முட்டை சாப்பிட்டால் குழந்தைகள் ஆட்கொல்லிகளாக வருவார்களாம்: பா.ஜ.க தலைவர்!


பள்ளி குழந்தைகளுக்கு முட்டை வழங்கினால் அவர் வளர்ந்து வரும் போது ஆட்கொல்லிகளாக மாறுவார்கள் என பா.ஜ.க தலைவர் பேசி உள்ளது மத்திய பிரதேச அரசியலில் சர்ச்சையாகி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பகல் உணவில் முட்டைகள் வழங்கப்பட்டு வந்ததை முந்தைய பா.ஜ.க அரசு நிறுத்தியது. ஆனால் தற்போது ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸின் கமல்நாத் தலைமையிலான அரசு, மீண்டும் அங்கன்வாடியில் முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எதிர்ப்பு தெரிவித்ததுடன், முட்டைக்கு பதில் மாற்று பொருட்களை குழந்தைகளுக்கு வழங்கலாம் எனவும் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ம.பி., முன்னாள் அமைச்சரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான கோபால் பார்கவ் குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்படுவது குறித்து கூறுகையில், வலிமையற்ற அரசிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இன்று முட்டைகள் வழங்குவார்கள். பிறகு சிக்கன், ஆட்டு இறைச்சி வழங்குவார்கள். குழந்தை பருவத்தில் அவர்களுக்கு முட்டை வழங்கினால், அவர்கள் வளர்ந்த பிறகு இறைச்சி உண்பார்கள். அவர்கள் மனித உயிர்களை கொல்லும் ஆட்கொல்லிகளாகவும் மாறலாம் என்றார்.

இது பற்றி காங்கிரஸ் தலைவர் சோபா ஓஜா கூறுகையில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்படுகிறது. எங்கிருக்கும் குழந்தைகள் எல்லாம் ஆட்கொல்லிகளாக மாற வாய்ப்பு இல்லையா? பார்கவ்வை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here