மகிந்த ஆட்சிக்கு வந்தால் நாடு வறுமைக்குள் தள்ளப்படும்: முன்னாள் ஆளுனர் எச்சரிக்கை!

மகிந்தராஜபக்ஸ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு வறுமைக்குள் தள்ளப்படும் ஆபத்து உள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ரோகித போகொல்லாகம எச்சரித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசத்திற்கான முதலாவது கூட்டம் நேற்று (20) மாலை மட்டக்களப்பு கிரான்குளத்தில் நடைபெற்றது.

கிரான்குளத்தில் உள்ள தனியார் விடுதியில் சஜித் பிரேமதாச ஜெனரேசன் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடைபெற்றது.

சஜித் பிரேமதாச ஜெனரேசன் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எம்.ஜெகவண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே, போகொல்லாகம இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கடந்த காலத்தில் கடத்தல்கள், காணாமல்போதல்கள், வெள்ளைவான் கலாசாரங்களை தமிழ் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது. நாங்கள் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்காவிட்டால் மீண்டும் அந்த யுகம் ஏற்படுவதை தடுக்க முடியாமல்போகும்.

மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டின் வளங்கள் சூறையாடப்பட்டதுடன் திறைசேரியும் வெறுமையாக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தபோதே இந்த நிலை மாற்றப்பட்டது. மீண்டும் அந்த ஆட்சியேற்படுமானால் இந்த நாடு மீண்டும் வறுமை நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து காணப்படுகின்றது. அந்த நிலையேற்படுவதற்கு அனுமதிக்ககூடாது.

இந்த நாட்டின் வளங்களை சூறையாடுபவர்கள் தேவையில்லை. கொள்ளையர்கள் தேவையில்லை. இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றாக நேசிக்ககூடிய, நேர்மையான முறையில் செயற்படக்கூடிய தலைவர் ஒருவரே தேவை. அந்த தலைமைத்துவமே இன்று சஜித் பிரேமதாச என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மங்கள செனவிரட்ன, முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சுவர்ணராஜா உட்பட பெருமளவான ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here