96 வயது தந்தையை கைவிட்ட பிள்ளைகளை நீதிமன்றத்திற்கு அழைத்து நீதிபதியிட்ட அதிரடி உத்தரவுகள்!

மன்னாரில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட 96 வயது முதியவர் தொடர்பில் மன்னார் நீதிவான் நீதிமன்றம் அதிரடியான உத்தரவுகள் பிறப்பித்துள்ளது.

பிள்ளைகளினால் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வாழ்ந்துவந்த 96 வயதுடைய முதியவர் தொடர்பில் கடந்த 24.10.2019ம் திகதியன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணிகளால் விசேட விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

மேற்படி முதியவரின் பிள்ளைகளான பிரதிவாதிகளுக்கு இன்றைய தினம் (07) மன்றில் தோன்றுமாறு நீதிவான் அழைப்புக் கட்டளை பிறப்பித்திருந்தார். அதற்கமைய இன்றைய தினம் குறித்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த வயோதிபர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், சட்டத்தரணி அ.அன்ரனி றொமோள்சன் மற்றும் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணிகளான நஜ்மி ஹுசைன் மற்றும் கோபாலலிங்கம் கௌமிகா அகியோர் முன்னிலையாகி இருந்ததோடு குறித்த பிரதிவாதிகள் சார்பாக சட்டத்தரணி தர்மராஜா வினோதன் மற்றும் சட்டத்தரணி யூலியானா குலாஸ் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.

குறித்த வழக்கின் விசாரணையானது நீண்டநேரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு குறித்த பிரதிவாதிகள் சார்பாக தோன்றிய சட்டத்தரணிகள் பல்வேறு சட்ட ஆட்சேபனைகளை எழுப்பியிருந்தனர்.

இதன்போது குறித்த முதியவர் சார்பில் தோன்றிய சிரேஷ்ட சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் அவர்கள் பின்வருமாறு நீதிமன்றுக்கு தனது சமர்ப்பணத்தினை முன்வைத்திருந்தார். குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் மேற்படி பிரதிவாதிகளான பிள்ளைகள் கைவிடப்பட்டிருந்த முதியவரை பராமரிக்கும்பொருட்டு தமது வீட்டுக்கு அழைத்து சென்றிருந்தமைக்காக திறந்த நீதிமன்றில் முதியவர் சார்பாக மனமார்ந்த நன்றிகளை பிரதிவாதிகளான பிள்ளைகளுக்கு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

மேலும் குறித்த வழக்கு தாக்கல் செய்ததன் நோக்கம் பிள்ளைகளான பிரதிவாதிகளை தண்டிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக குறித்த முதியவரை பிள்ளைகள் உரியவாறு பராமரிக்க வேண்டும் என்பதற்காகவும், மேலும் இவ்வாறான வயது முதிர்ந்த பெற்றோர்களை பராமரிக்காமல் கைவிட்ட மற்றும் கைவிட நினைக்கின்ற பிள்ளைகளுக்கு இது ஓர் பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகவேயாகும் எனவும் தெரிவித்திருந்தார்.

பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்கிய எம் பெற்றோர்களை தமது உயர் இருக்கும்வரை உரியமுறையில் பராமரித்து பாதுகாக்க வேண்டிய தார்மீக பொறுப்பு பிள்ளைகளாகிய எமக்கு உள்ளது என்பதை தெரிவித்துள்ளதோடு, அந்த பொறுப்பிலிருந்து எவரும் நழுவிட கூடாது எனவும் தெரிவித்திருந்தார்.

குறித்த வழக்குத்தாக்கல் செய்ததன் பின்னர் விரைந்து செயற்பட்ட அதிகாரிகளுக்கும் தனது விசேட நன்றிகளை தெரிவித்திருந்தார். குறித்த வழக்கு தொடர்பில் இடைக்கால கட்டைளையொன்று வழங்கப்படவேண்டுமென்றும் குறித்த கட்டளை வலுவிலிருக்கும் காலப்பகுதியில் முதியவர் உரியமுறையில் பராமரிக்கப்படுகின்றாரா என்பதை உரிய அதிகாரிகள் மேற்பார்வை செய்ய வேண்டுமென்றும் அது தொடர்பில் குறித்த உத்தியோகர்களினால் நீதிமன்றுக்கு முறைப்படி அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டுமென்றும் விண்ணப்பம் செய்திருந்தார்.

மேலும் முதியவர் அவரது பூர்வீக இல்லத்தில் எவரது தலையீடுகளுமின்றி அமைதியான முறையில் வாழ்வதற்கான ஒர் கட்டளையினை ஆக்குமாறும், பிள்ளைகள் முதியவரை இறுதிவரை உரியமுறையில் பராமரிக்க வேண்டுமென்ற ஓர் கட்டளையை பிறப்பிக்குமாறும் நான்கு பிள்ளைகளும் மாதாந்தம் நீதிமன்று பொருத்தமென கருதும் ஓர் பணத்தொகையினை முதியவரின் வங்கி கணக்கில் வைப்பிலிட வேண்டுமென்ற ஓர் கட்டளையை பிறப்பிக்குமாறும் தனது சமர்ப்பணத்தை முன்வைத்திருந்தார். இதன்போது பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் குறித்த வயது முதிர்ந்த தந்தையை மேற்படி பிரதிவாதிகளான பிள்ளைகள் தமது கட்டுக்காவலிலும் பராமரிப்பிலும் வைத்துக்கொள்ள தயாராக இருப்பதாக மன்றுக்கு தெரியப்படுத்தி இருந்தனர்.

இதன்போது நீதவான் அவர்கள் பின்வருமாறு கட்டளையை பிறப்பித்திருந்தார்.

1.முதியவர் தனது மனைவி பிள்ளைகளோடு பூர்வீகமாக வாழ்ந்து வந்த திருமண இல்லத்தில் எவரது தலையீடோ இடையூறோ இன்றி வாழ்வதற்கு பிள்ளைகள் அனுமதிக்க வேண்டுமென்றும்,

2.மாந்தைமேற்கு பிரதேச செயலாளர், மற்றும் சமூகசேவை திணைக்கள உத்தியோகத்தர்கள் முதியவர் தொடர்பாக மேற்பார்வை செய்து நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும்,

3.பிரதிவாதிகளான நான்கு பிள்ளைகளும் முதியவரை உரியமுறையில் பராமரிக்க வேண்டுமென்றும்,

4.ஒவ்வொரு பிள்ளைகளும் மாதாந்தம் தலா ஐயாயிரம் ரூபாவினை  முதியவரின் வங்கி கணக்கில் வைப்பிலிட வேண்டுமென்றும் கட்டளை பிறப்பித்திருந்தார்.

இதன்போது சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் அவர்கள் மாதாந்தம் இருபதாயிரம் ரூபா பெருந்தொகைப்பணத்தினை மேற்படி பிரதிவாதிகள் முதியவருக்கு வைப்பிலிடுவதில் நிச்சயமாகவே சிரமம் இருக்கும் என்பதை நீதிமன்றுக்கு தெரிவித்தோடு குறித்த முதியவர் பிள்ளைகளிடமிருந்து உரிய பராமரிப்பு, அன்பு மற்றும் பாசத்தினையே அதிகம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேற்படி விண்ணப்பத்தை கவனத்தில் எடுத்த கௌரவ நீதவான் அவர்கள் ஒவ்வொரு பிள்ளைகளும் மாதாந்தம் தலா ஆயிரம் ரூபாவினை வங்கியில் வைப்பிலிட வேண்டுமென்ற கட்டளையை பிறப்பித்து குறித்த வழக்கினை கூப்பிடுதலுக்காக எதிர்வரும் 19.12.2019ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here