கற்றுக் கொள்வீர்கள். மேலும் கடுமையாகவும் உழைக்க வேண்டியிருக்கும். சுயமாக சிந்தித்து சரியாக முடிவெடுப்பீர்கள். சமுதாயத்தில் உயர்ந்த பொறுப்புகளையும் பெறுவீர்கள். ஆன்மிகத்தில் சிறப்பான ஈடுபாடு உண்டாகும்.

30.03.2020 முதல் 29.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் புதிய முதலீடு செய்து செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் சேர்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களை வெளிநாடு சென்று படிக்க வைக்கவும் முயற்சி எடுப்பீர்கள். அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் சேர்க்கை கிடைக்கும். சாதுக்களை தேடிச் சென்று அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். தர்மகைங்கர்யங்களையும் செய்வீர்கள்.

30.06.2020 முதல் 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் புதிய ஏற்றத்தை எட்டுவீர்கள். செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். பழைய காலத்தில் விட்டதைப் பிடிப்பீர்கள். முடங்கிய செயல்களும் மட மடவென்று நடக்கத் தொடங்கும். பங்கு வர்த்தகத்திலும் சிறிது லாபம் காண்பீர்கள்.பெற்றோர் வழியில் இருந்த சுணக்கங்கள் மறைந்து குடும்பத்துடன் இணைந்து வாழ்வீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. திருமணமாகாதவர்களுக்குத் திருமணமும் புத்திர பாக்கியமில்லாதவர்களுக்குப் புத்திர பாக்கியமும் உண்டாகும். சிலர் இருக்கும் வீட்டை புதுப்பிப்பார்கள். நண்பர்கள் மத்தியில் உயர்வாக மதிக்கப்படுவீர்கள். கடன் பிரச்னையிலிருந்து முழுமையாக வெளிவந்து விடுவீர்கள். வேலைச்சுமைகள் கூடினாலும் அவைகள் சுகமான சுமைகள் என்கிற ரீதியில் இந்த காலகட்டம் செல்லும்.

உத்தியோகஸ்தர்கள் வேலையில் சுமை அதிகரித்தாலும் அவைகளை முடிக்க உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். உழைப்பிற்கேற்ற வருமானம் வந்து கொண்டிருக்கும். சக ஊழியர்கள் ஊதாசீனம் செய்தாலும் கண்டு கொள்ள கூடாது. வேலை விஷயமாக வெளியூர் பயணங்களை இந்த காலகட்டத்தில் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு விற்பனை நடக்கக் காண்பீர்கள். கூடுதலாக உழைத்து மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தைப் பெருக்க முனைவீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக முடியும். விவசாயிகளுக்கு இந்த காலகட்டத்தில் விளைச்சல் அதிகமாக இருக்கும். கூடுதல் வருமானத்திற்காக தோட்டப்பயிர் செய்து பயன் பெறுங்கள். திட்டமிட்ட செயல்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு பிறகு முடியும். கால்நடைகளை கவனத்துடன் பாராமரிக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரித்தாலும் உட்கட்சி விவகாரங்களில் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அநாவசிய வாதங்களில் ஈடுபட வேண்டாம். போராட்டங்களில் புதிய உத்வேகத்துடன் ஈடுபடுவீர்கள். இந்த குருபெயர்ச்சி காலத்தில் சட்ட ரீதியான பயணங்களையும் மேற்கொள்ளுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் பெறுவார்கள். சமுதாயத்தில் மதிப்பு, செல்வாக்கு உயரும். சக கலைஞர்கள் உங்கள் முன்னேற்றத்துக்கு சற்று உதவுவார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வார்கள். கணவரோடு ஒற்றுமையுடன் பழகுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களை அள்ளுவார்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பையும் பெறுவார்கள். ஆசிரியர்களிடம் நற்பெயர் வாங்குவார்கள். விளையாடும்போது கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: துர்க்கையம்மனை வழிபட்டு வரவும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)

05.11.2019 முதல் 29.03.2020 வரை உள்ள காலகட்டத்தில் குழப்பங்களிலிருந்து விடுபட்டு சரியாக முடிவெடுப்பீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரக் காண்பீர்கள். பொருளாதாரத்தில் சுபிட்சத்தை எட்டுவீர்கள். திட்டமிட்டபடி பணிகள் நடக்கும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு மாற்றம் செய்வார்கள். அசையும் அசையாச் சொத்துகளின் சேர்க்கையும் உண்டாகும். தள்ளிப்போன திருமணம் உடனடியாக கைகூடும். வீட்டிலும் வெளியிலும் நெருக்கடிகள் மறையும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. உங்களுக்கெதிராக செயல்பட்டவர்கள் விலகுவார்கள். செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். பழைய விவகாரங்களைச் சீர்த்திருத்தம் செய்யும் காலகட்டமிது.

30.03.2020 முதல் 29.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்களுக்கு உத்திரவாதம் கொடுத்தவர்கள் சிறிது தயக்கத்துடன் நிறைவேற்றுவார்கள். மனதில் இனம் புரியாத பயம் தொடரும். பெரியோர்களை மதித்து அவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். செய்தொழிலில் இருந்த ஓட்டைகளை அடைப்பீர்கள். தெரியாமல் செய்த பழைய தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள். உங்களை பகடைக் காயாய் பயன்படுத்தியவர்களிடமிருந்து விலகி தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்குவீர்கள். செயல்படுத்த முடிந்தவைகளைப் பற்றிச் சிந்திப்பீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பில்லாததால் நீண்ட வாய்தா வாங்கிக் கொள்ளவும்.

30.06.2020 முதல் 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் தெய்வப்பலத்தைக் கூட்டிக் கொண்டு காரியமாற்றுவீர்கள். புதிய வாய்ப்புகளும் பொறுப்புகளும் தேடி வரும். சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும். கனவிலும் கற்பனைகளிலும் நினைத்திருந்தவைகள் நிஜமாகவே நடந்தேறும். உயர்ந்தோரை மதித்துப் போற்றுவீர்கள். செய்தொழிலில் வெற்றிமேல் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளால் குடும்பத்தில் பெருமை சேரும். புத்திர பாக்கியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். பொருளாதாரம் ஏற்றமாகவே அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலம் நிறையும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நெருக்கடிகள், பிரச்னைகள் ஏதுமின்றி ராஜபாட்டையில் நடைபோடும் காலகட்டமிது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த குருபெயர்ச்சியில் புதிய முயற்சிகள் கைகூடும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பேச்சுக்கு மதிப்பு கூடும். அலுவலகத்தில் உங்கள் மீது நடந்த வழக்குகள் முடிவடைந்து பழைய பதவிகளைப் பெறுவீர்கள். கடின உழைப்பை தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். பேச்சுத் திறனால் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகளும் எதிர்ப்புகளும் இந்த காலகட்டத்தில் நீங்கக் காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் ஒற்றுமையை காண்பீர்கள். விவசாயிகள் புதிய சாதனங்களை வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கடன் பிரச்னைகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சந்தையில் உங்கள் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் தங்கள் பெயர், புகழ் அதிகரிக்கக் காண்பார்கள். கட்சியில் உங்களின் சிறப்பான செயல்படும் திறனை கவனிப்பார்கள். அதனால் புதிய பொறுப்புகளைக் கொடுத்து கௌரவப் படுத்துவர். உடல்சோர்வைப் பொருட்படுத்தாமல் உழைப்பீர்கள். கலைத்துறையினர் புதிய பாணியில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சக கலைஞர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகள் இந்த குரு பெயர்ச்சியில் பெற்றோர் வழியில் பெருமைகள் கூடும். பிள்ளைகளால் பெயரும் புகழும் கிடைக்கும். உடன்பிறந்தோரால் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். ஆன்மிகத்திலும் தெய்வீகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் அதிக அக்கறை காட்டுவார்கள். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

05.11.2019 முதல் 29.03.2020 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் டென்ஷன் குறைந்து நிம்மதியாகப் பணியாற்றுவீர்கள். பிரச்னைகள், நெருக்கடிகள் என்று எதுவும் குறுக்கிடாமல் ராஜப்பாட்டையில் பயணிப்பீர்கள். நல்ல செய்தியுடன் திருப்பமும் வரும். பழைய காலத்தில் திருட்டுப்போன பொருள்கள் திரும்ப கைவந்து சேரும். விலகி இருந்த நண்பர்கள் திரும்ப வந்து சேர்ந்து கொள்வார்கள். குடும்பத்தில் அமைதி நீடிக்கும். குடும்பத்திலிருந்து உங்களை ஒதுக்க நினைத்தவர்கள் தவறை உணர்ந்து தாங்களே ஒதுங்கிக் கொள்வார்கள். பூர்வீகச் சொத்துகளிலிருந்த பிரச்னைகள் தீர்ந்து விடும். நீண்ட நாளைய ஆசை ஒன்று பூர்த்தியாகும். நல்லதை நினைத்து நல்லதே செய்வீர்கள். நல்லவர்கள் நட்பும் கிடைக்கும். தெரியாத விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம். எவருக்கும் வாக்கு கொடுப்பதோ, முன்ஜாமீன் போடுவதோ, உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுப்பதோ கூடாது.

30.03.2020 முதல் 29.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். ஒதுக்கி வைத்திருந்த விஷயங்களை துணிச்சலாக தைரியமாக புதுப்பிக்கத் தயாராவீர்கள். லாபம் இரட்டிப்பாகும். பொருளாதாரம் உயர்ந்து காணப்படும். பங்குவர்த்தகத்திலும் லாபம் கிடைக்கும். புதிய பொறுப்பு ஒன்று தானாகவே தேடி வரும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து கௌரவம் கூடத்தொடங்கும். அரசாங்கத்திலிருந்து எந்த பிரச்னையும் ஏற்படாது. தன்னம்பிக்கை கூடும். உடன்பிறந்தோரும் உங்களுக்கு தேவையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருவார்கள்.

30.06.2020 முதல் 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் தெய்வ பலம் அதிகரிக்கும். கடவுள் கண் திறப்பதை கண்கூடாகக் காண்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் செல்வாக்கு அதிகரிக்கும். தேவையில்லாத சிந்தனைகளை விட்டொழிப்பீர்கள். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். விடாமுயற்சியையும் உழைப்பையும் மற்றவர்கள் பாராட்டுவார்கள். காலத்தை நிர்ணயித்துக் கொண்டு உழைப்பீர்கள். சிறிய அறைக்கே புதிய முதலீடுகள் செய்யவும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து கூடும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடக்கும். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். அரசு அதிகாரிகளின் தொடர்பும் நல்ல முறையில் கிடைக்கும். உங்களுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த வழக்குகளில் வெற்றி பெறும் காலகட்டமிது.

உத்தியோகஸ்தர்கள் இந்த குருபெயர்ச்சியில் கடமை தவறாமல் உழைப்பீர்கள். மேலதிகாரிகளிடம் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சக ஊழியர்களும் நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருந்தவர்கள், விரும்பிய இடமாற்றம் பெற்று குடும்பத்துடன் இணைவார்கள். அலுவலகத்தில் கௌரவம் உயரக் காண்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்து இரட்டிப்பாக மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பான பலனைக் கொடுக்கும். உங்கள் எண்ணங்கள் உங்கள் செயல்களில் இடம் பிடிக்கும். பணத்தட்டுபாடும் எதுவும் வராது. கூட்டாளிகளும் முழுமையான ஒத்துழைப்பை நல்குவார்கள். விவசாயிகள் தானிய உற்பத்தியில் மகிழ்ச்சிகரமான நிறைவைக் காண்பார்கள். கையிருப்புப் பொருள்களுக்கும் சந்தையில் நல்ல விலை கிடைக்கும். விவசாயிக் கூலிகளுக்குத் தேவையானதைச் செய்வீர்கள். பால் வியாபாரம் செய்பவர்களும் நலமடைவார்கள்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் உழைப்பிற்கேற்ற பலன் பெறுவார்கள். அரசு அதிகாரிகளிடமும் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்க்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பெயர், புகழ் கூடும். தொண்டர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிரிகளின் மீது கண் வைப்பதோடு கவனத்துடன் பழகவும். கலைத்துறையினர் இந்த குருபெயர்ச்சியில் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் நாடி வரும். ரசிகர்களைக் கௌரவப் படுத்துவீர்கள். பெண்மணிகள் புதிய ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கணவரிடமும் ஒற்றுமை அதிகரிக்கும். தெய்வப் பலத்தைப் பெருக்கிக் கொண்டால் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஐயப்பனை வழிபட்டு வரவும்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்- குருபெயர்ச்சி பலன்கள் – 2019

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்- குருப்பெயர்ச்சி பலன்கள் 2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here