சிலியில் தொடரும் போராட்டம்: 10 பேர் பலி!

சிலி நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.

இலத்தீன் அமெரிக்க நாடான சிலியில், மெட்ரோ ரெயில் கட்டணத்தை அந்நாட்டு அரசு உயர்த்தியது. எரிபொருட்கள் விலை உயர்வு மற்றும் அந்நாட்டு நாணயமான பீசோவின் மதிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு விளக்கம் அளித்தது.

ஆனால் இந்த கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் சாண்டியாகோவில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. அதனை தொடர்ந்து அங்கு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு இரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதி செபாஸ்டியன் பினெரா அறிவித்த பின்னரும், தொடர்ந்து அரசுக்கு எதிராக சாண்டியாகோவில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெயில் நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதால் பல இடங்களில் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. சில பகுதிகளில் ரெயில் மற்றும் பேருந்து நிலையங்கள் எரிக்கப்பட்டன. இதையடுத்து, பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு தடியடியும் நடத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதற்கிடையே போராட்டக்காரர்கள் சாண்டியாகோ நகரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு புகுந்து தீவைத்தனர். இதில் அங்காடி முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த தீயில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 1990 ஆம் ஆண்டு சிலி ஜனநாயக நாடாக மாறிய பிறகு முதன் முறையாக வன்முறையாக வன்முறை காரணமாக அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here