நடைபாதையில் வசித்த மூதாட்டியிடம் கத்தை, கத்தையாக பணம், நகை

புதுவையில் நடைபாதை பகுதியில் வசித்த மூதாட்டியிடம் கத்தை கத்தையாக பணம் மற்றும் நகை இருந்தது.

புதுவை மகாத்மாகாந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக அந்த கடைகளை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளன.

ஏற்கனவே அங்கு கடைகள் வைத்திருந்தவர்களுக்கு மீண்டும் வாடகைக்குவிட நிர்வாகம் முடிவெடுத்தது. இதையொட்டி அந்த கடைகளின் முன்பு நடைபாதையில் தங்கி இருந்த பிச்சைக்காரர்களை கோவில் நிர்வாகம் அப்புறப்படுத்தியது. அப்போது ஒரு கடையின் முன்பு தனது பழைய துணிமணிகளுடன் அமர்ந்திருந்த மூதாட்டி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

உடனே ஊழியர்கள் அவர் வைத்திருந்த பையை எடுத்து அப்புறப்படுத்தினர். அப்போது மூதாட்டி அந்த பையை விடாப்பிடியாக இறுக பிடித்துக் கொண்டார். ஒரு வழியாக அந்த பையை அவரிடம் இருந்து கைப்பற்றிய ஊழியர்கள் சோதனை செய்ததில் அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதில் கத்தை கத்தையாக 5, 10, 20 ரூபாய் நோட்டுகளும், சில்லரை நாணயங்களும் இருந்தன.

இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் உடனடியாக பெரியகடை போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த மூதாட்டி வைத்திருந்த பையில் இருந்த பணத்தை எண்ணிப்பார்த்தனர். அதில் ரூ.15 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.

மேலும் 3 பவுன் தங்க சங்கிலி, கம்மல், மூக்குத்தி ஆகிய தங்க நகைகளும் இருந்தன. 2 வங்கி கணக்கு புத்தகங்கள் இருந்தன. ஒரு வங்கி கணக்கில் ரூ.64 ஆயிரமும், மற்றொரு வங்கி கணக்கில் ரூ.34 ஆயிரமும் இருந்தது. அதனை போலீசார் பெற்றுச்சென்றனர். இதனை பார்த்த அந்த மூதாட்டி தனது பணம் போச்சே என்று கதறி அழுதார்.

தொடர்ந்து போலீசார் அந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரமணன் என்பவரது மனைவி பர்வதம் (வயது 80) என்பது தெரியவந்தது. சாரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். அவரது குடும்பத்தினர் அவரை விட்டு சென்றதால் கடந்த சில மாதங்களாக ஈஸ்வரன் கோவில் நடைபாதையில் அவர் தங்கி இருந்தது தெரியவந்தது. சென்னையிலும், கள்ளக்குறிச்சியிலும் உள்ள மூதாட்டியின் உறவினர்களுக்கு இதுபற்றி போலீசார் தகவல் தெரிவித்தனர். முதியோர் காப்பகத்தை சேர்ந்தவர்கள் அங்கு வந்து அந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தெருவில் வசித்த மூதாட்டியிடம் கத்தை கத்தையாக பணம், நகைகள் மற்றும் வங்கி கணக்குகளில் ஒருலட்சம் ரூபாய் வரை இருப்பு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here