‘இலவச பசளை தருவேன்’; தமிழ் மக்களிற்கு பெரும் ஏமாற்றமளித்த சஜித்!

தமிழ்,சிங்கள, முஸ்லீம் என்ற இன மதபேதம் இல்லாமல் ஒரேகுடையின் கீழ் ஒருதாய் மக்களாக ஒரேசட்டத்தின் வாழும் அமைப்பை நிச்சயமாக உருவாக்குவேன். வடக்கு, கிழக்கில் சர்வதேச மாநாடுகளை நடத்துவேன். அபிவிருத்தியில் முன்னிலையான மாவட்டமாக யாழ் மாவட்டத்தை உருவாக்குவேன் எனதெரிவித்துள்ளார் சஜித் பிரேமதாச.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல், அன்றாட பிரச்சனைகள் பற்றி எதுவும் பேசாமல், கோட்டாபய பாணியிலேயே பொருளாதார விடயங்களை மட்டும் பேசி ஏமாற்றமளித்துள்ளார் அவர்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் தலைமையில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று மாலை இடம்பெற்றது.  இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதேஅவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்குஅவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ் மாவட்டத்திற்கு வந்திருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாவட்டத்தைப் பொருத்தவரையில் இங்கு பிரச்சனைகள் தேவைகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். அதனூடாக அபிவிருத்தியில் முதன்நிலை மாவட்டமாக இந்த மாவட்டத்தை உருவாக்குவேன்.

ஏழ்மையினை நீக்குவதற்காக சமுர்த்தி வேலைத் திட்டமொன்று நாட்டில் நடைமுறையில் இருக்கிறது. இதனோடு இணைந்ததாக ஜனசவித் திட்டத்தையும் வழங்கி ஏழ்மையை இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன்.

இந்தநாட்டில் 44 இலட்சம் பாடசாலை மாணவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு இரண்டு இலவச சீருடையும் ஒரு பாதணியும் அதேபோல பகல் போசனமும் இலவசமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளேன்.

அதேபோல பாலர் பாடசாலையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்வேன். இப்பொழுது பணம் செலுத்திதான் பாலர் பாடசாலையின் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது. பாலர் பாடசாலையின் ஆசரியருக்கு அரச சம்பளம் வழங்கப்படும்.

அதேபோன்று உப ஆசிரியருக்கும் அரச சம்பளம் வழங்கப்படும். பாலர் பாடசாலைகளுக்கு விசேடமாக மண்டபங்களும் நிர்மாணிக்கப்படும். பாலர் பாடசாலைக் கல்வியை இலவசக் கல்வித் திட்டத்தோடு இணைத்து செல்வதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்வேன்.

மேலும் விவசாயத் துறையைக் கட்டியெழுப்புவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். விசேசமாக நெல்,சேனைப் பயிர்ச்செய்கை கட்டியெழுப்புவதற்கும் தேயிலை இறப்பர் தென்னைஎன இவை அனைத்திற்கும் தேவையான பசளைளை இலவசமாக வழங்குவேன்.

யாழிலுள்ள 15 பிரதேசசெயலர் பிரிவுகளிலும் தொழில் நுட்பக் கல்லூரி உருவாக்கப்படும். அதேபோன்று ஒரு தொழில் நுட்ப மையம், தொழில் நுட்ப பூங்கா என்பனவும் உருவாக்கப்படும். இந்ததொழில் நுட்பக் கல்லூரியின் மூலமாக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற முடியும். அதனைப் போன்றுதான் தகவல் தொழில் நுட்பம் ஆங்கிய அறிவு என்பவற்றையும் இலவசமாக வழங்கக் கூடிய அமைப்பாக இதனை மாற்றி அமைத்து இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

இந்த மாவட்டத்திலுள்ள சிறு கைத்தொழிலாளர்களுக்கும் பாரிய கைத்தொழில் திட்டங்களை மேற்கொள்பவர்களுக்கும் சலுகை அடிப்படையில் உதவிகளை வழங்குவோம். அதேபோன்று யுத்தத்தின் காரணமாக தமது அவயங்களை இழந்த விசேட தேவையுடையவர்களுக்கு விசேட வேலைத் திட்டத்தை முன்னெடுப்போம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக யாழ் மாவட்டம் உள்ளது. வடக்கு கிழக்கிற்கு வேறாக வெளிநாட்டு உதவித் திட்டங்களைக் கொண்டு வந்து அபிவிருத்தியில் உச்சகட்டத்தில் திகழும் மாகாணங்களாக இந்த வடகிழக்கு மாகாணங்களை மாற்றியமைப்போம்.

எனது கொள்கைப் பிரகடனம் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. அது உங்கள் அமைச்சர் விஜஐயகலா மகேஸ்வரன் ஊடாக ஒவ்வொரு வீடுகளுக்கும் வந்து சேரும். ஆந்தப் புத்தகத்திலே எதிர்காலத்தில் என்னென்ன விடயங்களை இந்தநாட்டிலே நாங்கள் நடைமுறைப்படுத்த இருக்கிறோம் என்பது உள்ளடங்கப்பட்டிருக்கிறது.
யுத்தத்தின் பிறகு எந்தவொரு நபருக்கும் சர்வதேச மாநாடு ஒன்றை வடக்கு கிழக்கு மாகாணங்களிலே இதுவரை நடாத்த முடியாமல் போனது. ஆகவே என்னுடைய அரசாங்கத்திலே அந்த மாநாடுகளை வட கிழக்கு மாகாணங்களிலே நடாத்துவோம்.

அதேபோன்று ஒருமித்த நாட்டில் இன மத கட்சி என்ற பேதமில்லாமல் அனைவரும் தமிழ் சிங்கள முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒருதாய் மக்களாக ஒரே சட்டத்தின் கீழ் வாழக் கூடிய அமைப்பை எதிர்கால அரசாங்கத்தில் நான் நிச்சயமாக உருவாக்குவேன்.

யாழ் மாவட்டத்திலே 15 பிரதேச செயலகங்கள் இருக்கிறது. 435 கிராம சேவகர் பிரீவுகள் இருக்கிறது. 1611 கிராமங்கள் இருக்கிறது. இதை உள்ளடக்கிய அனைத்து மக்களுக்கும் நிச்சயமாக அபிவிருத்தி செய்வேன். இந்த யாழ் மாவட்டத்தை அபிவிருத்தியில் உச்சகட்டத்தில் திகழும் மாவட்டமாக நிச்சயமாக நான் மாற்றியமைப்பேன் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here