எல்லோரும் டொக்டர் ஆகிவிட்டோம்!

லூயிஸ் பாஸ்டர்

1900 களில் நல்லா இருக்கிற மனிதர்கள் திடீரென வரும் காய்ச்சல், வயிற்றுப் போக்குகளால் இறந்து கொண்டிருந்தனர். ஏன் இறக்கிறார்கள் என தெரியாமல் வைத்தியர்கள் குழம்பிக்கிடந்த நேரம். ஹிப்போக்ரேடிஸ், மனிதர்களின் நோய்க்குக் காரணம் விஷக்காற்று என சொல்லி வைத்திருந்தார். இன்னொரு பக்கம் மதவாதிகள் டிசைன் டிசைனா காரணம் சொல்லிக் குழப்பிக் கொண்டிருந்தனர்.

இதற்கும் 40 வருடங்களிற்கு முன்னர் 1855 அளவில், லூயிஸ் பாஸ்டர் என்ற பிரெஞ்சுக்காரர், ‘பால் ஏன்டா கெட்டுப் போகுது’ன்னு மண்டையைப் பிச்சு ஒரு வழியா ‘ஏதோ ஒண்ணு பாலைக் கெட வைக்குது, அதைச் சூடு பண்ணுனா கெட்டுப் போகலை’ன்னு கண்டுபிடித்து வைத்திருந்தார். ‘வைன்’ கெட்டுப்போறதையும் அவரால தடுக்க முடிந்தது. அப்போதைய ஹீரோ அவர்தான்.

திரும்ப 1900. ஏதோ ஒரு காய்ச்சலில் ஆடு, மாடு, மனிதர்கள்னு அத்தனையும் காலி. இப்பவும் விஷக் காற்று, கடவுளின் சாபம்னு பீலா விட்டுக்கொண்டிருந்த மதவாதிகளுக்கு மத்தியில ‘ராரொபர்ட் கோச்’ என்ற ஜெர்மன்காரர், ‘இருங்கடா, பாஸ்டர் சொல்றதை வெச்சுப் பார்த்தா, கண்ணுக்குத் தெரியாத கிருமி இருக்கும்போலிருக்கு. நான் ஆராய்ச்சி பண்ணிச் சொல்றேன்’என சொன்னார். ஆந்த்ராக்ஸ் என்னும் நுண்கிருமி இருப்பதையும் அதுதான் அத்தனை சாவுக்கும் காரணமென்பதையும் கண்டுபிடித்தார்.

மருத்துவ உலகத்துக்கு மிகப் பெரிய கண் திறப்பு மேட்டர் இது. அதுக்கு அப்புறம் மொத்த உலகமும் மூட நம்பிக்கைகளை விட்டுட்டு,  நுண் கிருமிகளைப் பற்றித் தெரிந்துகொண்டு அதைத் தீர்க்க ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தது. நடுவில உலகப்போர் வந்து அதனால பல்வேறு புது வியாதிகள் முளைத்து மனிதனைக் கொத்து பரோட்டா போட்டது. அது ‘கிருமிகளின் ராஜ்ஜிய’ காலம்.

இந்தப் பக்கமாக 1928ல் ஸ்கொட்லாண்டுக்காரர் ஃப்ளெமிங், பக்டீரியா பற்றி செய்துகொண்டிருந்த தனது ஆராய்ச்சி சாம்பிள்களில் அழுக்குப் படிந்து, அதனால பக்டீரியா எல்லாம் செத்துப் போச்சுன்னு அசிஸ்டன்ட்டைத் திட்டிட்டு     ‘பக்டீரியாக்களைச் சாகடிச்சது எதுடா?’ன்னு யோசிச்சார்.  அப்போதான் பென்சிலின் பிறந்தது. ஆனால், அதை அப்படியே விட்டுட்டு அவர் வேற வேலையைப் பார்க்கப் போயிட்டார்.

10 வருடம் கழித்து 1938 அளவில் ஒக்ஸ்ஃபோர்டில் வேலை பார்த்த இரண்டு பேர் ஃப்ளெமிங் ஆராய்ச்சி பேப்பரைத் தூசி தட்டி பென்சிலின், கிருமிகளைக் கொல்லுதுன்னு கன்ஃபர்ம் பண்ணினார்கள். அந்த நேரம்பார்த்து ஒக்ஸ்ஃபோர்ட் மருத்துவமனையில் இருந்த ஒரு நோயாளிக்கு பக்டீரியா தொற்று காரணமா புண் ஆறவில்லை. என்ன பண்ணாலாம்னு யோசிச்ச ஒரு டொக்டர்,  இவங்ககிட்ட இருந்த பென்சிலினை வாங்கி புண்மேல பூசினார். அதிசயமா அதுவரைக் கட்டுப்படாத புண் ஆறத் தொடங்கியது. ஆனால், கைவசம் இருந்த பென்சிலின் போதாமல் ஆள் காலி.

1945ல தான் உறுதியா கிருமிநாசினின்னு ஒன்றைக் கண்டுபிடித்து, கிருமிகளின் ஆயிரம் ஆண்டு ராஜ்ஜியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். அப்புறமா, மேலே சொன்ன எல்லோருக்கும் நோபல் பரிசைக் கொடுத்தாங்க. இவ்வளவு பெரிய கட்டுரைக்குக் காரணம் நோபல் பரிசு பெற்ற மேடையில் டொக்டர் ஃப்ளெமிங் சொன்ன வார்த்தைகள்:

‘உயிர்களின் வாழ்க்கை வரலாற்றில், கிருமிகளைப்போல சாமர்த்தியசாலிகள் இல்லை. அவை இருபது நிமிடங்களில் இரு மடங்காகப் பெருகுவதிலும் சரி, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மரபணுக்களை மாற்றுவதிலும் சரி, படு வேகமாகச் செயல்படும். இதனால், வரும் காலங்களில் நாம் கொடுக்கின்ற மருந்துகளையே எதிர்த்து நின்று ஜெயித்துவிடும்’.

அவர் சொன்னதுபோலவே 60 – 70 வருடங்களுக்குள் பென்சிலினைக் கிருமிகள் வென்றுவிட்டன. பென்சிலின் இன்று வேலை செய்வதில்லை. அதனால் அதைவிட பவரான அன்டிபயோட்டிக்குகளை உபயோகிக்க ஆரம்பித்தாயிற்று. அதுவும், இன்னும் எவ்வளவு நாளைக்கு என்று தெரியாது.

இலங்கையில் எந்த அன்டி பயோடிக்கும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருக்கின்ற அன்டி பயோடிக் அனைத்தையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவறாகப் பயன்படுத்தி, கிருமிகளுக்கு ஊட்டச்சத்து அளித்து வருகிறோம். 2010ல் எடுத்த புள்ளிவிபரத்தின்படி 56 சதவிகிதம் பேர் டொக்டரின் பரிந்துரை இல்லாமல் அன்டி பயோடிக் பயன்படுத்துபவர்கள். 2016ல் இது 76 சதவிகிதம் ஆகியிருக்கிறது. எவ்வளவு சீக்கிரமா எல்லோரும் டொக்டர் ஆகிட்டிருக்கோம் பாருங்கள்.

இன்றைய நிலைமை இதுதான். இலங்கையில் அதிகமானவர்கள் மருந்துகள் வேலை செய்யாமலும் இறக்கிறார்களாம். பூச்சிக்கொல்லிகள் கேட்காத நிலையில் மீண்டும் கிருமிகள் ராஜ்ஜியம் ஒன்று நடைபெறக்கூடும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here