வடக்கு பிரதம செயலாளருக்கு இன்று நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்!

“மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் மனுவில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்படும் அதிகாரி மன்றில் தோன்றுவது அவசியம். மன்றின் அனுமதி பெற்று பிரதிநிதி ஒருவரை நியமிக்க முடியும்” என்று வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு அறிவுறுத்திய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், அவர் சார்பில் பிரதிநிதி ஒருவரை மன்றில் முன்னிலையாக அனுமதியளித்தது.

அத்துடன், யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்காக வடக்கு மாகாண பிரதம செயலாளரால் விடுக்கப்பட்ட விண்ணப்பங்கோரலின் அடிப்படையில் கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதை நிறுத்திவைக்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியது.

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கு தகுதியானவர்களை விண்ணப்பிக்குமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அண்மையில் பத்திரிகை ஊடாக விண்ணப்பங்கோரல் விளம்பரத்தை வெளியிட்டார்.

பதில் அல்லது நிரந்தர கல்விப் பணிப்பாளராக தற்போது கடமையாற்றும் கல்வி வலயத்தில் 3 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்திருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நிபந்தனை சேவைப் பிரமாணக் குறிப்புக்கு முரணானதென எனக் குறிப்பிட்டு யாழ்.தீவகம் வலயக் கல்விப் பணிப்பாளர் இளங்கோ, சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப் பேராணை மனுவைத் தாக்கல் செய்தார்.

எதிர் மனுதாரர்களாக முறையே வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

“யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கோரலையும் அதனை மேற்கொண்டு செயற்படுத்துவதனையும் இடைநிறுத்திவைக்கும் இடைக்காலத் தடைக் கட்டளை வழங்கவேண்டும்.

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணபங்கோரலை விடுத்த முதலாவது எதிர்மனுதாரர் அவரது பொதுக் கடமையை மீறிய இந்த சட்டவிரோத விண்ணப்பங்கோரலை வெற்றும் வறிதானதுமாக உறுதிகேள் எழுத்தாணை கட்டளையை வழங்கவேண்டும்.

வழக்குச் செலவு மற்றும் மன்றால் நியாயமானது எனக் கருதும் பிற நிவாரணங்களும்“ என மனுதாரரால் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்றுப் புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, முதலாவது எதிர் மனுதாரரான வடக்கு மாகாண பிரதம செயலாளர் மன்றில் முன்னிலையாகவில்லை. அவர் சார்பில் உத்தியோகத்தர் ஒருவர் மன்றில் முன்னிலையாகினார்.

இந்த நிலையிலேயே எதிர் மனுதாரரான பிரதம செயலாளரை மன்றில் முன்னிலையாக மன்று நேற்று கட்டளையிட்டது.

இந்த மனு இன்று செவ்வாய்க்கிழமை மன்றில் அழைக்கப்பட்டது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் மன்றில் முன்னிலையானார்.

“மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் மனுவில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்படும் அதிகாரி மன்றில் தோன்றுவது அவசியம். மன்றின் அனுமதி பெற்று பிரதிநிதி ஒருவரை நியமிக்க முடியும்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் அறிவுறுத்தினார்.

அத்துடன், பிரதம செயலாளர் தன் சார்பில் முன்னிலையாக நியமித்த பிரதிநிதிக்கு மன்று அனுமதியளித்தது.

“யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கோரலுக்கு இடைக்காலத் தடைக் கட்டளை வழங்கவேண்டும் என்று மனுதாரரால் கோரப்பட்ட முதலாவது நிவாரணத்தை இந்த மன்று வழங்க முடியாது.

விண்ணப்பங்கோரல் திகதி மே 31ஆம் திகதியுடன் நிறைவடைந்துவிட்டது.

விண்ணப்பங்கோரால் கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சை நடவடிக்கையை இந்த மனு மீதான கட்டளையை மன்று வழங்கும்வரை எதிர் மனுதாரர்கள் முன்னெடுக்கமாட்டார்கள் என உத்தரவாதம் வழங்குகின்றனர்” என்று அரச சட்டவாதி பிரிந்தா ரெஜிந்தன் மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

“எதிர் மனுதாரர்கள் மன்றுக்கு வழங்கிய உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்டு, இந்த மனு மீதான முடிவு எட்டப்படும்வரை நேர்முகப் பரீட்சையை நடத்தக் கூடாது என்ற நிபந்தனையை மன்று விதிக்கின்றது. எதிர் மனுதார்களே முன்வந்து உத்தரவாதத்தை வழங்குவதால் மனுதாரர் கோரிய இடைக்காலத் தடை உத்தரவு தேவையற்றது என மன்று கருதுகின்றது.

அதனடிப்படையில் எதிர்மனுதாரரின் ஆட்சேபணைக்காக மனு மீதான விசாரணை ஜூலை 17ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here