நாளை கூட்டமைப்பின் உயர்மட்ட சந்திப்புக்கள்… நாளையே இறுதி முடிவு வரலாம்!

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பதென்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளை இரவு அல்லது நாளை மறுநாள் வெளியாகுமென தெரிகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாக புளொட் அமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு இன்று, இரா.சம்பந்தனிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கூடிய புளொட்டின் மத்தியகுழு, சஜித்தை ஆதரிப்பதென முடிவு செய்திருந்தது. அந்த முடிவு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமது நிலைப்பாடு குறித்து தனித்து அறிவித்தல் விடும் திட்டம் புளொட்டிடம் இல்லை. கூட்டமைப்பாகவே அதன் முடிவு வெளியாகவுள்ளது.

இதேவேளை, ரெலோ அமைப்பு நாளை தனது இறுதிமுடிவை எடுக்கவுள்ளது. ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் நாளை மதியம் 2 மணிக்கு வவுனியாவில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் முடிவடையும் வரை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு அறிவிக்கப்பட மாட்டாது.

இதேவேளை, ரெலோவின் ஒரு தரப்பு வேட்பாளர்கள் யாரையும் ஆதரிக்கக்கூடாதென்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக, செயலாளர் என்.சிறிகாந்தாவும் இந்த நிலைப்பாட்டில் இருக்கிறார். எனினும், ரெலோ தலைமைக்குழுவிலுள்ள கணிசமானவர்கள், சஜித் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். இதனால் நாளை சடுதியான மாற்றங்கள் வர வாய்ப்பிருக்கிறதா என்பது செல்வம் அடைக்கலநாதனின் கைகளிலேயே உள்ளது.

தமிழ் அரசு கட்சி மற்றும் இரா.சம்பந்தனின் நடவடிக்கைகளால் செல்வம் அடைக்கலநாதன் கணிசமான அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. எனினும், ரெலோவின் முடிவிற்கு நாளை மாலை வரை காத்திருக்க வேண்டும்.

இதேவேளை, நாளை மாலை 6 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளது. இரா.சம்பந்தனிற்கு அரசு வழங்கிய பங்களாவில் இந்த கூட்டம் இடம்பெறும். இந்த கூட்டத்தின் பின்னர் கூட்டமைப்பின் முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

எனினும், ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் வவுனியாவில் 2 மணிக்கு நடைபெறவுள்ளதால், ரெலோ எம்.பிக்கள் இந்த கூட்டத்தில் பங்குபற்ற வாய்ப்பில்லையென தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here