‘அன்னமே எமது எண்ணம்’: கோரஸாக கூறினர் தமிழ் அரசுக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் யாழ் உள்ளூராட்சி உறுப்பினர்களின் கருத்தறியும் கூட்டம் இன்று (2) இடம்பெற்றது. இதில், அன்னமே எங்கள் எண்ணமென தமிழ் அரசு கட்சியின் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

மார்ட்டின் வீதியிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை இந்த கூட்டம் இடம்பெற்றது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பொருளாளர் கனகசபாபதி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழ் அரசு கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், தற்போதைய உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் சஜித்தையே ஆதரிக்க வேண்டுமென உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள். யாரும் மாற்று யோசனைகள் கூறவில்லை.

யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்தான் விவகாரமான யோசனையொன்றை முன்வைத்தார். மக்கள் அனைவரும் அன்னத்திற்கே வாக்களிக்கப் போகிறார்கள். நாம் அறவிப்பை தாமதப்படுத்தி, மக்கள் வாக்களித்தால், அது எமது பலவீனமாக போய்விடும். வாக்களிப்பின் முன்னர் அன்னத்திற்கான ஆதரவை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். நாம் அறிவித்துத்தான் மக்கள் வாக்களித்ததை போல அமைய வேண்டும். இல்லையெனில் பலவீனமாக அமைந்து விடும். நாம் அறிவித்து மக்கள் வாக்களித்ததைபோல அமைந்தால் அடுத்து வரும் நாடாளுமன்ற, மாகாணசபை தேர்தல்களில் எமக்கு பலனுள்ளதாக அமையும் என்றார்.

அனைவரது யோசனையையும் கேட்ட மாவை, “கோட்டாபயவை எம்மால் ஆதரிக்க முடியாது. ஒப்பீட்டளவில் சஜித் பிரேமதாசதான் பொருத்தமானவர். நாளை (3) வவுனியாவில் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. அதன்பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடக்கும். அதில் முடிவெடுத்து கட்சி ஒரு அறிவித்தல் விடுக்கும் இதற்குள் யாரும் அவசரப்பட்டு, ஆர்வக்கோளாற்றில் கருத்து தெரிவிக்கக்கூடாது. எமது நீதியரசரை போல அரசியல் தெரியாமல், அவசரப்பட்டு அறிக்கைகள் விடக் கூடாது“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here