யுவதிகளை உங்கள் வீட்டுபிள்ளைகளாக பார்க்க வேண்டும்: தனியார் நடத்துனர்களிற்கு முதலமைச்சர் அறிவுரை!

வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கமும் வடமாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபையும் இணைந்து நடாத்துகின்ற
நிரந்தர வழித்தட அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம், கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நடந்த நிகழ்வில் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்வில் முதலமைச்சர் ஆற்றிய உரை- இன்றைய தினம் வடமாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்களால் இயக்கப்படுகின்ற தனியார் போக்குவரத்து பேரூந்துகளுக்கான நிரந்தர வழித்தட அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

இலங்கையின் பொது மக்களின் போக்குவரத்துச் சேவையை தனது இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை முழுமையான ஒரு சேவையை பொதுமக்களுக்கு வழங்க முடியாத நிலையில் அச் சேவையில் பங்குதாரர்களாக தனியார்களை இணைத்துக் கொண்டு அவர்களினூடாகவும் ஒரு சேவையை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே தனியார் பேரூந்துகள் இன்று அனைத்து போக்குவரத்து தடங்களிலும் தமது சேவைகளை இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பேரூந்துகளே தனியாரினால் இயக்கப்பட்ட போதும் வடபகுதியைப் பொறுத்த வரையில் தற்போது 994 பிரத்தியேக பேரூந்து வண்டிகள் இச் சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலாக இலங்கைப் போக்குவரத்து சபையின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ் வண்டிகளும் சேவையில் உள்ளன. இவ் இரு சேவைகளும் இணைந்து முன்னெடுக்கப்படுவதாலேயே இன்று பொது மக்கள் தமது பிரயாணங்களை அவ்வளவு சிரமம் இன்றி தாமதங்களைத் தவிர்த்து மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது.

எனினும் தனியார் பேரூந்துகளைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளுக்கு அமையவே அவர்களின் பேரூந்துகளை அவர்கள் இயக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கென அனுமதி வழங்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே குறிப்பிட்ட பேரூந்துகளின் சேவைகள் வழங்கப்பட முடியும். இந்தக் கட்டுப்பாடு இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்துகளுக்கு ஏற்புடையதல்ல. அரச பேரூந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள போதும் ஒரு குறிப்பிட்ட அரச பேரூந்துகளின் இணைந்த நேரக் கட்டுப்பாட்டு ஒழுங்கிலேயே இவர்களின் பேரூந்துகள் இயக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர்களின் சேவைகளை கண்காணிப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அரச பேரூந்துகளுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் போன்று பிரத்தியேக பேரூந்துகளின் சேவைகளை இந்தப் போக்குவரத்து அதிகாரசபை கண்காணிப்பு செய்யும் என எண்ணுகின்றேன்.

இரு சாராரின் இணைந்த நேர அட்டவணைக்கமைய பேரூந்துகள் பயணம் செய்கின்ற போது அரச மற்றும் தனியார் பேரூந்துகளின் சேவைகள் மிகச் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த இணைந்த நேர அட்டவணையை நடைமுறைப்படுத்துவதில் சில கருத்து வேறுபாடுகள் இலங்கைப் போக்குவரத்து சபைக்கும் தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்திற்கும் இடையே நிலவுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

அரச பேரூந்துகள் பொதுமக்களின் போக்குவரத்து சேவைக்கென அமைக்கப்பட்ட ஒரு சபையாக அமைகின்ற போதும் தனியார்களின் போக்குவரத்து சேவைகளும் பாராட்டப்பட வேண்டியவை. உதாரணமாக கடந்த நீண்டகால யுத்தத்தின் போதுபேரூந்துகளுக்கும் அதன் உதிரிப் பாகங்களுக்கும் தட்டுப்பாடுகள் நிலவிய காலப்பகுதியில் அரச பேரூந்துகள் முழுமையான ஒரு சேவையை வழங்கமுடியாது அல்லலுற்ற போது தனியார் பேரூந்து உரிமையாளர்கள் தமது பெறுமதி மிக்க பேரூந்துகளை போக்குவரத்துக்கு உதவாத வழித்தடங்களில் கூட சேவைக்கு அமர்த்தி பிரயாணிகளின் போக்குவரத்திற்கு வழி சமைத்தமை நன்றியுடன் நினைவுகூரப்படல் வேண்டும்.

உதாரணமாக யாழ்ப்பாணம் மன்னார் வழித்தடத்தில் அரச பேரூந்து சேவையின் ஒரு பேரூந்து கூட சேவைக்கமர்த்தப்படாதபோது இத் தடத்தில் முழுமையான சேவையொன்றை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மனமுவந்து நல்கியமை பாராட்டிற்குரியது. இன்று பிரதான வீதிகள் பலவும் சீர் செய்யப்பட்டவுடன் நான் முந்தி நீ முந்தி என இருசாராரும் தமது சேவைகளை வழங்க முண்டியடித்துக் கொண்டு முன்வருவது கருத்து முரண்பாடுகளை தோற்றுவிக்க வழிவகுப்பதாக அமைந்துள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் சில கட்டுப்பாடுகளை விரும்பியோ விரும்பாமலோ மேற்கொள்ள வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்.

இரு பகுதியும் இணைந்து கொண்டு தயாரித்த இணைந்த போக்குவரத்து நேர அட்டவணை இரு பகுதியினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு முறையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே போன்று பஸ் தரிப்பு நிலையங்களில் ஒரே தொகுதிகளில் தனியார் மற்றும் அரச பேரூந்துகளை நேர அடிப்படையில் நிறுத்துவதற்கும் பொது மக்களை ஏற்றிச் செல்வதற்கும் உரித்துக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை அரச மற்றும் தனியார் பேரூந்துகளின் இயக்குனர்கள் முறையாக பயன்படுத்தத் தவறும் பட்சத்தில் அவற்றை நிறைவேற்றுவதற்காக சில மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை பிரயோகிக்கப்பட வேண்டியிருக்கும்.

அவ்வாறான ஒரு நிலைக்கு எம்மை சகோதரர்கள் முன்தள்ளமாட்டார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

எனினும் இன்று நடைமுறையில் இருக்கும் மோசமான ஒரு பழக்கம் பற்றி நான் இந்த தருணத்தில் சொல்லியே ஆக வேண்டும். குழந்தைப் பிள்ளைகள் அடம் பிடிப்பது போல் எமது தொழிலாளர்களும் அலுவலர்களும் சூறாவளி வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றார்கள். இன்று நினைத்து நாளை வேலையைப் புறக்கணிக்கின்றார்கள்.

போக்குவரத்து சேவையை எடுத்துக் கொண்டோமானால் அதன் தாக்கத்தை எமது சகோதர சகோதரிகள் உணர்ந்து கொண்டுதான் வேலை நிறுத்தம் செய்கின்றார்களா என்று எண்ண வேண்டியுள்ளது. பேரூந்து தடைப்பட்டால் எல்லோராலும் ரக்சி பிடித்துச் செல்லமுடியாது. வைத்திய சாலைகள், வேலைத்தளங்கள், கல்வி நிலையங்களுக்கான எமது பயணங்கள் திடீரெனத் தடைப்படுகின்றன. இதை நாங்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறான வேலை நிறுத்தங்களின் தாற்பரியங்களை யோசித்துப் பாருங்கள். இந்த வேலை நிறுத்தங்களின் நோக்கு, தாம் கேட்டவற்றைப் பெற வேண்டும் என்பதே. தாம் கேட்பவை சாத்தியமா இல்லையா, அதனால் ஏற்படும் செலவுகள், அது சம்பந்தமான சட்டத்தில், கோரும் விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனவா என்பது போன்ற பலதையும் ஆராயாமல் அல்லது ஆராய சந்தர்ப்பம் வழங்காது தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றோம்.

இவ்வாறான திடீர் வேலை நிறுத்தங்கள் வன்செயல் பாற்பட்டவை. தெருவில் போகும் ஒருவனிடம் கொள்ளை அடிப்பது போன்றது. தீடீரென்று கத்தியைக் காட்டி “தா அல்லது குத்தித் தரையில் வீழ்த்தி விடுவேன்” என்பது போன்றதே திடீர் வேலை நிறுத்தங்கள். முதலில் எமது குறை பற்றி அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். கலந்துரையாட வேண்டும். மேலதிகாரிகள் கூறுவதில் உண்மையுள்ளதா என்பது ஆராய்ந்தறியப்பட வேண்டும். அதன் பின்னரே நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும். பொறுப்பற்று எமது சகோதர, சகோதரிகள் நடவடிக்கைகளில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள்தான், தாம் கோருவனவற்றைத் தராவிட்டால் அடம்பிடிப்பன. முதிர்ச்சி பெற்ற எம்மவர் தமது காரியங்களால் ஏற்படும் தாக்கங்களைப் புரிந்தே நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

நாம் கோரினால் மற்றவர் அதைத் தர வேண்டும். இல்லையென்றால் உடனே வேலை நிறுத்தம் என்ற எமது பழக்கத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். மற்றைய அபிவிருத்தி நாடுகளைப் பார்த்து நாம் எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். ஜப்பானில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கறுப்பு கைப்பட்டி அணிந்து வேலைக்குச் செல்வார்கள். தமது வேலை நிறுத்தங்களால் மக்களோ, தொழில் முயற்சிகளோ, கல்வி நடவடிக்கைகளோ பாதிக்கப்படக்கூடாது என்றே அவர்கள் சிந்திக்கின்றார்கள். 2500 ஆண்டு பாரம்பரியம் பெற்ற தமிழரோ திடீர் வேலை நிறுத்தமே முறையென்று நடந்து கொள்கின்றார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

இவை அனைத்திற்கும் மேலாக பேரூந்து சேவையை எடுத்துக் கொண்டோமானால் அதில்ஈடுபடுத்தப்படுகின்ற ஒவ்வொரு பேரூந்தும் பல இனிய உயிர்களை சுமந்து செல்லுகின்ற வாகனங்களாவன.அவற்றை முறையாக இயக்குவதற்கு அதன் சாரதிகளும் உரிமையாளர்களும் தமது முழுக் கவனத்தையும் செயல்ப்படுத்த வேண்டும். உங்கள் சிறிய கவலையீனங்களும் போட்டி மனப்பான்மைகளும்பல்வேறு உயிர்களை காவு கொள்ளக்கூடிய தன்மையை ஏற்படுத்தும் என்பதனை மனதில் இருத்தி செயற்பட வேண்டும். அதே போன்று பொது மக்களின் குறிப்பாக இளைஞர் யுவதிகளின் பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

சிறுவர்கள் மற்றும் யுவதிகள் தொடர்பில் புதினப் பத்திரிகைகளில் தினமும் வெளிவருகின்ற செய்திகள் எமக்கு அதிர்ச்சியையும் வெறுப்பையும் ஊட்டுவனவாக உள்ளன. எனவே அன்பார்ந்த நடத்துனர்களே!உங்கள் போக்குவரத்து பேரூந்துகளில் பயணம் செய்கின்ற குழந்தைகள் யுவதிகள் ஆகியோரை உங்கள் பிள்ளைகளாக அல்லது சகோதரிகளாக பாவித்து அவர்களின் பாதுகாப்பை 100வீதம் உறுதி செய்வது உங்கள் கடப்பாடு என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.

சில போக்குவரத்து பேரூந்துகளின் நடத்துனர்களின் செயற்பாடுகள் மன நிறைவுடன் போற்றப்பட வேண்டியுள்ளது. உதாரணமாக கண்டி,கொழும்பு போன்ற பிரதேசங்களில் இருந்து நடுநிசி வேளையில் யாழ்ப்பாணத்தை வந்தடைகின்ற பேரூந்துகளில் பிரயாணம் செய்கின்ற யுவதிகள் தொடர்பில் அப் பேரூந்துகளின் நடத்துனர்கள் கொண்டுள்ள அக்கறை பாராட்டிற்குரியது. ஒவ்வொரு பிள்ளையும் பஸ்சை விட்டு இறங்கும் போது அவர்களை அழைத்துச் செல்வதற்காக அவர்களின் தாய் தந்தையரோ அல்லது உறவினர்களோ பேரூந்து நிலையத்திற்கு வந்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்துவதற்கு அவர்கள் பின்நிற்பதில்லை.

தற்செயலாக ஒருவர் சற்று தாமதமாகிவிட்டால் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் தரித்து நின்று அவர்கள் வந்து சேர்ந்தவுடன் குறிப்பிட்ட பிரயாணியை அவர்களுடன் சேர்த்துவிட்டே பிரயாணத்தை தொடர்வது பற்றி எனக்கு பலரும் கூறக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இது தான் எமது பாரம்பரியம். அதன் வழி நிற்பவர்களை நாங்கள் பாராட்டுகின்றோம். இவர்களின் முன்மாதிரி அனைத்து நடத்துனர்களுக்கும் சாரதிகளுக்கும் பொருத்தமானது.

எனவே அன்பார்ந்த பேரூந்து உரிமையாளர்களே,சாரதிகளே,நடத்துனர்களே, வடபகுதியில் இருந்து பிரயாணம் செய்கின்ற பிரயாணிகளில் 99வீதமானவர்கள் தமிழர்களே. எமது உறவுகளே. அவர்களைப் புறக்கணித்து உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யாது, பேசித்தீர்க்க முன்வாருங்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here