நீலப்படம் பார்க்கும் போது வெளியேறும் திரவம் ஆபத்தானதா?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 17


எம்.கனிஷ்டஸ் (20)
மட்டக்களப்பு

நீலப்படம் பார்க்கும்போது, உணர்வு உச்சமடைந்து, ஆணுறுப்பிலிருந்து ஒரு வகை திரவம் வெளியேறுகிறது. ஆனால் அது விந்து அல்ல. அதனால் ஏதாவது பாதிப்பு உள்ளதா?

டாக்டர் ஞானப்பழம்: ஆணுறுப்பு என்பது இரப்பர் குழாயைப் போல உருளை வடிவமானது. அதனுள் மூன்று உருளை வடிவக் குழாய்கள் உண்டு. ஒவ்வொன்றும் விரிவடையும் தன்மையுள்ள திசுக்களால் ஆனவை. இந்த மூன்று உருளைகளும் இணைந்துதான் ஒரு உருளையாக வெளிப்புறத்தில் நமக்குத் தெரிகிறது. இதன் கூம்பு போன்ற முனைப் பகுதியை ஆண்குறியின் தலை என்கிறோம். இந்த முனைப் பகுதியில் ஆணுறுப்பின் தோல் ஒட்டாமல் இருக்கிறது. முனைப் பகுதித் தோலின் உட்புற சுரப்பிகளில் டீன் ஏஜ் பருவத்தில் சில கசிவுகள் ஏற்படத் தொடங்கும்.

அவை முனைப் பகுதியின் தோலுக்கு உட்புறத்தில் சீஸ் போன்ற பிசுபிசுப்புடன் திரண்டு நிற்கும். அதை ஸ்மெக்மா என்பர். அதை அவ்வப்போது சுத்தம் செய்யவில்லை என்றால் கிருமி பாதிப்பு ஏற்படும்.

போர்னோ படம் பார்க்கும் இளைஞர்களின் உடலில் இயற்கையாக சில மாற்றங்கள் ஏற்படும். அது ஏற்படா விட்டால்தான் பிரச்சனை.

அத்தகைய படங்களைப் பார்க்கும்போது ஆணுறுப்பின் உள்ளே உள்ள உருளைகளில் இரத்தம் நிரம்புகிறது. அதனால் ஆணுறுப்பில் விரைப்பு ஏற்படுகிறது. விரைப்பின் போது ஆணுறுப்பு சுமார் மூன்று முதல் ஐந்து அங்குலம் நீளமாகிறது. உடலில் ஓடும் இரத்த ஓட்ட அமைப்பு அந்த நேரத்தில் இரத்தத்தை ஆணுறுப்பை நோக்கித் திருப்புவதால், அந்த மாற்றம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் பாலுறவுக்கான லூப்ரிகன்ட் திரவங்கள் சுரக்கின்றன.

நீலப்படம் பார்த்த போது, உங்கள் ஆணுறுப்பின் வழியாக வெளியேறியது விந்து அல்ல. லூப்ரிகன்ட் மட்டுமே. அது நிறமற்றதாகவும் எண்ணெய் போன்று கொழகொழப்பாகவும் இருக்கும். அதற்காக அஞ்ச வேண்டியது இல்லை. மீண்டும் நாம் வேறு வேலைகளில் மூழ்கும்போது, அது தானாகவே நின்றுவிடும்.

ஆண்- பெயர் குறிப்பிடவில்லை (41)
வவுனியா

நான் பல்கலைகழகத்தில் படிக்கும் காலத்தில் ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் வந்தது. அதன் பின்னர் இன்றுவரை அதில்தான் ஆர்வமாக உள்ளது. திருமணத்தில் ஆர்வமில்லாததால் செய்து கொள்ளவில்லை. திருமணம் செய்யாததால் சமூகத்தில் பலர் கேள்வி கேட்பார்கள், நக்கல் அடிப்பார்கள். எனக்கு அதனால் ஒரு பிரச்சனையுமில்லை. ஆனால், அண்மையில் ஒரு பிரச்சனை காரணமாக எனது எதிரிகள் எனது படத்துடன், ஓரினச்சேர்க்கையாளர் என முகப்புத்தகத்தில் பகிரங்கமாக பிரசுரித்திருந்தனர். இதனால் உண்மையில் பெரிய அவமானமாக கருதுகிறேன். ஓரினச்சேர்க்கை தவறானதா? இதிலிருந்து விடுபடலாமா?

டாக்டர் ஞானப்பழம்: ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் கவரப்பட்டுக் காதல்கொண்டு உறவில் இணைவதே ஓரினச்சேர்க்கை. இதற்கும், ஆண்-பெண் உறவுக்கும் பெரியளவில் வேறுபாடில்லை. உணர்வு ரீதியாக இரண்டும் ஒன்றுதான். ஓரினச்சேர்க்கை குறித்து சமூகத்தில் பல தவறான கருத்துகள் உலவுகின்றன. இது ஒரு மனநோய், இது இயற்கைக்கு முரணானது, இவர்களுக்கு ஹெச்.ஐ.வி வரும் – இப்படிப் பல கருத்துகள்!

வளர்ந்து வரும் நாடுகளில்தான் ‘ஓரினச்சேர்க்கை போன்ற இயற்கைக்கு முரணான உடலுறவுகளில் ஈடுபடுவது குற்றச்செயல், இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனை கொடுக்கலாம்’ என்கிற சட்டங்கள் உள்ளது. இதில் வேடிக்கையென்னவென்றால், இதெல்லாம் இங்கிலாந்தின் கொலனியாக இருந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்கள். இன்று இங்கிலாந்திலேயே அப்படியொரு சட்டமில்லை.

ஓரினச்சேர்க்கை என்பது, மனநோய் கிடையாது. அமெரிக்க உளவியல் சங்கம், 1978ம் ஆண்டே மனநலப் பிரச்சனைகள் பட்டியலிலிருந்து இதை நீக்கிவிட்டது. உலகம் முழுவதும் இருக்கும் மருத்துவர்கள், ‘இது இயல்பானதுதான்’ என்றும், ‘மாற்று உடலுறவு’ (Alternative Sexual Orientation) என்றும் கூறுகிறார்கள். உலகின் பல நாடுகளில் ஓரினச்சேர்க்கையை அங்கீகரித்திருக்கிறார்கள்.

ஹெச்.ஐ.வி என்பது உடலுறவு கொள்ளும் இருவரில், யாராவது ஒருவருக்கு இருந்தால்தான் மற்றவருக்குப் பரவும். ஓரினச்சேர்க்கைக்கும் ஹெச்.ஐ.விக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. இதுவரை நடந்திருக்கும் மருத்துவ ஆராய்ச்சியில், ஓரினச்சேர்க்கையைவிட சாதாரண பாலியல் உறவு மூலமாகவே அதிகம் பேருக்கு ஹெச்.ஐ.வி பரவியிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஓரினச்சேர்க்கைக்கும் நாட்டில் நடக்கும் குற்றச் சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இயல்பான பாலியல் உணர்ச்சிபோல, ஓரினச்சேர்க்கையும் இயற்கையான பாலியல் உந்துதல் தான். ஓரினச் சேர்க்கையாளர்களைக் குற்றவாளிகளைப் போலப் பார்ப்பது முற்றிலும் தவறு.

பாலியல் உணர்வு என்பதே தனிநபர் விருப்பம் சார்ந்தது. பொது பாதிப்பு இல்லாதவரையில் அதில் எவரும் தலையிட முடியாது. மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளிடமும் ஓரினச்சேர்க்கை இருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர்கள் யாருடைய தூண்டுதலாலும் இதில் ஈடுபடுவதில்லை. அது அவர்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய உணர்வு. இயற்கையில் அனைத்தும் ஒரே மாதிரி இருக்காது, வேற்றுமைகள், முரண்கள் இருக்கத்தான் செய்யும். இதைத் தவறென்றோ, குற்றமென்றோ சொல்லமுடியாது.

ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்லது அவர்களின் பெற்றோர், ‘இதை மாற்ற முடியுமா, இதற்குச் சிகிச்சைகள் இருக்கின்றனவா’ என்று மருத்துவர்களிடம் கேட்கிறார்கள். இது நோயாக இருந்தால்தானே சிகிச்சையளிக்க முடியும்!

ஓரினச்சேர்க்கை உணர்வு ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஒருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்கான காரணங்களாக நான்கு கோட்பாடுகள் நம்பப்பட்டன. மரபணுதான் காரணம் என்பது ஒரு கோட்பாடு. இதை ஜெனடிக் தியரி (Genetic Theory) என்பார்கள். ஹோர்மோன் கோளாறுதான் காரணம் என்கிறது இரண்டாவது கோட்பாடு. இதை ஹோர்மோனல் தியரி (Hormonal Theory) என்பார்கள். சிறு வயதில் பார்த்த, அனுபவித்த சம்பவங்கள்தான் காரணம் என்பது மூன்றாவது கோட்பாடு. இதை சைக்கோ அனலிடிகல் தியரி (Psychoanalytic Theory) என்பார்கள். பத்து பேர் இருக்கும் இடத்தில், எட்டு பேரின் குணாதிசயம் மற்ற இரண்டு பேருக்கும் தொற்றிக்கொள்ளும் என்பது நான்காவது கோட்பாடு. இதை, பியர் இன்ஃப்ளுயென்ஸ் தியரி (Peer Influence Theory) என்று சொல்வார்கள். ஆனால், இவற்றில் எந்தக் கோட்பாடும் இதுவரை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

ஓரினச்சேர்க்கை என்பது நோயல்ல. ஆகவே இதற்குச் சிகிச்சையும் கிடையாது. இருபால் சேர்க்கையாளர்களுக்குச் சமூகத்தில் எந்த அளவுக்கு உரிமையும் மரியாதையும் இருக்கிறதோ, அதே அளவுக்கு உரிமையும், மரியாதையும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் இருக்கிறது. அந்த புரிதல் நமது சமூகத்தில் இல்லை. சமூகத்தில் அந்த புரிதல் இல்லையென்பதற்காக, நீங்கள் உங்கள் உரிமைகளை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும். எதற்கும் அஞ்சாமல் தலைநிமிர்ந்து வாழுங்கள்.

நீங்கள் ஓரினச்சேர்க்கையாளராக இருக்க விரும்பவில்லையென்றால், முறைப்படியான ஒரு உளநல மருத்துவரை சந்தியுங்கள்.

முந்தைய பாகத்தை படிக்க: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 16

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here