காலா என் தந்தையின் கதை; ரஞ்சித் மறுக்கிறார்: சாடும் காலா சேட்டின் மகள்

காலா ரஞ்சித் படமா ரஜினி படமா என்ற வாதவிவாதங்கள் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், காலா எனது தந்தையைப் பற்றிய கதை என இன்னொருபுறம் சத்தமில்லாமல் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார் விஜயலட்சுமி நாடார்.

யார் இவர் என்கிறீர்களா?. இவர்தான் மும்பையில் காலா சேட் என்றழைக்கப்பட்ட திரவியம் நாடாரின் மகள்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக விஜயலட்சுமி தனது முகநூலில் ஒரு நீண்ட பதிவை இட்டிருந்தார்.

அந்தப் பதிவு: நான் ஒரு பத்திரிகையாளர். எனது சகோதரர் ஜவஹர் நாடாரும் ஒரு பத்திரிகையாளர்தான். ஊடகம் எங்கள் துறை. ஆனால், நாங்கள் சார்ந்த அந்தத் துறைக்கு எங்கள் மீது சிறிதும் நம்பிக்கையில்லை.

கடந்த ஆண்டும் மார்ச் மாதம், ரஜினிகாந்த் நடிப்பில் காலா என்ற திரைப்படம் உருவாகிறது என்று தெரிந்தபோது; அது என் தந்தையின் வாழ்க்கையைப் பற்றிய கதை என அறிந்தபோது நான் துள்ளிக்குதித்தேன். மகிழ்ச்சி, அதிர்ச்சி, அச்சம், பேரானந்தம் என என்னைப் பல்வேறு உணர்வுகள் ஆட்கொண்டன.

ஒரு தமிழ் ஊடகம் வாயிலாகவே காலா எனது தந்தையின் கதை என்பதை முதன்முதலில் தெரிந்துகொண்டேன். ஆனால், பல்வேறு ஊகங்களும் எழுந்தன. இறுதியில் ஊடகங்கள் காலா படம் ஹாஜிமஸ்தான் வாழ்க்கை சார்ந்தது என முடிவு செய்தனர். சர்ச்சைகள் சூழ ரஞ்சித் தலையிட்டார். காலா திருநெல்வேலியில் இருந்து மும்பை வந்து டான் ஆன ஒரு நபரின் கதை என்றார்.

70, 80 காலகட்டங்களில் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு வந்த டான்கள் மூவர். வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான் மற்றும் எனது தந்தை திரவியம் நாடார். இந்த மூவரில் எனது தந்தை மட்டுமே திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

அப்போது காலா பற்றி ஒரு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு நான் விரிவான பேட்டியளித்தேன். டீஸரின் ஒவ்வொரு காட்சியும், ட்ரெயிலரும் ஏன் படத்தின் முதல் பாடலும்கூட காலா என் தந்தையைப் பற்றியது என்பதை வலுவாக உணர்த்துவதாகவே இருந்தது.

ஒருகட்டத்தில் நான் ரஞ்சித்தையே தொடர்பு கொண்டேன். ஆனால் அவரோ காலா எனது தந்தையின் கதை அல்ல கற்பனைக்கதை எனக் கூறி நழுவிவிட்டார். ஆனால், எனக்கு துளியும் சந்தேகம் இல்லை. காலா எனது தந்தையின் கதை என்பதை நம்புகிறேன். இது குறித்து ஒருசில தமிழ் ஊடகங்களே செய்தி வெளியிட்டன. ஆங்கில ஊடகங்கள் மறுத்துவிட்டன. ஆனால், என் சகோதரர் ரஜினிகாந்த் மீது ரூ.100 கோடி கோரி அவதூறு வழக்கு தொடர்ந்தபோது எல்லா ஊடகங்களும் எங்களை துரத்தத் தொடங்கின. அதுவரைக்கும் எங்களை நம்பாத ஊடகங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வந்தது. ஒரு முக்கியப் பாடத்தைக் கற்றுக் கொண்டோம்.

கடந்த 2 நாட்களில் என்னை ஏராளமான பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு வருகின்றனர். எனக்கு இந்த ஊடக பலம் 6 மாதங்களுக்கு முன்னதாகவே இருந்திருந்தால் காலா எனது தந்தையைப் பற்றிய கதைதன் என்பதை ரஞ்சித்தே ஒப்புக்கொள்ள செய்திருப்பேன்.

இப்போது ரஞ்சித்தை நீதிமன்றத்துக்கு இழுத்து உண்மையை ஒப்புக்கொள்ள வைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஒரு நெடிய போராட்டத்தை எடுத்திருக்கிறோம்.

நன்றி. இவ்வாறு விஜயலட்சுமி தெரிவித்திருக்கிறார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here