நுண்கடன் பாதிப்புக்களிற்கு எதிராக வடக்கில் போராட்டம்!

0

நுண் நிதிக் கடன் செயற்பாட்டின் பொறிக்குள் சிக்கியிருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, வடக்கின் பல இடங்களிலும் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வவுனியா

வவுனியா மாவட்ட சிவில் சமுக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (14.06.2018) காலை 10.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

கடனைக் கொடுத்து குடும்பத்தைக் குலைக்காதே, வட்டியால் மக்களின் வயிற்றில் அடிக்காதே அடிக்காதே, பெண்களை சீரழிக்கும் நுண்கடன் நிறுவனங்களை இழுத்து மூடு, கடனில் பெண்களை இலக்கு வைக்காதே, உயிரைக் குடிக்கும் வார்த்தைகளை உமிழாதே உமிழாதே, இழப்பதற்கு இனி எம்மிடம் உயிர் மட்டுமே உள்ளது, ஏழைகளின் உணர்வை புரிந்துகொள், வாழ்வதற்காய் கடன் பெற்றோம் வாழ்விழந்து நிற்கின்றோம், தற்கொலை அதிகரிப்பதற்கு கடனே நீயே காரணம், குடும்ப வன்முறைக்கும் கடன் நீயே காரணம், நுண் நிதி கடனே குடும்ப வன்முறைக்கு அத்திவாரம் இடாதே, கடனே இளம் சந்ததியை நரகத்தில் தள்ளாதே போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர

பழைய பேருந்து நிலையத்தில் காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகிய போராட்டமானது பஜார் வீதி வழியாக சென்று ஹொரவப்பொத்தானை வீதியுடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது.

10நிமிடங்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கோரிக்கைகள் அடங்கிய வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்குரிய மகஜரை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் சாந்தினி பெற்றுக்கொண்டார்.

மன்னார்

மன்னார் மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டிலும்,மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னார் தனியார் பேருந்துத் தரிப்பிடத்திற்கு முன் பேரணி ஆரம்பமாகி மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் நிறைவடைந்தது.

கிளிநொச்சி

கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம், கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுண்கடன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று திட்டங்களை வங்கிகள் ஊடாக மக்களிற்கு வழங்க கோரியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here