கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்களிடம் இருந்து பாதுகாப்பு கோரும் அதிபர்

கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேரால் தனக்கும், பாடசாலை நிர்வாகத்திற்கும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது, அவர்களினால் ஏற்படும் ஆபத்தை தடுக்க பொலிசார் தலையிட வேண்டுமென பாடசாலை அதிபர் எம். ஞானசம்பந்தர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவில் இன்று (13) புதன்கிழமை இந்த முறைப்பாட்டை அவர் பதிவு செய்துள்ளார்.

“கடந்த 6ஆம் திகதி கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஒழுங்கக் கட்டுப்பாட்டு ஆசிரியர் நா.பிரதீபன் சிலரால் தாக்கப்பட்டார்.

அந்த ஆசிரியரின் முறைப்பாட்டின் அடிப்படையில் க.கொ.த. உயர்தர மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார்.

அந்த மாணவர் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை 25 மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

பாடசாலையின் ஒழுக்க நெறிகளை மீறி 25 மாணவர்களும் செயற்பட்டுள்ளனர். அவர்கள் 25 பேருக்கும் எதிராக பாடசாலை நிர்வாகத்தால் ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே 25 மாணவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகள் முன்னெடுக்கவேண்டும். அவர்களால் எனக்கும் பாடசாலை நிர்வாகத்துக்கும் ஏறபடும் எதிர்விளைவுகள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் பாதுகாப்பு வழங்கவேண்டும்“ என்று கல்லூரி அதிபரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here