முடிவின்றி மகாராஷ்டிரவில் இழுபறி; முதல்வர் பதவியில் இருந்து விலகினார் பட்னாவிஸ்!

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் புதிய அரசு அமைவதில் முடிவு எட்டப்படாத நிலையில் இன்றுடன் பதவிக் காலம் முடிவதால் முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார். ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அவர் அளித்தார்.

மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மை இடங்கள் இருந்தபோதிலும் கருத்தொற்றுமை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது.

தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தில் சமபங்கை சிவசேனா கோரி வருகிறது. ஆனால், தேர்தலுக்கு முன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யவில்லை. அவ்வாறு அதிகாரத்தில் சமபங்கு அளிக்க இயலாது என்று பாஜக திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

தற்போதைய சட்டப்பேரவையின் காலம் இன்றுடன் முடிவடைவதால் அதற்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் முதல்வர் பதவி என்ற கோரிக்கையில் சிவசேனா மிகவும் உறுதியுடன் உள்ளதால் பிரச்சினை தீரவில்லை.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் புதிய அரசு அமைவதில் முடிவு எட்டப்படாத நிலையில் இன்றுடன் பதவிக் காலம் முடிவதால் முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார். ராஜ்பவனுக்குச் சென்ற அவர் ஆளுநர் பகத்சிங் கோஷியாரியைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

ராஜினாமா செய்த பட்னாவிஸ் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எனது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். 5 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு தந்த மகாராஷ்டிர மக்களுக்கு எனது நன்றி. மாற்று ஏற்பாடு என்னவாகவும் இருக்கலாம். புதிய அரசு அல்லது குடியரசு தலைவர் ஆட்சி என எதுவாகவும் இருக்கலாம்.

முதல்வர் பதவி தொடர்பாக எந்த முடிவும் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே எடுக்கப்படவில்லை. முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதாக எங்கும் சொல்லவில்லை. அமித் ஷா மற்றும் நிதின் கட்கரி ஆகியோரும் இதனை கூறியுள்ளனர்.

புதிய அரசு அமைவதில் இழுபறி ஏற்பட்டதால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால் எனது தொலைபேசி அழைப்பை அவர் ஏற்கவில்லை. பாஜகவுன் பேசுவதில்லை என்ற முடிவெடுத்த சிவசேனா, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சவார்த்தை நடத்தியது.

தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே உத்தவ் தாக்கரே அனைத்து வாய்ப்புகளும் உள்ளதாக கூறினார். பாஜக -சிவசேனா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்துள்ள நிலையில் உத்தவ் தாக்கரே இதுபோன்று ஏன் கூறுகிறார் என அப்போதே நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.

இவ்வாறு பட்னாவிஸ் கூறினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here