யாழில் ஒரே மேடையில் விக்னேஸ்வரன், சம்பந்தன்: காட்சிகள் மாறுகிறதா?

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய புத்தக வெளியீட்டு நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துகொள்ளவுள்ளார். எதிர்க்கட்சி தலைவருக்கு நெருக்கமானவர்கள், இந்த தகவலை தமிழ்பக்கத்திடம் உறுதிசெய்துள்ளனர். எதிர்வரும் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெறும்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் மாணவனான, பிரித்தானியாவில் வசிக்கும் ஒருவர் இந்த நூலை தொகுத்துள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற முதல் இரண்டு வருடங்களில் முதலமைச்சர் ஆற்றிய உரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. நூல் தொகுப்பாளர், பிரித்தானியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பாளராகவும் செயற்படுகிறார்.

இந்த நிகழ்வில் சிங்கப்பூரை சேர்ந்த பேராசிரியர் சொர்ணராஜா பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த நூல் வெளியீடு குறித்து தமிழ்பக்கம் சில நாட்களின் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. அப்பொழுது குறிப்பிட்டிருந்தோம்- முக்கிய பிரமுகர் ஒருவரை நிகழ்விற்கு அழைக்கும் பொறுப்பை முதலமைச்சர் ஏற்றிருக்கிறார். அவர் சம்மதம் தெரிவித்த பின்னரே, திகதி தீர்மானிக்கப்படும் என.

அந்த பிரமுகர்- எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்.

முதலமைச்சரின் நூல் வெளியீட்டில் இரா.சம்பந்தனும் கலந்துகொள்வார் என்பதை, அவரது செயலாளர் சற்று முன்னர் தமிழ்பக்கத்திடம் உறுதிசெய்தார்.

இரா.சம்பந்தனிற்கும், முதலமைச்சருக்குமிடையில் நேற்று தகவல் பரிமாற்றம் நடந்ததாகவும், தனது வரவை முதலமைச்சரிடம் அவர் உறுதிசெய்துள்ளதாகவும் இரா.சம்பந்தனிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தன.

இரா.சம்பந்தனின் சம்மதம் கிடைக்க காலதாமதமாகியதால், அவரது பெயரை தவிர்த்து அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டு விட்ட விசயத்தை முதலமைச்சர் கூறியபோது, அதனால் எந்த சிக்கலுமில்லையென கூறி, நிகழ்வில் கலந்துகொள்வதை இரா.சம்பந்தன் உறுதிசெய்துள்ளார்.

யாழ் விஜயத்திற்கான ஏற்பாடுகளை செய்யும்படி தனது உதவியாளர்களிடம் இன்று காலையில் இரா.சம்பந்தன் கூறியுள்ளதாகவும் தகவல் தந்த அந்த வட்டாரங்கள் கூறின.

யாழ் விஜயத்தின்போது, உதயன் விருந்தினர் விடுதியில் அவர் தங்க ஏற்பாடாகியுள்ளதாகவும், அன்று (24) மதியம் தமிழரசுக்கட்சியின் பிரமுகர்களுடனான கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த முலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த நூல் வெளியீடு முக்கியமானதொரு நிகழ்வாக நோக்கப்படுகிறது. இறுதியாக நடந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், விக்னேஸ்வரன் தொடர்பில் மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் அதிருப்தி தெரிவிக்க, இரா.சம்பந்தன் எதுவும் பேசாமல் மௌனமாக உட்கார்ந்திருந்தார் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். நடக்கும் சம்பவங்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளதென்றுதான் கூற வேண்டியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here