கினிகத்தேன துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

கினிகத்தேனபொல்பிட்டியவில் நேற்று மாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எஸ்.பி.திசாநாயக்க எம்.பியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இரண்டு பேரும் நவம்பர் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

திசாநாயக்க எம்.பி நேற்று இரவு பயணித்த வாகனத்தைத் தடுத்ததற்காக இருவர் மீது பாதுகாப்பு பணியிலிருந்த பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் மூன்று துப்பாக்கி வெற்றுக் கோதுகளை பொலிசார் கண்டுபிடித்தனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள், பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்திய வாகனம் என்பவற்றை பொலிசார் கைப்பற்றினர். அவையும் நீதிமன்றத்தில் சாட்சியங்களாக ஒப்படைக்கப்பட்டன.

கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்கு சொந்தமான கோத்தெலென பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் திசநாயக்க கலந்து கொண்ருந்தார். திசநாயக்க மற்றும்  பாதுகாப்புப் படையினர் நேற்று இரவு கினிகத்தேன-பொல்பிட்டிய வீதியில் நவலபிட்டியவிலிருந்து மினுவந்தெனிய வழியாக பயணித்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது அவர்களின் வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது. இதையடுத்து அந்த பகுதி இளைஞர்களிற்கும், பாதுகாப்பு பிரிவினருக்குமிடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு திசநாயக்கவும் வந்தார்.

இதன்பின்னரே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. இதில் இருவர் காயமடைந்தனர்.

கினிகத்தேன, மினுவந்தெனியவை சேர்ந்த ரவீந்திர ராஷன் (22) வலது கையில் காயமடைந்து கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொல்பிட்டியவை சேர்ந்த சரித் மதுசன் (23) என்பவர் இடது காலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பாதுகாப்புப் பணியாளர்கள் தலத்துயோய பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கினிகத்தேன பொல்பிட்டி பகுதியில் சிலர் தமது வாகனத்தைத் தாக்க முயன்றதாக முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here