வவுனியா இரகசிய பங்களா… ஆதரவு 11… எதிர் 4: ரெலோ தலைமைக்குழுவில் நடந்தது என்ன?

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)வின் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இதன்போது முடிவெடுக்கப்பட்டது. ஆறு மணித்தியாலங்கள் நீடித்த நீண்ட விவாதத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ரெலோவின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், ரெலோவின் கூட்டம் நடக்கும் இடம் எது என்ற சுவாரஸ்யமான கேள்வியும் எழுந்திருந்தது. செய்தியாளர்களின் கண்ணை மண்ணை தூவி விட்டு, இரகசியமான இடமொன்றில் இந்த கூட்டம் நடந்தது.

ரெலோவின் கூட்டம் எங்கு நடக்கிறது என செய்தியாளர்கள் வவுனியாவில் சல்லடையிட்டபோதும், கூட்ட இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

கூவத்தூர் ரிசோட் பாணி

கூவத்தூர் ரிசோட் பாணியில் ரெலோ தலைமைக்குழு உறுப்பினர்கள் இரகசிய இடமொன்றிற்கு கொண்டு செல்லப்பட்டதாக நேற்று மாலை குறிப்பிட்டிருந்தோம்.

வழமையில் ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் வவுனியாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கும். நேற்றைய கூட்டமும் அங்குதான் நடக்குமென செய்தியாளர்களிற்கு சொல்லப்பட்டிருந்தது.

எனினும், செய்தியாளர்கள் அங்கு சென்றபோது, அங்கு யாருமிருக்கவில்லை. சிறிது நேரத்தின் பின்னர்தான் ரெலோ மாற்று ஏற்பாடொன்று செய்தது அவர்களிற்கு தெரிய வந்தது.

இதற்குள், ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினர்களிற்கும் கூட்டம் நடக்குமிடம் பற்றிய தகவல் தெரிந்திருக்கவில்லை. ஒவ்வொரு பிரதேசத்திலிருந்து வரும் உறுப்பினர்களின் வாகனங்களும் வவுனியா அலுவலகத்தை நெருங்கும் சமயத்தில்தான் மாற்று ஏற்பாடு பற்றிய தகவல் வழங்கப்பட்டு, அந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூட்டத்தில் கலந்து கொண்ட சில பிரமுகர்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

வவுனியா பண்டாரிக்குளத்திலுள்ள பெரிய வீடொன்றில் கூட்டம் நடந்தது.

2 மணிக்கு கூட்டம் ஏற்பாடாகியிருந்த போதும், கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேரவில்லை. மாலை 4 மணியளவில் வந்து சேர்ந்தார். அவரது காரில் சபா.குகதாஷூம் வந்தார்.

15 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நீண்ட விவாதம் நடந்தது.

கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தெரிவித்தனர். செயலாளர் என்.சிறிகாந்தா உள்ளிட்ட சிலர் நடுநிலை வகிக்க வலியுறுத்தினர். இரண்டு வேட்பாளர்களின் விஞ்ஞாபனத்திலும் நம்பிக்கைக்குரிய விடயங்கள் இல்லாததை சுட்டிக்காட்டி, நடுநிலை வகிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

இதேவேளை, முன்கூட்டியே திட்டமிட்ட பாணியில் ஒரு தரப்பு தேர்தல் விஞ்ஞாபனங்களுடன் சென்றிருந்தது. சுரேன் ஐ.தே.க விஞ்ஞாபனத்துடன் சென்றார். விந்தன் கனகரட்ணம் ஜேவிபி மற்றும் இதர கட்சிகளில் விஞ்ஞாபனங்களின் பத்திரிகை துணுக்குகளை கொண்டு சென்றிருந்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்ட ரெலோவின் ஆரம்ப கூட்டத்தில் 13வது திருத்தத்தின் அடிப்படையில் இணக்கப்பாடு ஏற்படுத்தவதென்றும், முன்வைக்க வேண்டிய சில நிபந்தனைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டிருந்தது. இந்த யோசனைகளை சிறிகாந்தாவே முன்வைத்திருந்தார்.

நேற்று இதை சுட்டிக்காட்டிய சுரேன், அதிகார பரவலாக்கல், அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் சஜித்தின் விஞ்ஞாபனத்தில் உள்ள சாதகமாக புள்ளிகளை சுட்டிக்காட்டினார். ரெலொவின் யோசனைகளிற்கும், அவற்றிற்குமிடையிலுமுள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டினார்.

நீண்ட வாதப்பிரதிவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

வாக்கெடுப்பில், சஜித்தை ஆதரிக்க வேண்டுமென- கட்சி தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பிரசன்னா இந்திரகுமார், கோவிந்தன் கருணாகரம் (ஜனா), வினோ நோகராதலிங்கம், விந்தன் கனகரட்ணம், நித்தியானந்தம், குரூஸ், அஞ்சலா தேவி, கமல்ராஜ், சுரேன், புவனேஸ்வரன் ஆகியோர் வாக்களித்தனர்.

நடுநிலை வகிக்க வேண்டுமென- கட்சி செயலாளர் என்.சிறிகாந்த, சபாகுகதாஸ், கணேசலிங்கம் சொக்கன், ஹென்ரி மகேந்திரன் ஆகியோர் வாக்களித்தனர்.

11 வாக்குகள் சஜித்தையும், 4 வாக்குகள் நடுநிலைமையையும் குறிப்பிட்டன. இதனடிப்படையில் பெரும்பான்மை முடிவை, 15 உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ள, ஏகமனதாக சஜித்தை ஆதரிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, தமிழ் அரசுக்கட்சி பங்காளிகளுடன் கலந்துரையாடாமல் தனித்து தீர்மானம் எடுத்ததை பலரும் கண்டித்தனர். தமிழ் அரசு கட்சியின் தன்னிச்சையான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த சில விடயங்களில் கரறான முடிவுகளை எடுக்க வேண்டுமென உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அது குறித்தும் விபரமாக விவாதிக்கப்பட்டது.

இதேவேளை, அண்மையல் யாழில் நடந்த நிகழ்வொன்றில் கட்சி செயலாளர் சிறிகாந்தா உரையாற்றிய போது, இரண்டு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிக்காமல் அதிரடி முடிவெடுக்கவுள்ளதாக தெரிவித்தார். கட்சி முடிவில்லாமல் இப்படி பகிரங்கமாக பேசுவதை வினோ நோகராதலிங்கம் சுட்டிக்காட்டினார். ஏனையவர்களும் அதை ஆதரித்தனர்.

-இன்போர்மர் இசக்கி-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here