என்னென்ன நோய்கள் ஒரு ஜாதகரை தாக்கக்கூடும்?

(ஜோதிடப் பார்வையில் – 6ஆம் பாவம்)

ஒருவரின் ஜாதகத்தில் 6ஆம் இடம் நோய், நொடிகள், பீடை, ஆயுத காயங்கள், விஷ உபாதைகள், பெண்களால் உண்டாகும் நோய்கள், வாத ரோகம் போன்றவை வரக்காரணமாகும் இடம். இங்குள்ள கிரகங்கள் மேற்சொன்ன நோய்களை தருவனவாக இருக்கும். என்னென்ன நோய்கள் ஜாதகர் அடைய எந்தெந்த கிரகங்கள் இருந்தால் அவை வந்தே தீரும் என்பதனை ஒரு சில லக்கினங்களுக்கு ஒரு சில கிரக அமர்வாலும், அவை பெறும் நட்சத்திர பாத சாரங்களுமே காரணமாக இருப்பதால்; அவை எவ்வாறு என்பதனை, விளக்கமாக அறியலாம்.

ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், லக்கினத்திற்கு 6ஆம் இடத்தில் சனி, ராகு, செவ்வாய் முதலான குரூர கிரகங்கள் இருந்தால், ஜாதகர் சத்ருக்களை நாசம் செய்வார் எனலாம். ஆனால், சுபக் கிரகங்கள் இருந்தால், ஜாதகர் நோயாளி ஆவார். ஒருவரின் ஜாதகத்தில் 6ஆம் இடத்தில் எத்தனை கிரகங்கள் இருக்கின்றனவோ, அத்தனை விரோதிகளைச் சொல்லவேண்டும். ஆனால் எவர் ஒருவரின் ஜாதகத்தில் 6ஆம் அதிபன் பலம் பெற்றிருக்கின்றாரோ, அவர் அவரின் சத்ருக்களை வென்று ஜெயம் அடைவார்.

பொதுவாகவே 6, 8ல் இருக்கும் கிரகங்களும்; 6, 8 அதிபர்களும் ஜென்ம லக்கினம் அல்லது சந்திரனுடன் கூடி இருந்தால், நீண்ட கால ரோகம் ஏற்படும், அது கப ரோகங்கள், நீர் சம்பந்தமான நோய்களும்; சூரியனுடன் கூடி இருந்தால் , கண் நோய் , ரத்தம் , இதயம் சம்பந்தமான நோய்கள் அல்லது வயிற்றில் ரோகங்களும் இதயம் சம்பந்தமான நோய்கள் அல்லது வயிற்றில் ஏற்படும் நோய்கள் பொதுவாக உருவாகும். செவ்வாயினால் கட்டி, பிளவை போன்ற ரண சம்பந்தமான நோய்களும் , புதனால் வாத நோய்களும், குருவானால் மெகா ரோகங்களும், சனியானால் வாத , பித்த ரோகங்களும் ; சுக்கிரனால் நீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மறைவிடங்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், ராகுவானால் குஷ்டம் போன்ற பெரு நோய்களும் ; கேதுவானால் வலிப்பு, சித்த பிரமை போன்ற நோய்களும் உண்டாகும்.

மேஷ லக்கின காரர்களுக்கு, 4ஆம் அதிபரான சந்திரன் 6 ல் இருந்தால், அநேக பகைவர்கள் ஏற்படுவார்கள். மாந்த்ரீகத்தால் பீடை உண்டாகும். எதையாவது நினைத்து சஞ்சலப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். 2ஆம் அதிபரான சுக்கிரன் 6 ல் இருந்தால், தொடை, முழங்கால் முதலான இடங்களில் நோய் உண்டாகும். சுக்கிரன் 7 ஆம் அதிபராகவும் இருப்பதால் ஜாதகரின் மனைவி / கணவன் நோயாளியாக இருப்பார். 10 மற்றும் 11 க்கு உடையவரான சனி 6 ஆம் இடத்தில் இருந்தால், நோய் , வேறு காரணங்களினால் தோன்றினாலும், விரைவில் நோய்களில் இருந்து நிவாரணம் பெறுவர் .

விருச்சிக லக்கின காரர்களுக்கு, 6 ஆம் இடத்தில், சுப கிரகங்கள் இருந்தால், ஜாதகர் நோயாளி ஆவார். சந்திரன் இருந்தால், மரணம் அல்லது மன நிம்மதி அற்ற நிலை ஏற்படவாய்ப்பு. தனத்துக்கும் பூர்வ புண்ணியத்திற்கும் அதிபரான குரு, 6 ல் இருந்தால், தொடை, முழங்கால் முதலான இடங்களில் நோய் உண்டாகும். அஸ்வினி – 2 , 3 மற்றும் பரணி -3 ஆம் பாதங்களில் நிற்கும் குருவானவர் , பகை நவாம்சம் பெறுவதால் இது நிச்சயம் தவிர்க்க முடியாததாகும். 3, 4 ஆம் இடத்திற்கு அதிபரான சனி, 6 ல் இருந்தால், ஜாதகர், முதிர்ந்த பெண்ணிடம் ஆசை கொள்வதால், நோயாளி ஆவார். இவரின் மாமன் வர்கத்தவருக்கும் நோய் ஏற்பட வாய்ப்பு. ராகு, 6ஆம் இடத்தில் இருந்தால், மறைவிடத்தில் நோய் மற்றும் சரும நோய் உடையவர். பெண்ணாசைப் பிடித்தவராக இருப்பார்.

மீன லக்கின காரர்களுக்கு, 2ஆம் இடத்திற்கும், 9ஆம் இடத்திற்கும் அதிபதியான செவ்வாய் 6 ஆம் இடத்தில் இருக்க பிறந்தவர்களுக்கு, தொடை, முழங்கால் முதலான இடங்களில் நோய் உண்டாகும். வயிற்றுக் கோளாறு, உடையவர். மன நோய்களுக்கு ஆளாவர். இங்குள்ள செவ்வாய், மகம் – 4 ல் நீச்ச நவாம்சமும் , மகம் -3 மற்றும் பூரம் -2ல் பகை நவாம்சமும் பெறுவதால், மேற்சொன்ன நோய்கள் உண்டாக அதிக வாய்ப்பாக இருக்கும். குரு, 6 ஆம் இடத்தில் இருந்தால், வாத நோய் தாக்கக் கூடும். இவர் ஜோதிடம் அறிந்தவராக இருக்கலாம். இங்குள்ள குரு, மகம், 2 , 3 பூரம் 3 ல் பகை நவாம்சம் பெறுவதால், மேற்சொன்னவை நிச்சயம் நடந்தேறும். சுக்கிரன், 6 ஆம் இடத்தில் இருந்தால், கண் நோய் உண்டாகும், வயது முதிர்ந்த பெண்ணிடம் ஆசை கொள்வார். அதனால் உடலில் நோய் வரக் காரணமாகும்.

மொத்தத்தில் இவ்வகை அமைப்புள்ள ஜாதகர், ஒழுக்கம் இல்லாதவர் எனலாம். மகம்-4; பூரம் -1 ல் பகை நவாம்சம், பூரம் -2 இல் நீச்ச நவாம்சம் அடைவதால், மேற்சொன்ன பலன்கள் அடைய காரணமாகலாம். லாப அதிபரான சனி , 6 ஆம் இடத்தில் இருக்க பிறந்தவர் நீடித்த ரோகம் உடையவர். அந்நிய ஸ்திரீகளை சுற்றி அலைவார். இவர்க்கு, காது மந்தம், மனைவிக்கு நோய் அல்லது பேய் பிடிப்பதால், அலைச்சலும், செலவுகளும் உண்டாகும். மகம் – 1 ல் நீச்ச நவாம்சமும் ; மகம் -4, பூரம் -1 , 4 ல் பகை நவாம்சம் பெறுபவர்கள் நிச்சயம் மேற்சொன்ன பலன்கள் அடையப்பெறுவர்.

மேற்சொன்னவை யாவும் ஒரு சிலவே, ஒவ்வொருவரின் ஜனனகால ஜாதகத்தை முழு ஆய்வுக்குப் பிறகே சரியாக தீர்மானிக்கப்படவேண்டும். மேலும், இங்கு ஒரு சில லக்கினகாரர்களுக்கு மட்டுமே பலன்கள் கூறப்பட்டுள்ளன. ஒரு சாதாரண மனிதர் ஜோதிட அறிவைப் பெறவே இவை கூறப்பட்டுள்ளது. அனைத்து லக்கின காரர்களுக்கும் சொல்வதாக இருப்பின் ஒரு ஜோதிடம் பயில அளிக்கும் பாடப்பகுதி ஆகிவிடும். ஜோதிடம் பயிலும் ஆர்வம் வளர்ப்பதற்கும், சிறந்த ஜோதிடர்களை அணுகுவதற்குமாய் இந்த கட்டுரை வடிவமைத்துள்ளேன்.

சாயியைப் பணிவோம் நலம் யாவும் பெறுவோம்.

– ஜோதிட ரத்னா. தையூர். சி. வே. லோகநாதன்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here