நாளை முதல் பொதுக்கூட்டங்களை ஆரம்பிக்கிறது கூட்டமைப்பு: இதுவரை ரெலோ ‘தொடர்பெல்லைக்கு வெளியில்’!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைக்குழு கூட்டம் தொடர்பான தகவல்கள் இரவு 9 மணிவரை வெளியாகவில்லை. இரகசிய இடத்தில் நடந்துவரும் தலைமைக்குழு கூட்டங்கள் வெளியில் கசியக்கூடாது என்பதற்காக கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைத்து முக்கியஸ்தர்களின் தொலைபேசிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இணைப்பேற்படும் இலக்கங்களிலிருந்து பதில் வரவில்லை.

இன்றைய தினம் அல்லது உடனடியாக தனது முடிவை அறிப்பதில்லை என்ற நிலைப்பாட்டிலா அல்லது காரசாரமான விவாதங்கள் நடப்பதால் கூட்டம் இழுபடுகிறதா என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

இதனால், இன்று மாலை கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் எந்த முடிவுமில்லாமல்  முடிவடைந்தது. ரெலோவின் முடிவிற்காக கூட்டமைப்பின் எம்.பிக்கள் காத்திருந்தபோதும், எந்த தகவலுமில்லாததால் கூட்டமைப்பின் எம்.பிக்கள் இன்று முடிவின்றி கலைந்தனர்.

இன்று மாலை 6 மணியளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடந்தது. இதன்போது, ரெலோவின் முடிவை அறிய முயன்றபோதும், யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடலில், மாவட்டம் தோறும் எப்படி பிரச்சார கூட்டங்களை நடத்துவதென ஆராயப்பட்டது. சஜித்திற்கு பகிரங்க ஆதரவை கூட்டமைப்பு அறிவித்துள்ள நிலையில், வாக்களிப்பு வீதம் குறைவாக இருந்தால் அது கூட்டமைப்பின் சறுக்கலாக அமையுமென்பதால் வாக்களிப்பை அதிகரிக்கும் முயற்சியில் எம்.பிக்கள் ஈடுபட வேண்டுமென இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.

ஐ.தே.கவுடன் அல்லாமல் தனித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித்தை ஆதரித்து அடுத்த சில நாட்களில் பிரச்சார கூட்டங்களை நடத்தவுள்ளது.

இந்த கூட்டத்தில் ரெலோ தவிர்ந்த ஏனைய இரண்டு கட்சிகளின் எம்.பிக்கள் மற்றும் தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here