தமிழ் அரசுக்கட்சியின் ‘சுத்துமாத்து’: புட்டுப்புட்டு வைக்கும் சுரேஷ்!

எந்த நிபந்தனையுமில்லாமல் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதென சம்பந்தன், மாவை, சுமந்திரன் முடிவெடுத்து விட்டு, இப்பொழுது அவர் எம்மை ஏமாற்றிவிட்டார் என்கிறார்கள். இப்பொழுது நிபந்தனையின்றி சஜித்தை ஆதரிக்கிறார்கள். இன்றும் ஐந்து வருடத்தின் பின்னர் சஜித் ஏமாற்றி விட்டார் என கூறக்கூடும். தமது தேவை கருதி அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். 13 அம்ச கோரிக்கை விடயத்தில் அனைவரையும் முட்டாளாக்கியுள்ளனர் என காட்டமாக தெரிவித்துள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

இன்று (8) யாழில் செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆரம்பத்திலிருந்தே சுமந்திரனின் ஊடக அறிக்கைகள், கருத்துக்கள் ஒவ்வொரு நிலையிலும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகிறார். நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சஜித்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாக சிவமோகன் நேற்று தெரிவித்துள்ளார். பின்னர், ஆறு கட்சிகளின் கூட்டத்தில் உட்கார்ந்து பேசினார்கள். ஆறு கட்சிகளின் இணக்கத்துடன் 13 கோரிக்கைகள் வந்தது.

பத்து நாட்கள் கழித்து சுமந்திரன் பேசும்போது, 13 அம்ச கோரிக்கை தொடர்பாக யாருடனும் பேசவில்லை, அதற்காக நேரமொதுக்க கேட்கவுமில்லையென்றார். பல்கலைகழக மாணவர்கள், மற்ற கட்சிகளை முட்டாளாக்க கூடிய விதத்தில்தான் அவரின் கருத்து இருந்தது.

பின்னர் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் தானாக சஜித்தை ஆதரித்தார்கள். ஆனால், தம்முடன் ஆலோசிக்காமல் முடிவெடுக்கப்பட்டதாக செல்வம் அறிக்கை விட்டார்.

பின்னர் மன்னாரில் நடந்த கூட்டத்தில் கோட்டாபாயவை தோற்கடிக்க, சஜித்தை வெற்றிபெற வைக்க வேண்டுமென்றார். ஆனால் பல்கலைகழக மாணவர்களுடன் பேசும்போது, இந்த 13 கோரிக்கைகள் பற்றி பேசி ஆராய்ந்து முடிவெடுக்கலாமெனப்பட்டது, அத்துடன், தேர்தல் விஞ்ஞாபனங்கள் வந்ததன் பின்னர் ஆராய்ந்து முடிவெடுக்கலாமென்றார்.

ஆனால், சஜித்தை ஆதரிப்பதென தமிழ் அரசுக்கட்சி ஒரு முடிவெடுத்திருந்தனர். அதன் பின்னர் நடந்ததெல்லாம் நாடகம். தங்களது தேவைகளை கருதி, கூட்டமைப்பில் இல்லாத கட்சிகளையும் பங்காளிகளாக்கி, 13 அம்ச கோரிக்கையை தயாரித்து, பின்னர் அதை குப்பைத்தொட்டிக்குள் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இறுதியில் அனைவரையும் முட்டாளாக்கிவிட்டு சென்றுள்ளனர்.

ஏற்கனவே எடுத்த முடிவை ஏனையவர்கள் மீது திணிப்பதற்கான முயற்சியைத்தான் செய்தனர். இந்த சந்தர்ப்பத்தை பாவித்து தமிழ் மக்களின் குறைந்தபட்ச நலன்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற எந்த சிந்தனையுமிருக்கவில்லை. தேர்தல் விஞ்ஞாபனத்தில் வந்தாலே எல்லாம் சரியாகிவிடும், நிறைவேறிவிடும் என நினைக்க இவர்களை போல மற்றவர்கள் மடையர்கள் இல்லை.

2015ம் ஆண்டு எந்த நிபந்தனையுமில்லாமல் மைத்திரிபாலவிற்கு வாக்களிக்கும்படி கேட்டு, இன்று சம்பந்தன், சுமந்திரன், மாவை இன்று எம்மை ஏமாற்றிவிட்டார்கள் என கூறுவதை போல, சஜித்தை ஆதரிக்கும்போது எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரிப்பதாகவும், சஜித்தின் காலத்தில் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும் என சம்பந்தன் திருமலையில் சொல்கிறார். இன்னும் 5 வருடங்களின் பின்னர் எம்மை ஏமாற்றிவிட்டார் என சம்பந்தன், மாவை, சுமந்திரன் சொல்லக்கூடும் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here