கொதிக்கும் தாரை தூங்கிக்கொண்டிருந்த நாய் மீது ஊற்றி சாலை அமைத்த தொழிலாளர்கள்!

ஆக்ராவில் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலர் கொதிக்கும் தாரை ஊற்றியதில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த நாய் ஒன்று பரிதாபமாக துடிதுடித்து இறந்தது.

அந்த நாயின் அலறல் கேட்டும்கூட தொழிலாளர்கள் இரக்கமின்றி சாலையை அமைத்ததாக அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். சம்பவத்தை நேரில் பார்த்ததாகக் கூறும் கோவிந்த் பராசர் என்கிற சமூகநல ஆர்வலர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் மீது புகார் கொடுத்துள்ளார்.

நடந்தது என்ன?

செவ்வாய்க்கிழமை இரவு ஆக்ராவின் ஃபதேபாத் பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. பணியில் இருந்த ஊழியர்கள் சாலையில் கொதிக்கும் தாரை ஊற்றியுள்ளனர். தார் வழிந்துசென்று சாலையோரத்தில் படுத்திருந்த நாயின் பின்னங்கால்களில் ஒட்டிக்கொண்டது. நாய் நகர முடியாமல் வேதனையில் அலறியிருக்கிறது. ஆனால், கட்டுமான ஊழியர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் சாலையை அமைத்திருக்கின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிவாசிகள் சாலைப் பணியைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த சமூகநல ஆர்வலர் பராசர் போலீஸில் புகார் கொடுத்ததுடன் சாலை அமைக்கும் இயந்திரத்தையும் மக்கள் உதவியுடன் சிறைபிடித்தார்.

இது குறித்து அவர், ‘அந்த நாயின் நிலைமை என்னைக் கவலை அடையச் செய்தது. அதனால், நாயை புதைக்க வேண்டும் என எண்ணினேன். சாலையை பெயர்த்தெடுத்து நாயின் உடலைக் கைப்பற்றி புதைத்தோம். சாலைப் பணியாளர்களுக்கும் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என எண்ணினேன். அதன் காரணமாகவே வழக்கு தொடர்ந்தேன்’ என்றார்.

பொதுப்பணித்துறை பொறியாளர் நரேஷ்குமார், தார் சாலை அமைக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றிருந்த ஆர்.பி. இன்ப்ராவென்சூர் லிமிடெட் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால், கட்டுமான நிறுவனமோ இரவில் இருளில் நாய் சாலையோரம் படுத்திருந்தது தெரியாத காரணத்தாலேயே தாரை தொழிலாளர்கள் ஊற்றியுள்ளனர் என்கிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here