நல்லூர் பிரதேசசபை கழிவகற்றல்: நேற்றும் இன்றும்!

முன்னர் எம்மவர்கள் எல்லோரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே தங்கள் வீட்டு கழிவுகளை முகாமை செய்தார்கள்.

வீட்டில் காலையில் கூட்டுகின்ற போதான கழிவுகள், வீட்டுக் கழிவுகள் என்பவற்றை ஒரு குழி வெட்டி அதனுள் போடுகின்ற முறைமை, அல்லது தென்னை மரங்கள் வாழை மரங்களுக்கு அருகில் குழிவெட்டி அதை முகாமை செய்யும் முறைமை ,அல்லது வீட்டின் ஒரு மூலையில் கிடுகினால் பின்னப்பட்ட /தகரங்களினால் அடைக்கப்பட்ட கூடுகளைப் பயன்படுத்தி கூடடைப்பு முறைகள் போன்றவற்றினால் சிறந்த முறையிலே நம்மவர்கள் கழிவுகளை வீடுகளுக்குள்ளேயே சிறந்த முறையில் முகாமை செய்து வந்திருக்கிறார்கள்.

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் இறந்தால் கூட அவர்களுடைய வீட்டு தேசி மரத்திற்கு கீழ் வெட்டி புதைக்கும் மனிதாபிமான செயல்களை புரிந்து வந்தார்கள்.

ஆனால் இன்று நம் மக்களுக்கு என்னதான் ஆச்சு?

எப்போது டெங்கு சோதிப்பு வந்ததோ அதன் பின் வீட்டு குப்பைகள் றோட்டுக்கு வர தோடங்கின.

எப்போது பிரதேச சபைகள் குப்பை சேகரிக்கும் தொட்டி வைத்தோமோ வீட்டு சமையல் கழிவுகளுக்கு மேலாக வாழை, பழைய கொமட், தகரம், பிள்ளைகளின் கழிவுகள், பெண்பிள்ளைகள் வயோதிபர்களின் கழிவுகள், கோழி இறக்கைகள், செத்த நாய், பூனைகள் என இன்னும் பல எல்லாம் அந்த தொட்டிகளுக்கு அருகாமையில் கொண்டு வந்து போடுகிறார்கள். பெரும்பாலும் சமூகத்தில் கற்று தேர்ந்து நல்ல நிலையில் இருப்போர்

பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் வரி செலுத்தும் மக்களினுடைய வீட்டு சமையல் கழிவுகளை அகற்றுவது தான் அந்தப் பிரதேச சபையினுடைய கடப்பாடாகும்.

மேலதிகமாக அவர்கள் வீட்டில் வெட்டிய வாழை மரங்கள், வெட்டுகிற மரக்கிளைகள், பழுதடைந்த பொருட்கள், வீட்டில் மாற்றிய மலசல கூட உபகரணங்கள், வீட்டில் பெண்கள் பாவித்த, சிறுவர் பாவித்த கழிவுகள், செத்த நாய்கள், பூனைகள், கோழிகள், மாட்டு தோல்கள், உடைந்த பிளாஸ்டிக் பாத்திரங்கள் என அவற்றை அகற்றுவது பிரதேச சபையின் கடமை அல்ல. ஆனால் பிரதேசத்தின் நன்மை, தூய்மை கருதி இவற்றையும் நாங்கள் அகற்ற வேண்டியுள்ளது.

தங்கள் வீட்டு கழிவுகளை சிறந்த முகாமைத்துவத்தின் அடிப்படையில் தரம் பிரித்து குப்பை சேகரிப்பு நிலையத்தில் கையளிப்பதே சிறந்த குடியிருப்பாளர்களது பிரதான கடமையாகும்.

எங்களது பிரதேசத்தை சுத்தப்படுத்தும் சபைத் தொழிலாளர்களும் மனிதர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். (அவர்கள் குப்பை அகற்றுபவர்கள் அல்ல நீங்கள் இட்ட குப்பைகளால் மாசடைந்த இடத்தை சுத்தம் செய்பவர்கள்)

எங்கள் பக்கத்திலும் குறைபாடுகள் உண்டு, அதை ஏற்றுக் கொள்கிறோம்.
*ஆளணிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
*கழிவு சேகரிக்கும் வண்டிகள் கொள்வனவு செய்ய வேண்டும்.
*கழிவுகளை உரிய காலத்துக்குள் உடனடியாக சேகரிக்க வழி வகை செய்ய வேண்டும்.
*வேறு கழிவுகளை கொட்டுவோரை மறைகாணி (CCTV)மூலம் கண்காணித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

எனினும் கழிவு முகாமை பற்றி நாங்கள் அப்படியே விட்டு விட முடியாது. இதற்கு சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். தொட்டிகள் வைக்கப்பட்டு இப்போது தோல்வி அளித்துள்ள நிலையில் அடுத்து சாத்தியமாகவுள்ள நடைமுறைகள் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

விரைவில், எதிர்காலத்தில் கழிவு முகாமைத்துவத்தில் நல்லூர் பிரதேச சபையை ஒரு புரட்சி மிக்க பாதையில் கொண்டு செல்வோம் அதற்காக நாம் கூட்டாக செயற்படுவோம் என உறுதி அளிக்கிறோம்.

மதுசுதன்
உறுப்பினர்
நல்லூர் உள்ளூராட்சி மன்றம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here