செல்வம், சித்தார்த்தனிடம் நேரடியாக ஆதரவு கோரினார் ரணில்!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமது கூட்டணியை ஆதரிக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (4) காலை பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த கோரிக்கையை விடுத்தார் என தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

இலங்கை தமிழ் அரசுக்கட்சி தனித்து நேற்று முடிவெடுத்திருந்தது. எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இரண்டும் இந்த முடிவெடுத்த முறையில் அதிருப்தியாக இருந்தன. இதையடுத்து, இரண்டு கட்சி தலைவர்களையும் சமரசப்படுத்தும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரடியாக தலையிட்டார் என்பதை தமிழ்பக்கம் அறிந்தது. மிக நம்பகரமாக ஐ.தே.க மூலங்கள் இதை தமிழ்பக்கத்திடம் உறுதிசெய்தன.

இன்று காலையில் இரண்டு தலைவர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்றைய தினமே நேரில் சந்தித்து பேச விரும்பம் தெரிவித்துள்ளார். எனினும், செல்வம் அடைக்கலநாதன் மன்னாரில் நிற்பதால் உடனடியாக சந்திக்க வாய்ப்பில்லையென தெரிவித்தார். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவிருப்பதால் சித்தார்த்தனும் இன்று சந்திக்க வாய்ப்பில்லையென்றார்.

இதன்போது, இருவரிடமும் தொலைபேசியிலேயே பேச்சு நடத்திய ரணில், ஐனநாயக தேசிய முன்னணியை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதற்கான அறிவித்தலை விரைவில் பகிரங்கப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

நாளை மறுநாள் (6) கட்சியின் தலைமைக்குழு கூடிய பின்னரே இறுதி முடிவை அறிவிக்க முடியுமென இதன்போது செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டினார்.

ரணில் அரசின் சில செயற்பாடுகளில் செல்வம் அடைக்கலநாதன் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக, பிரதமர் அமைச்சின் அபிவிருத்தி திட்ட நிதியொதுக்கீடுகளில் காட்டப்பட்ட பாரபட்சம் பற்றி ஏற்கனவே தமிழ்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். ரணிலுடன் நெருக்கமாக இருந்த தமிழ் அரசு கட்சியின் எம்.பிக்களிற்கு மாத்திரமே ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. அமைச்சு ஒதுக்கீடு செய்த சில ஒதுக்கீடுகளை நிறுத்தும்படி தமிழ் அரசுக்கட்சியின் பிரமுகர்களே ரணில் தரப்பிடம் கூறி நிறுத்திய சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன. இவ்வாறன பல சம்பவங்கள் அவரை எரிச்சலடைய வைத்திருந்தது. புதிய அரசாங்கத்திலும், இப்படியான குழறுபடிகள் இடம்பெறாமலிருக்க, ரணில் தரப்பை இம்முறை கொஞ்சம் இறுக்கிப்பிடிக்க ரெலோ தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதனால் இம்முறை ரெலோ கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாமென தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here