ஏ.டி.எம் இயந்திரத்தில் 200 ரூபாவிற்கு பதில் 500 ரூபா வந்ததால் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஏ.டி.எம் இயந்திரத்தில் 200 ரூபாவிற்கு பதில் 500 ரூபா வந்ததால், மக்கள் கூட்டம் அலைமோதியது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில் ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில், 200 ரூபா எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு 500 ரூபா வந்ததால் பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்தச்செய்தி காட்டுத்தீ போல பரவியதால், ஏ.டி.எம் இயந்திரத்தை நோக்கி மக்கள் படையெடுக்க துவங்கினர். ஏ.டி.எம்மில் குவிந்த மக்கள், இயந்திரத்தில் 200 ரூபா பட்டனை அழுத்தி 500 ரூபா ஆக எடுத்து சென்றுள்ளனர்.

இதுபற்றிய தகவல், வங்கி அதிகாரிகளுக்குச் சென்றது. அவர்கள் உடனடியாக அந்த ஏடிஎம் மையத்துக்கு வந்தனர். பின்னர் அந்த மையத்தைப் பூட்டினர். இதனால், அதிக பணம் எடுக்கும் ஆசையில் வந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது பொதுத்துறை வங்கி ஏ.டி.எம். என்றாலும் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தினர் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் 200 ரூபாய் நிரப்ப வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நிரப்பியதால் இந்த குளறுபடி ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினர். மேலும் இதுவரை எவ்வளவு பணம் இதுபோன்று போனது என்று தெரியவில்லை. இதற்கான நஷ்டத்தை பணம் நிரப்பும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here