கொட்டகலை தமிழ் மகாவித்தியாலத்தில் சிங்கள அதிபர் நியமிக்கப்பட்டதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!

நுவரெலியா, கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபரின் இடமாற்றத்தை தொடர்ந்து, குறித்த வித்தியாலயத்திற்கு சிங்கள அதிபர் ஒருவர் நியமிக்கபட்டமையினால் பாடசாலையின் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (21) காலை 8 மணி அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டமையினால், நுவரெலியா – ஹட்டன் போக்குவரத்து சுமார் 2 மணித்தியாலங்கள் தடைப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலைக்கு சிங்கள அதிபர் வேண்டாம் எனவும், முன்னர் இருந்த அதிபரை மீண்டும் நியமிக்குமாறு கோரியும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், நுவரெலியா வலய கல்வி பணிமனையின் பணிப்பாளர் அமரசிறி பியதாசவுடன் தொலைபேசி முலம் தொடர்பு கொண்டு குறித்த அதிபரை இடமாற்றம் செய்யுமாறும், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு தமிழ் அதிபர் ஒருவரை நியமிக்குமாறும் வலியுறுத்தினார்.

இதனை அடுத்து தமிழ் அதிபர் ஒருவரை நியமிப்பதாக வாக்குறுதி வழங்கியதை அடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here