சேறுபூசும், கப்பம் பெறும் நோக்கத்துடனேயே என் மீது குற்றச்சாட்டு… பின்னணியில் ஹிஸ்புல்லா: தொலைபேசி உரையாடல் ஆதாரங்களையும் வெளியிட்டார் ஹக்கீம்!

தன் மீதான அண்மைய குற்றச்சாட்டுக்கள் கப்பம் கோருவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையென்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம். சாஹ்ரானுடன் தன்னை தொடர்புப்படுத்திய குற்றச்சாட்டின் பின்னனியில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும், பொதுஜன பெரமுனவினருமே உள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பான தொலைபேசி உரையாடல் ஆதாரங்களையும் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (7) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவற்றை அம்பலப்படுத்தினார்.

கடந்த காலங்களில் ஊடகங்களின் ஊடாக ரிஷாத் மாஹருப் என்ற நபர் தவறான சேறுப்பூசும் வகையிலான பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தார். இவ்வாறான செய்திகளுக்கு தனியார் தொலைக்காட்சி ஒன்று (ஹிரு) மாத்திரமே முன்னுரிமை கொடுத்தது. இவ்விடயம் தொடர்பில் குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தில் பிரதானியிடம் தொடர்பு கொண்டு பேசினேன்.

அரசியல்வாதிகள் தொடர்பில் ஒரு செய்தி கிடைக்கப் பெறும் போது அதனை பகிரங்கப்படுத்துவதற்கு முன்னர் அவர் தரப்பு நிலைப்பாட்டினையும் எடுத்துரைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். ஆகவே என் பக்க நியாயத்தினை குறிப்பிட பலமுறை கோரியிருந்த போதும் அந்த நிறுவனம் எவ்வித பதிலையும் குறிப்பிடவில்லை.

ஒருதலைப்பட்சமான செய்திகளை மாத்திரமே வெளியிட்டது.

தவறான பிரச்சாரங்களை ஊடங்கள் வாயிலாக முன்னெடுத்த நபரான ரிஷாத் மஹருப் என்ற நபரின் நோக்கம் என்ன என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டிய தேவை காணப்பட்டது.

இந்த நபர் ஒருமுறை என்னை எனது காரியாலயத்திலும் வந்து சந்தித்து சென்றுள்ளார். பணத்திற்காகவே இவ்வாறான போலி செய்திகளை ஒரு தரப்பினருக்கு ஆதாரவாக முன்னெடுத்து செல்கின்றார் என்பது அறிந்துக் கொள்ள முடிந்தது.

குறித்த நபர் என்னிடம் நேரடியாக கப்பம் கோர முடியாததால் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிப்லி பாரூக்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை சேறு பூசும் விதத்திலான செய்திகளை பரப்பி விடுமாறு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவும், பொதுஜன பெரமுனவின் தரப்பினரும் குறிப்பிட்டதாக வும். அதற்கு தனக்கு உரிய பணம் கிடைக்கப் பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே நீங்கள் எனக்கு 1கோடி ரூபாய் கொடுத்தால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றமற்றவர் என்பதை ஊடகங்கள் வாயிலாக 200 சதவீதம் நிரூபிப்பேன் என்று குறிப்பிட்டார்.

இவர் தொலை பேசியில் உரையாடிய அனைத்து விடயங்களும் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக ஊடகங்களை தவறான முறையில் பாவித்துக் கொள்ளும் இவ்வாறான நபர்களுக்கு ஊடகங்கள் ஆதரவாக செயற்படுவது ஊடக தர்மத்திற்கு முரணானதாகும்.

எவ்விதமான உரிய ஆதாரங்களும் இன்றி தவறான செய்திகளுக்கு முன்னுரிமை வழங்கிய பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக நிச்சயம் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்வேன்.

தற்போது கிடைக்கப் பெற்றுள்ள இந்த குரல் பதிவு ஆதாரங்களை கொண்டு அதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்வேன்.

பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவாகவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா செயற்படுகின்றார். வங்குரோத்து அரசியல் செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த தொலைபேசி உரையாடல்களையும் வெளியிட்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here