ஆனந்தபுரம் BOX இல் சிக்கிய புலிகள்: பிரபாகரன் தளபதிகளை சந்திக்காததன் காரணம்?

பீஷ்மர்

  • யுத்தத்தின் இறுதி நிமிடங்கள்
  • கட்டுக்கதைகளும் உண்மைக்கதைகளும்
  • மினி தொடர் 4

 ஆனந்தபுரம் BOX இற்குள் இருந்து பானு எப்படி ஒரு சிராய்ப்பு காயமுமில்லாமல் தப்பித்து வெளியேறினார்?

இந்த கேள்வி, விடுதலைப்புலிகளின் புதிதாக இணைந்த கீழ்மட்ட உறுப்பினர்கள் சிலரிடம் கூட இருந்தது. தளபதி பானுவை சுற்றி ஏதோ மர்மங்கள் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். அந்த அதுதான் பானுவை பற்றிய சில தவறான அபிப்பிராயம் வளர காரணமாக இருந்தது.

இன்றைய திகதியில் பேஸ்புக்கில்- நாங்களும் போராளிகளாக இருந்தோம் என கருத்து கந்தசாமிகளாக எழுதுபவர்கள் பெரும்பாலானவர்கள் இந்த வகையானவர்கள்தான். இப்படியாக உருவாக்கப்பட்ட கதைகளை கேட்டு, எழுதிக் கொண்டிருப்பவர்கள்தான் அவர்கள்.

புதுக்குடியிருப்பிலிருந்து முன்னேறிய 53வது டிவிசன், தேவிபுரத்தின் ஊடாக, இரணைப்பாலை சந்தியை நெருங்கிய 58வது டிவிசன், மந்துவில் பகுதியில் நெருக்கடி கொடுத்துக்கொண்டிருந்த அதிரடிப்படை என புலிகளை மூச்சுவிட முடியாத நிலைமைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த சமயத்தில்தான் புலிகள் ஆனந்தபுரத்தில் BOX அடிக்கும் முடிவை எடுத்தனர். இந்த முடிவின் பின்னால் பல சுவாரஸ்ய, அதிர்ச்சி, துயர செய்திகள் எல்லாம் உள்ளன. அதை இப்பொழுது நாம் குறிப்பிடவில்லை. இறுதியுத்தத்தில் நடந்தது என்ன தொடரில், ஆனந்தபுரம் BOX ஐ புலிகள் ஏன் உருவாக்கினார்கள், அங்கு நடந்தது என்ன, ஒரே சமயத்தில் எல்லா தளபதிகளும் ஏன் அங்கு மாட்டினார்கள் என்ற விபரத்தை விலாவாரியாக குறிப்பிடுவோம். இப்பொழுது மேலோட்டமாக குறிப்பிடுகிறோம்.

ஆனந்தபுரம் BOX இற்குள் மாட்டிய புலிகளின் தளபதி பானு மட்டுமல்ல. தீபன், கடாபி, விதுஷா, துர்க்கா, மணிவண்ணன், கோபித், சுயாகி, நாகேஷ் என புலிகளின் முன்னணி தளபதிகளில் முக்கால்வாசிப்பேர் அதற்குள் சிக்கினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மரணமானார்கள். பானு தப்பித்தார்.

ஆனந்தபுரம் BOX

ஆனந்தபுரம் BOX இற்குள் இருந்து தப்பித்து வெளியேறிய ஒரே தளபதி பானு மட்டுமல்ல. தளபதி நாகேஷூம் தப்பித்து வெளியேறினார். அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அவருடன் நான்கைந்து, போராளிகளும் தப்பித்து வெளியேறியிருந்தனர். பானுவுடனும் சில போராளிகள் தப்பித்து வெளியேறினர். இவர்களை விட, உதிரிகளாக பல போராளிகள் தப்பித்து வெளியேறினார்கள்.

ஆகவே, ஆனந்தபுரம் BOX இற்குள் இருந்து தப்பித்து வெளியேறிய ஒரே ஆள் பானு அல்ல!

பானு இராணுவத்துடன் தொடர்பில் இருந்தார், அதனால்தான் அவரால் தப்ப முடிந்தது என்பது தவறான தகவல். ஆனந்தபுரத்தின் வரைபடம் தெரிந்தவர்களிற்கு ஒரு விசயம் புரியும்- அந்த சிறிய பரப்பிற்குள் நடந்த உக்கிரமோதலில், எனது ஆள் யாரென பார்த்து, அவரை தவிர்த்து, இராணுவத்தால் தாக்குதல் நடத்த முடியாதென்பது.

புதுக்குடியிருப்பு- இரணைப்பாலை வீதி, அற்கப்பால் சிறிது தூரம் இராணுவம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதற்கு எதிர்ப்புறமாக மந்துவில் குளம், நீரேரி பகுதிகளும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இடையில் இருந்த ஒரு கிலோமீற்றர் அகலமான நிலப்பரப்புதான் புலிகளின் நிலை.

Image result for தளபதி பானு

புதுக்குடியிருப்பு- இரணைப்பாலை வீதிப்பக்கம் நிற்கும் இராணுவம் சுட்டால், மந்துவில் பக்கம் நிற்கும் இராணுவத்தின் காதோரம் காற்றை கிழித்துக் கொண்டு ரவைகள் செல்லும். அப்படி நெருக்கமான களம் அது. அதற்குள் பானு எங்கு நிற்கிறார், மற்றவர்கள் எங்கு நிற்கிறார்கள் என்பதை கவனித்து தாக்குதல் நடந்த முடியாது.

ஆனந்தபுரம் BOX எனப்படுவது நான்கு பக்கமும் இராணுவத்தால் சூழப்பட்ட- புலிகள் நிலைகொண்டிருந்த  குறுகிய நிலப்பரப்பு. புலிகள் இந்த தாக்குதலில் தோல்வியடைந்ததற்கு ஒரேயொரு காரணம்தான். அது- புலிகளின் கணிப்பொன்று பிசகியது!

ஆனந்தபுரம் BOX இல் நிலைகொண்டுள்ள தமது படையணிகளை இராணுவம் மூன்று முனைகளில்தான் சந்திக்கும் என புலிகள் கணக்குப் போட்டனர். இரணைப்பாலை பக்கத்தால் 58வது டிவிசன். புதுக்குடியிருப்பு பக்கத்தால் 53வது டிவிசன். மந்துவில் பக்கத்தால் அதிரடிப்படை.

மூன்று முனைகளிலும் இராணுவத்துடன் புலிகள் மோதிக்கொண்டிருக்க, பச்சைப்புல்மோட்டை பகுதியின் ஊடாக, மாத்தன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான களப்பு நிலத்துடன் தொடர்பை வைத்திருக்கலாமென நினைத்தார்கள். பச்சைப்புல்மோட்டைக்கும் வலைஞர் மடத்திற்குமிடையில்- கோடைகாலத்தில் நந்திக்கடல் நீர் வற்றி- சிறிய தரைப்பாதையொன்று ஏற்படும். அதனூடாக புலிகளின் வாகனப் போக்குவரத்தும் நடந்தது. ஆனந்தபுரம் BOX இற்குள் இருந்து பிரபாகரன் வெளியேறியதும் இந்த தரைப்பாதையினூடாகத்தான்.

புலிகள் ஆனந்தபுரத்தில் நிலைகொண்டபோது, இந்த தரைப்பாதை இருந்தது. ஆனால் ஆனந்தபுரம் BOX சண்டை முடிந்த சில நாளில் அங்கு பெய்த கடும் மழையின் பின் நந்திக்கடலின் நீர்மட்டம் உயர்ந்து, அந்த பாதை பெருமளவில் மூடப்பட்டு விட்டது.

புலிகளின் இந்த விநியோக பாதையை 58வது டிவிசன் படையினர் மூடிவிட்டனர். இரகசிய நகர்வொன்றின்மூலம் பாதையை இராணுவம் மூட, அதன்பின்னர், நடந்த கொடூர தாக்குதலே ஆனந்தபுர BOX தாக்குதல் எனப்படுகிறது.

ஆனந்தபுரத்திற்குள் இருந்து பச்சைப்புல்மோட்டை வழியாகவே பானு தப்பித்து சென்றார். அவரது அணி பச்சைப்புல்மோட்டை பகுதியில் உடைப்பு தாக்குதல் செய்தது. மட்டக்களப்பை சேர்ந்த தளபதி நாகேஷூம் பானுவுடன் கூட இருந்தார். அவர்களது அணி இராணுவத்தின் முன்னரணை பெரும் இழப்பிற்கு பின்னர் உடைத்தது. அதனால் பானு, நாகேஷ் BOX இற்குள்ளிருந்து வெளியேறினார்கள்.

Related image
இரட்டை வாய்க்கால் சந்தி

வன்னி யுத்தத்தில் ஏற்கனவே பானு சில தோல்விகளை சந்தித்திருந்தது, அவரை இராணுவத்துடன் இணைத்து பேச வாய்ப்பேற்படுத்தி விட்டது என்பதே உண்மை.

இறுதியுத்தத்தின் ஆரம்ப கட்டத்தில் பானு மன்னார் களமுனைக்கு பொறுப்பாக இருந்தார். அப்போது அவரால் இராணுவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவருக்கு முன்னர் தளபதியாக இருந்த ஜெயம், பின்னர் தளபதியாக இருந்த தீபன் ஆகியோராலும் மன்னார் முனையில் இராணுவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

பானுவிற்கு மேல் இப்படியான பழி ஏற்பட காரணமாக இருந்த இன்னொரு சம்பவம்- வாகரை பின்வாங்கல். 2007 இல் மட்டக்களப்பின் வாகரையில் இருந்து பின்வாங்கிய புலிகளின் இறுதி அணியை பானுதான் வழிநடத்தினார். பானுவின் துரதிஷ்டம் புலிகளின் முக்கிய தோல்விகளில் பானு சம்பந்தப்பட்டிருக்கிறார். ஒரே தளபதி, முக்கிய எல்லா தோல்விகளிலும் சம்பந்தப்பட…. இறுதியில் அவரை இராணுவத்துடன் கோர்த்து விட்டார்கள்.

2007 இல் தொப்பிக்கல காட்டை இராணுவம் முழுமையாக கைப்பற்றி, வாகரையை சுற்றிவளைத்தது. முள்ளிவாய்க்காலை போன்ற பெரும் மனித அவலம் ஒன்றின் பின்னரே வாகரை யுத்தம் முடிந்தது. ஆனால் அந்த அவலம் தமிழர்களாலோ, சர்வதேசத்தாலோ சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை. முள்ளிவாய்க்காலை விட, சற்று குறைவான தீவிரத்துடன் வாகரை போர் நடந்தாலும், அது உரியவிதத்தில் கவனிக்கப்படவில்லை. பொதுவாக வடக்கில் ஏற்படும் அவலங்கள்தான் அதிக முக்கியத்துவம் பெறும். இதுதான் வாகரைக்கும் நடந்தது. இன்றும், பலருக்கு வாகரையில் பெரிய மனித அவலம் நடந்ததே தெரியாது.

வாகரையிலிருந்து பானு தலைமையில் புலிகளின் படையணிகள் பின்வாங்கியபோது, புலிகளின் மூத்த தளபதிகள் சிலர் கொஞ்சம் இளக்காரமாகவே பானுவை பார்த்தனர். வாகரை தோல்விக்கு பானுவின் திறமையின்மை ஒன்றுதான் காரணமென நம்பினார்கள். காரணம், யுத்தத்தின் தீவிரத்தை புலிகளின் தளபதிகள் அப்பொழுது சரியான இனம்காணவில்லை. வழக்கமான இராணுவத்தின் முன்னகர்வுகளை போலத்தான் நினைத்தார்கள். வடக்கு முனையில் இராணுவத்தின் மீது சில வலிந்த தாக்குதல்களை நடத்தும்வரை, “நான்கு செல் அடித்தால் இராணுவம் ஓடிவிடும்“ என்றுதான் பல தளபதிகள் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அதையே, வன்னியில் அவர்கள் எதிர்கொண்டபோதுதான், இறுதி யுத்தத்தில் இராணுவத்தின் மூர்க்கத்தனமாக போராற்றலை உணர்ந்தார்கள்.

Image result for இறுதி யுத்தம்கிழக்கில் பானு இருந்ததால்தான் தோல்வியென கூறப்படுவது மிக தவறானது. அங்கு யார் தளபதியாக இருந்திருந்தாலும், இதுதான் நிலைமையாக இருந்திருக்கும்.

பானு தொடர்பான இந்த கதைகளின் உச்சபட்சமாக ஒரு கதையிருக்கிறது. அதாவது- ஆனந்தபுரத்தில் காட்டிக்கொடுத்தது நீதானேயென, பானுவை பிடித்து பங்கரில் அடைத்தாரம் பிரபாகரன். ஆனால் சில நாளிலேயே உண்மை தெரிந்து, பானுவை மன்னித்து, பதுங்குகுழியில் இருந்து பிரபாகரன் விடுவித்தாரம்.

உண்மையில் இப்படியான சம்பவமொன்றே நடக்கவில்லையென்பதே உண்மை.

இப்படியொரு கதையை கிளப்பியவருக்கு, அதிகபட்ச நகைச்சுவையுணர்வு இருக்க வேண்டும். எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்!

ஆனந்தபுரத்தில் இருந்து தப்பித்து வெளியேறிய எந்த தளபதி, போராளியையும் புலிகள் சந்தேகிக்கவில்லை. BOX இற்குள் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக, அவர்களை தளபதிகள் நேர்முகம் கண்டார்கள். அதை எல்லா சண்டைகளிலும் புலிகள் செய்வார்கள். அதைதத்தான் ஆனந்தபுரத்திலும் செய்தார்கள்.

ஆனந்தபுரத்தில் இருந்து பானு தப்பி வந்தபின்னர், அவர் காட்டிக்கொடுத்தார் என்ற கோபத்தில் பிரபாகரன் அவரை சந்திக்கவில்லையென்ற இன்னொரு கற்பனை கதையும் உள்ளது. பானுவை பின்னாட்களில் பிரபாகரன் சந்திக்கவில்லையா என்று கேட்டால், அதற்கு விடை ஆம் என்பதுதான்!

Image result for இறுதி யுத்தம்ஆனால், ஆனந்தபுரத்தில் அவர் சரியாக நடக்கவில்லையென்ற காரணத்தால்தான் சந்திக்கவில்லையா என்று கேட்டால், இல்லை என்பதே பதில்!

பொதுவாகவே பிரபாகரனின் இயல்பின்படி, அவர் கடமையில் மட்டுமே குறியாக இருப்பார். அவரது நோக்கத்திற்காக செயற்படுவார். அதற்கு குறுக்கே உணர்ச்சிகரமான செய்கைகளிற்கு இடமளிக்கமாட்டார். கடைசிக்கட்டத்தில் தளபதிகளை, போராளிகளை, குடும்பத்தை சந்திக்க வேண்டுமென்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. பிரபாகரனின் இயல்பை நன்றாக தெரிந்தவர்களிற்கு, அவர் எப்படி நடப்பார் என்பது தெரியும்.

யுத்தத்தின் இறுதி நாட்களில் அவர் எந்த தளபதியையும் சந்திக்கவில்லை. தளபதிகளிற்கான வேலை என்னவென்பதை அவர் ஏற்கனவே தெரியப்படுத்தி விட்டார். யுத்தம் புலிகளை நெருக்கிக்கொண்டு செல்ல, புலிகளிற்கும் புதிய வாய்ப்புக்கள் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. வலிந்த தாக்குதல்களிற்கு இனி இடமில்லையென்றான பின், தற்காப்பு தாக்குதல்களை நடத்தி, இருக்குமிடத்தை பாதுகாத்தால் சரியென்பதே அவரது நிலைப்பாடு.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சாள்ஸ் அன்ரனியையும், பொட்டம்மானையும் மட்டுமே அவர் சந்தித்தார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். மிகச்சில சந்தர்ப்பத்தில் மட்டுமே வேறு தளபதிகளை சந்தித்தார். அது ஏன் என்பதை இறுதியுத்தத்தில் நடந்தது என்ன தொடரை படிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம்.

பானு காட்டிக்கொடுத்த விசயத்தில் உண்மையில் நடந்தது இதுதான். இறுதியுத்தம் தொடர்பான இன்னொரு உல்டா கதையுடன் அடுத்த பாகத்தில் சந்திப்போம்.

(தொடரும்)

 

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here