தமிழுக்கு முதலிடம்: யாழ் பொதுஜன பெரமுன அலுவலக பெயர்ப்பலகையை ஒளித்து வைப்பார்களா?


பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சி தலைவரான விமல் வீரவன்ச, அரசியலமைப்பையும், பொது நடைமுறைகளையும் அறியாமல் தனது வழக்கமான இனவாத பிரச்சாரத்தை தற்போது ஆரம்பித்துள்ளார்.

யாழ் விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் முதலாவதாகவும், சிங்களம் இரண்டாவதாகவும் எழுதப்பட்டிருப்பது இலங்கைக்கு அவமானம் என கொளுத்திப் போட முயன்றார். ஆனால், அது புஸ்வாணமாகி, அவரது அரசியலமைப்பு அறிவு குறித்த கேள்வியாக மாறியது.

எனினும், வழக்கம் போல பாமர- இனவாதம் பேசும் மஹிந்த அணி ஆதரவாளர்கள் இதை இந்த நிமிடம் வரை முக்கியமான பேசுபொருளாக பேசி வருகிறார்கள். அவர்கள் வடக்கிற்கு வந்து செல்லும்போது, கண்ணுற்ற அறிவிப்பு பலகைகள் ஒரு விவகாரமாக தெரியாத நிலையில், தற்போது ஒரு அவமானமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

மஹிந்த அணியின் இந்த நடவடிக்கை, அவர்கள் மீதான சிறுபான்மை மக்களின் அச்சத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மஹிந்த அணி ஆட்சிக்கு வந்தால், சிறுபான்மையினரின் அடையாளங்கள் அழிக்கப்படும் என்ற பரவலான அச்சத்தை இந்த சம்பவங்கள் அதிகரிக்கிறது. இந்த இனவாத நடவடிக்கை குறித்து பெரமுனவின் பிரமுகர்கள் எவரும் வாயும் திறக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பின்படி, அந்த பிரதேசத்தில் அதிகமான வாழ்பவர்களின் ஆட்சிமொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதுவே, வடக்கு கிழக்கில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன்படியே, பொதுஜன பெரமுனவினரின் யாழ் கிளை அலுவலகத்தின் பெயர்ப்பலகையும் அமைந்துள்ளது. சிறுபான்மையினரிற்கு எதிரான தமது அணியினரின் நடவடிக்கைகள் குறித்து மூச்சும்காட்டாத மஹிந்த அணியின் தமிழ் பிரதிநிதிகளும், பங்காளிகளும் அறிவிப்பு பலகையையும் கழற்றி வைத்து விட்டு நல்ல பிள்ளைக்கு இருப்பார்களா என சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here