UPDATE: எதிர்ப்பின் எதிரொலி: ஊர்காவற்றுறை தமிழ் பொலிஸ் அதிகாரியின் இடமாற்றம் இரத்து!

ஊர்காவற்றுறை தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் பலாலிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில், உயர்மட்ட தலையீடுகள் நடந்ததையடுத்து, அவரது இடமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை பகுதியில் சட்டவிரோத மாடு கடத்தலை தடுத்த தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் பலாலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியை நேற்று வெளியிட்டிருந்தோம்.

இந்த விவகாரம் பிரதேசத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. தீவக சிவில் அமைப்பு பிரதிநிதிகள் இது தொடர்பாக பொலிஸ் உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தி, தமது அதிருப்தியை வெளியிட்டனர். இதையடுத்து, அந்த தமிழ் உப பொலிஸ் பரிசோதகருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

 

முன்னைய செய்தி

ஊர்காவற்றுறையில் மாடு கடத்தலை தடுத்த தமிழ் பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்

தீவுப் பகுதியிலிருந்து இறைச்சிக்காக மாடுகளைக் கடத்தும் கும்பல்களை இலக்கு வைத்து நடவடிக்கை எடுத்து வந்த ஊர்காவற்றுறை தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் பலாலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றக் கட்டளை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது. அவருடைய தனிப்பட்ட நடத்தை பற்றி கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை அடுத்தே இடமாற்றம் வழங்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் அலுவலகருக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தீவகத்திலிருந்து கட்டாக்காலி கால்நடைகளை இறைச்சிக்காக கடத்திச் செல்லும் சம்பவங்கள் அண்மைக்காலமாக தறிகெட்டு அதிகரித்துள்ளது. அவற்றை தடுக்கும் நடவடிக்கையில் இடமாற்றம் பெற்ற தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் தீவிர ஈடுபாட்டை காட்டியிருந்தார்.

மாடுகளைக் கடத்திச் சென்ற கும்பல்களில் பலரை அவர் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருந்தார்.

பொலிஸ் அலுவலகரை இடமாற்ற கடந்த மாதம் முற்பகுதியிலும் முயற்சிகள் மேற்கொண்ட போதும், உயர் மட்டத் தலையீட்டால் தடுக்கப்பட்டது. எனினும் அந்த தலையீடு விலகப்பட்ட நிலையில் இந்த இடமாற்றம் நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபாடு கொண்ட பொலிஸ் அதிகாரிகள் உள்பட எட்டுக்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அண்மைக் காலத்தில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, இளவாலை பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்த தமிழ் பொலிசார் ஒருவரும் அண்மையில் இடமாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here