காணியற்றவர்களிற்கு யாழில் தனியார் மூலம் மேற்கொள்ளும் வீட்டுத்திட்டத்தில் சர்ச்சை!

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தனது சொந்த நிலம், நிதியில் அமைத்த பாராட்டுப் பெற்ற வீட்டுத்திட்டம்

யாழ் மாவட்டத்தில் அரசாங்க அதிபர், உடுவில் பிரதேச செயலகம் என்பன இணைந்து செல்வந்தர் ஒருவர் ஊடாக மேற்கொள்ளப்படும் வீடமைப்பு திட்டம் ஒன்று தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த வீடமைப்பு திட்டம், காணியற்ற மக்களின் வறுமை நிலையை பயன்படுத்தி, அவர்களின் அடிப்படை உரிமைகளையே பறிக்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சுமத்தி வருகிறார்கள்.

செல்வந்தர் ஒருவரால் கொள்வனவு செய்யப்படும் காணிக்குள், காணியற்ற மக்களிற்கு வீடமைத்து கொடுப்பதற்கான நிதியை மொத்தமாக செல்வந்தரிடம் மாவட்ட செயலகம் வழங்குகிறது. எனினும், குடியிருப்பாளரிற்கு ஐந்து வருடத்திற்கு காணி உரிமையாளர் வழங்கமாட்டார். குடியிருப்பாளரில் திருப்தியடையவில்லையென்றால் அவரை அங்கிருந்து வெளியேற்றும் உரித்தையும் செல்வந்தர் பெற்றுள்ள அநீதியான நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்பக்கத்திடம் பாதிக்கப்பட்ட மக்கள் பல தகவல்களை வெளியிட்டனர். இது தொடர்பான போதுமான ஒளி, ஒலி, காகித ஆவணங்களை தமிழ்பக்கம் பெற்ற பின்னர், இந்த தகவல்களை வெளியிடுகிறது.

யாழில் வீடமைத்து கொடுத்த கொடை வள்ளல்

யாழ்ப்பாணத்தில் சில காலத்தின் முன்னர் தனியார் ஒருவர் அமைத்துக் கொடுத்த வீடமைப்பு திட்டம் பற்றிய தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

யாழிலுள்ள ராஜா பிளாசா உரிமையாளரே அந்த வீடமைப்பு திட்டத்தை உருவாக்கினார். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தனது நிலம், நிதியில் 15 வீடுகளை அமைத்து ஏழை மக்களிற்கு வழங்கியிருந்தார். அது எல்லோராலும் பாராட்டப்பட்ட நடவடிக்கையாக அமைந்தது.

ஆனால், அதே வர்த்தகர் மேற்கொள்ளும் அடுத்த இரண்டு வீட்டுத் திட்டங்களும் கடுமையான அதிருப்தியை சம்பாதித்துள்ளது. இது தொடர்பில், சமூக நீதிக்கான அமைப்பு என்ற குழு துண்டுப்பிரசுரமும் அந்த பகுதியில் வெளியிட்டிருந்தது.

என்ன நடக்கிறது?

காணி அற்ற மக்களிற்கு வீடமைப்பு திட்டம் மேற்கொள்வதென்ற திட்டத்தில் இது நடைபெறுகிறது. ராஜா பிளாசா உரிமையாளர் காணிகளை கொள்வனவு செய்வார். அந்த வீடுகளிற்கான நிதியை மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, பிரதேச செயலகம் ராஜா பிளாசா உரிமையாளரிற்கே வழங்கும்.

தனது சொந்த நிதியில் உருவாக்கிய வீட்டுத் திட்டத்தை தவிர, புன்னாலைக்கட்டுவனில் மேலும் ஒரு வீடமைப்பு திட்டத்தை அரச நிதியில் பூர்த்தி செய்துள்ளதுடன், இன்னொரு வீடமைப்பு திட்டத்திற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

நாடு முழுவதும் உள்ள வீடமைப்பு திட்ட சட்டங்களிற்கமைய, சொந்த காணி இல்லாதவர்களிற்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதில்லை. இதனால் ஏராளமாக ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வாக, மாற்று நடைமுறையொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், புன்னாலைக்கட்டுவன் வீட்டு திட்டத்தில் அது நடக்கவில்லை.

தனியாரால் காணி வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அரசாங்கத்தில் வழங்கப்படும் நிதியிலேயே வீடமைக்கப்படுகிறது. ஆனால், அந்த காணிகளின் உறுதி, குடியிருப்பாளர்களிற்கு வழங்கப்படுவதில்லை. ஐந்து வருடத்தின் பின்னரே குடியிருப்பாளர்களிற்கு காணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் குடியிருப்பாளர்களின் நடைமுறையில், காணிக்கொள்வனவாளரான வர்த்தகரிற்கு திருப்தியில்லையெனில், அவர்களை வெளியேற்றும் உரித்தையும் வர்த்தகர் கொண்டிருக்கிறார். இப்படி வெளியேற்றப்பட்ட குடும்பமொன்று தமிழ்பக்கத்திடம் தமக்கு நேர்ந்த அநீதியை சுட்டிக்காட்டியது.

இது மிகப்பெரிய அநீதியாகும்.

வீட்டுத்திட்டங்களிற்காக பணம் ஒதுக்கும் சந்தர்ப்பங்களில், பெரும்பாலான குடியிருப்பாளர்கள் சட்டபூர்வமற்ற வழிகளிலேயே மணலை பெறுகிறார்கள். ஏனெனில் குடாநாட்டில் மணல் தட்டுப்பாடு பெரியது. எனினும், மேற்படி வீட்டுத்திட்டத்தின் பணிகளிற்கு மணல் உள்ளிட்ட வளங்களை எந்த தடையுமின்றி பெறும் ஏற்பாட்டை மாவட்ட செயலகம் வழங்கியுள்ளளது.

வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, யாழ் அரசாங்க அதிபர், உடுவில் பிரதேசசெயலர் ஆகியோரின் நேரடி தொடர்பில் இந்த வீட்டுத்திட்டங்கள் செயற்படுத்தப்படுகிறது.

அரச நிதியில் அமைக்கப்படும் இந்த வீட்டுத்திட்டங்களிற்கு ராஜா பிளாஸா வீட்டுத்திட்டம் என்றே பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளது.

அரச நிதியில் வீடுகள் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்ட முதலாவது வீட்டுத்திட்டத்தில் சில வீடுகள் முழுமையடையவில்லையென குடியிருப்பாளர்கள் சிலரிடம் முறைப்பாடுகளும் உள்ளன.

அண்மையில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் த.சித்தார்த்தன் எம்.பி இந்த விடயத்தை எழுப்பியபோது, காணி ஆவணங்கள் மக்களிடமே கையளிக்கப்படுகிறது, அது குறித்து யாராவது முறைப்பாடுகள் இருந்தால் தம்மிடம் முறையிடலாமென மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார். எனினும், அந்த மக்களிடம் இன்னமும் உறுதிகள் கையளிக்கப்படவில்லை.

கடந்தவாரம் யாழ்ப்பாணம் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த வீட்டுத்திட்டத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார். இந்த குடியிருப்பு திட்டத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை ஏற்படுத்தவா பிரதமர் அங்கு அழைத்து செல்லப்பட்டார் என்ற விமர்சனம் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here