சஜித்தை ஆதரித்த ரெலோவின் முடிவு தவறு… சிவாஜிக்கே ஆதரவு: ரெலோவிற்குள் இன்னொரு ரெலோ முடிவு!

சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு எடுத்த தீர்மானம் பிழையானது. நமது ஆதரவு சிவாஜிலிங்கத்திற்கே என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது கட்சியின் யாழ் மாவட்டக்குழு.

சில தினங்களின் முன்னர் ரெலோவின் தலைமைக்குழு கூடி, சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென முடிவெடுத்துள்ள நிலையில், யாழ் மாவட்டக்குழுவின் இந்த தீர்மானம் கட்சிக்குள் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ரெலோவின் யாழ் மாவட்டக்குழு கூட்டம் இன்று (9) யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரட்ணம், சபா.குகதாஸ் மற்றும் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய கூட்டத்திற்கு முழுமையான அழைப்பு விடுக்கப்படவில்லையென தெரிகிறது. சுமார் 65 யாழ் மாவட்டக்குழுவில் அங்கம் வகித்தாலும் சுமார் அரைப்பங்கினரே வந்திருந்தனர்.

கூட்டத்தின்போது, யாழ் மாவட்ட பொறுப்பாளரான சில்வெஸ்டர், சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தலைமைக்குழுவின் முடிவு தவறானது. இந்த தீர்மானத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது, உடனடியாக பொதுக்குழுவை கூட்ட முடியாது என்றார். இதையடுத்து, ஏனைய பல உறுப்பினர்கள் அதை ஆதரித்தனர். கட்சியின் தலைமைக்குழு எடுத்த முடிவு தவறானது, அதை தாம் ஏற்க முடியாது என தெரிவித்தனர்.

முன்னாள் யாழ் மாவட்ட உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், வலி கிழக்கு தவிசாளர் தியாகராசா நிரோஸ், நிர்மலநாதன், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கஜிதரன்  உள்ளிட்டவர்கள் அதை எதிர்த்தனர். கட்சி எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட வேண்டும் என்றனர். கட்சிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குழுக்கள் உள்ளன, ஒவ்வொரு மாவட்டமும் தத்தமது இஸ்டத்திற்கு முடிவுகளை எடுக்க முடியாது. ஏனைய கட்சிகள் எவ்வளவு கட்டுப்பாடாக இருக்கிறார்கள், ரெலோ யாழ் மாவட்டக்குழுதான் கட்டுப்பாடின்றி செயற்படுகிறது என்றனர்.

எனினும், கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் இதை ஏற்கவில்லை.

ரெலோவில் அண்மைக்காலத்தில் இணைந்து சிறிகாந்தாவுடன் நெருக்கமாக செயற்பட்டு வரும் இளம் ரெலோ உறுப்பினர்களே, சிவாஜி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தனர்.

இந்த விவாதங்கள் முடிவற்று நீண்டதால் அதிருப்தியடைந்த ரெலோவின் முன்னாள் யாழ் மாவட்ட பொறுப்பாளர் திலீப், மத்தியகுழு உறுப்பினர் ரெமி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா, தலைமைக்குழு முடிவை விமர்சனம் செய்தார். இந்த முடிவின் பின்னால் சில டீல்கள் இருந்ததாகவும், அவை பற்றி இப்போது பேசவில்லையென்றும் தெரிவித்தார். தலைமைக்குழுவிற்குள் தகுதியற்றவர்கள் சிலர் வருவதற்கு தான் கதவைத்திறந்து விட்டு தவறிழைத்து விட்டேன் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து சில உறுப்பினர்கள் தாம் சிவாஜியை ஆதரிக்கப் போவதாக கையை உயர்த்தினர். வாக்கெடுப்பு நடத்தி சிவாஜிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றவே, யாழ் மாவட்ட குழு அங்கத்தவர்களிற்கு முழுமையாக அழைப்பு விடுக்கப்படவில்லையென்றும், நீண்டகாலத்தின் பின்னர் சிலர் “கூட்டி“ வரப்பட்டதாகவும் தீர்மானத்தை எதிர்த்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் சிவாஜிக்கு ஆதரவாக 23 பேர் வாக்களித்தனர். யாழ் மாவட்ட உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், வலி கிழக்கு தவிசாளர் தியாகராசா நிரோஸ், நிர்மலநாதன், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கஜிதரன்  உள்ளிட்ட 5 பேர் அதை எதிர்த்தனர். 4 பேர் நடுநிலை வகித்தனர்.

இதேவேளை, ரெலோவின் இன்றைய கலந்துரையாடல் நடைபெற்ற யாழ் மாவட்ட அலுவலகத்தின் உள்ளும் வெளியிலும் சிவாஜிலிங்கத்தின் தேர்தல் பிரச்சார ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. ரெலோவின் யாழ் மாவட்ட அணியிலுள்ள ஒரு பகுதியினர் சிவாஜியை ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்பக்க குழு-

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here